ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

"48 மணி நேரமாக எஸ்பிபி உடல்நிலை... சீராக உள்ளது .. மருத்துவர் சொல்வது என்ன?"

மின்னம்பலம்  ; பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பிளாஸ்மா தெரபி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக எஸ்பிபிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த இரு நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வ ருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு, மருத்துவ உதவி வழங்க அரசு தயாராக இருப்பதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 15) அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை நேரில் சென்று பார்த்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எஸ்பிபியின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.    பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாடகர் எஸ்பிபி பூரண நலம் பெற வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பம். எனவே மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்தோம். எஸ்பிபிக்கு பிளாஸ்மா தெரபி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 48 மணி நேரமாக உயிர்காக்கும் கருவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மற்ற உடல் உறுப்புகள் எல்லாம் சீராக உள்ளது. அவரை தூக்கத்தில் வைத்துள்ளோம், நடுநடுவே நினைவும் வந்து போகிறது. எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது அவருக்கும் தெரியப்படுத்தப்படுகிறது.

கொரோனாவுக்கு அளிக்கப்படும் அனைத்து சிகிச்சை முறைகளும் அவருக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிளாஸ்மா தெரபி, ரெமிடிசிவியர், ஸ்டீராய்டு ட்ரீட்மென்ட், ரத்தம் உறையாமல் இருக்க க்ளக்சேன், பிசியோதெரபி என பல்வேறு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆக்ஸிஜனும் கொடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

-கவிபிரியா

 

கருத்துகள் இல்லை: