என்ன பிரச்னை?
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், கடந்த புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பொதுத்துறை, தனியார் கூட்டு அடிப்படையிலான திருவனந்தபுரம் விமான நிலைய பராமரிப்பு குத்தகையை அதானி குழுமத்துக்கு 50 ஆண்டுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
அந்த விமான நிலையத்தை குத்தைக்கு எடுக்க கேரள அரசு நிறுவனமான கேரளா மாநில தொழிற்துறை வளர்ச்சிக் கழகம் முயன்றபோதும், அதானி குழுமம் குறிப்பிட்ட குத்தகை ஏல விலைக்கு அதிகமாக அது இல்லை என்று கூறி, மாநில அரசை நிராகரித்து விட்டு அதானி குழும நிறுவனத்துக்கு மத்திய அரசு சலுகை காட்டியிருப்பதாக கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) அரசில் அங்கம் வகிக்கும் மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசாக் தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் 6 முக்கிய நகரங்களான லக்னெள, ஆமதாபாத், மங்களூரு, ஜெய்பூர், குவாஹட்டி, திருவனந்தபுரம் ஆகியவற்றில் உள்ள விமான நிலையங்களின் பராமரிப்பை தனியாருக்கு குத்தகைக்கு விடும் முடிவு கடந்த ஆண்டே எடுக்கப்பட்டு அதற்கான நடைமுறைகளும் தொடங்கப்பட்டன.
அந்த 6 நகரங்களுக்கான அதிகபட்ச குத்தகைதாரராக அதானி குழும நிறுவனமே இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இந்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீர் சிங் பூரி, அதானி குழுமம் ஏலமெடுக்க முன்மொழிந்த குத்தகை தொகையை விட 10% அதிகமாக கேரளா குறிப்பிட்டிருந்தால் அதற்கு குத்தகை வழங்க பரிசீலிக்கப்படும் என்று மாநில அரசிடம் முன்பே கூறியிருந்ததாக தெரிவித்தார்.
இந்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே 19,64% அளவுக்கு குத்தகைத்தொகையில் வேறுபாடு காணப்பட்டதால் அதானி குழுமத்துக்கு குத்தகை வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்ததாக ஹர்தீப் சிங் பூரி கூறுகிறார்.
மாநில அமைச்சரவை அவசர ஆலோசனை
இந்த நிலையில், மத்திய அமைச்சரவையின் முடிவு தொடர்பாக கடந்த வியாழக்கிழமை முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் மாநில அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது.
இதைத்தொடர்ந்து, விமான நிலைய குத்தகை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அதானி குழுமத்துக்கு விமான நிலைய குத்தகையை ஒப்படைக்க தடை விதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, இதே விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தை கேரள அரசு அணுகியபோது, மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான பிரச்னை தொடர்பான வழக்குகள், அரசியலமைப்பின் 131 விதியின்படி வருவதால் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகிய கேரள அரசின் கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், மீண்டும் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு பிரச்னைக்கு தீர்வு காணுமாறு உத்தரவிட்டது.
இதனால் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்த மனு, விசாரணையின்றி நிலுவையில் இருந்த நிலையில், தற்போது இடையீட்டு மனுவை கேரள அரசு தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, மத்திய அமைச்சரவையில் அதானி குழுமத்துக்கு விமான நிலைய குத்தகை வழங்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தனது புதிய மனுவில் முறையிட்டுள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தில் தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளாவின் கொச்சியில்தான் தனியார்-பொதுத்துறை கூட்டுடன் விமான நிலைய பராமரிப்பு, தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டதை தமது டிவிட்டர் பக்கம் வழியாக நினைவுகூர்ந்தார்
மேலும், கேரள அரசின் நீதிமன்ற முறையீடு விவகாரத்தில், உச்ச நீதிமன்றமோ, உயர் நீதிமன்றமோ இதுவரை தடை ஏதும் பிறப்பிக்கவில்லை என்றும் ஒருவேளை, தீர்ப்பு கேரள அரசுக்கு சாதகமாக வந்தால் குத்தகை மற்றும் ஏல நடைமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு பழையபடி விமான நிலைய ஆணையத்தாலேயே பணிகள் நிர்வகிக்கப்படும் என்றும் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக, திருவனந்தபுரம் தொகுதி மக்களவை காங்கிரஸ் உறுப்பினரான சஷி தரூர், இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியுடன் எனது கட்சியினர் ஆதரவாக இருந்தாலும், எனது பார்வையை அவர்கள் முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
"என்னைப்பொருத்தவரை, தனியார்-பொதுத்துறை கூட்டு நடவடிக்கைகளுக்கு எப்போதுமே நான் ஆதரவானவன் என்றும் ஷசி தரூர் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பது காங்கிரஸ் கட்சியினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக