திங்கள், 17 ஆகஸ்ட், 2020

இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கிடைக்கும் . அப்புறம் ஏன் இந்த பாஸ் நடைமுறை?

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: வழங்கும் முறை  தமிழகத்தில் அமலுக்கு வந்தது

தினத்தந்தி : சென்னை, ; தமிழகத்தில் விண்ணப்பிக்கும்  அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் என்ற அறிவிப்பு இன்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கில் மிக கடுமையாக பின்பற்றப்படும் நடவடிக்கையாக இ-பாஸ் நடைமுறை பார்க்கப்பட்டது. மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு முதலில் அறிவித்தது.



அதனைத்தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மருத்துவம், திருமணம், இறப்பு போன்றவற்றுக்கு தவிர வேறு காரணங்களுக்காக விண்ணப்பித்தால் இ-பாஸ் கிடைப்பதில்லை என்பதே பெரும்பாலானோரின் குற்றச்சாட்டாக இருந்தது.

அதேவேளை பணம் வாங்கிக்கொண்டு இ-பாஸ் வழங்கும் வேலையில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள் சிலர் சமீபத்தில் கைது செய்யப்பட்டதும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் இ-பாஸ் நடைமுறையில் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். எப்படி விண்ணப்பித்தாலும் இ-பாஸ் கிடைக்காது என்பதே மக்களின் எண்ணமாக இருந்தது.  

இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தாலும், தமிழகத்தில் இந்த நடைமுறை தொடரும் என்றே அரசு அறிவித்தது. என்றாலும் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யவேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வந்தன.

இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14-ந்தேதி ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில், “தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே முக்கிய காரணங்களுக்காக மக்கள் தடையின்றி பயணிக்க 17-ந்தேதி (இன்று) முதல் ஆதார் அல்லது ரேஷன் அட்டை விவரங்களுடன் தொலைபேசி எண்ணையும் சேர்த்து விண்ணப்பித்தால் எந்தவித தாமதமும் இல்லாமல் உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்படும். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் விண்ணப்பித்து, இ-பாஸ் பெற்றுக்கொண்டு பயணிக்கலாம்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் உடனுக்குடன் கிடைக்கும் என்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இ-பாஸ் தளர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வந்தது.  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் இ-பாஸ் தளர்வுகள் அமலுக்கு வந்த நிலையில், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி கிடைக்க தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் வேலைக்குசெல்வோர் இ-பாஸ் கிடைத்த மகிழ்ச்சியில் எவ்வித சிரமின்றி பயணங்களை மேற்கொள்கின்றனர். விண்ணப்பித்துடன் இ-பாஸ் உடனுக்குடன் கிடைத்து விடுவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: