Kalai Selvi : அடுத்தவர்க்கும் தெரியப்படுத்துங்கள் ! தமிழக உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக் கழகங்களும் கல்லூரிகளும்தாம் 1950, 1960களில் திராவிட இயக்கத்தின் நாற்றங்கால்களாக திகழ்ந்தன. அதன் தொடர்ச்சியாக 1967-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு மாநிலமெங்கும் நகரம், சிறுநகரங்களை மையப்படுத்தி அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்துவந்த உயர்கல்வி கிராம மாணவர்களுக்கு அதன்பிறகே கைக்கு எட்ட ஆரம்பித்தது இன்றைக்குத் தமிழகத்தில் இயங்கிவரும் 91 அரசுக் கல்லூரிகளில் ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பெரியார், அண்ணா, காமராஜரின் பெயரில் தொடங்கி வைக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சி நடந்த 1969-1974 வரையிலான காலத்தில்தான்.
சமூகநீதியைச் சட்டரீதியாக உறுதிப்படுத்த கல்வி, வேலை வாய்ப்பைவிடச் சிறந்த தளம் வேறு இல்லை என்பதை கருணாநிதி நன்கு உணர்ந்திருந்தார். அதேநேரம் அறிவியல், கலை, சட்டம், மருத்துவம், வேளாண்மை, நிதி மேலாண்மை, வணிகம், கல்வியியல் படிப்புகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் நுழைவதற்கான இட ஒதுக்கீட்டை விரிவாக்கி அரசுக் கொள்கையையும் மாற்றினார்.
ஆலோசனைக்கு மதிப்பு. கல்வித் துறை மட்டுமின்றி, தமிழக வளர்ச்சிக்கும் கலைஞர் கருணாநிதியின் ஜனநாயக அணுகுமுறை முக்கியக் காரணமாக இருந்தது. அறிவார்ந்த மனிதர்களின் ஆலோசனைகள் அவருக்குக் கூடுதல் பலமாக அமைந்தன. அதேபோல அனுபவம் வாய்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளும் அவருக்குப் பக்கபலமாக இருந்தனர்.
பிரபல கல்வியாளர், யுனெஸ்கோ அமைப்பின் துணைத் தலைவராக இருந்து தமிழகத்துக்கும் பெரும் தொண்டாற்றியவர் மால்கம் ஆதிசேஷையா. 1971-ல் அவர் தோற்றுவித்த சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சமூகப் பொருளாதார ஆய்வுகள் கலைஞர் கருணாநிதிக்குக் கைகொடுத்தன.
தரம் உயர்ந்த மையங்கள்
மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டுமே பல்கலைக்கழகங்களில் படிக்க முடியும் என்றிருந்த நிலையை மாற்ற 1972-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்பு மையங்களைத்
திருச்சி, கோவையில் கலைஞர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இதன்மூலம் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் உயர் ஆராய்ச்சிகளில் ஈடுபட முடிந்தது. 1982-ல் இந்த மையங்கள் பாரதிதாசன், பாரதியார் பல்கலைக்கழகங்களாக மேம்படுத்தப்பட்டன.
கோவை வேளாண் கல்லூரியை, ஆசியக் கண்டத்திலேயே முதல் வேளாண்மைப் பல்கலைக்கழகமாக 1971-ல் முதல்வர் கருணாநிதி மாற்றியமைத்தார். அதன் உறுப்புக் கல்லூரிகள் தமிழகமெங்கும் தொடங்கப்பட்டு, மக்களின் அடிப்படை வாழ்வாதாரமான வேளாண் ஆராய்ச்சிக்கு உரமூட்டினார். வேளாண்மையின் பிரிக்க முடியாத பகுதியான கால்நடை வளர்ச்சிக்கு சென்னை, நாமக்கல்லில் இயங்கிய கால்நடை மருத்துவக் கல்லூரிகளை இணைத்து 1989-ல் நாட்டிலேயே முதல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தைத் தமிழகத்தில் உருவாக்கிய பெருமையும் அவருக்கு உண்டு.
துணிச்சலான முயற்சிகள்
1990-களில் உலகமயமாக்கலின் தாக்கத்தால் தொடக்கக் கல்வியும் உயர் கல்வியும் தனியார்மயத்தின் பிடியில் சிக்கின. அந்தப் பின்னணியில் 1989-ல் மனோன்மணியம்
சுந்தரனார் பெயரில் திருநெல்வேலியிலும், 2000-ல் பெரியார் பெயரில் சேலத்திலும், 2008-ல் திருவள்ளுவர் பெயரில் வேலூரிலும் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட கலைஞர் காரணமாக இருந்தார்.
கல்வியியல் துறையில் தமிழகம் தனிமுத்திரை பதித்ததற்கு கல்வியியல் ஆராய்ச்சிகளும் கல்விக் கொள்கைகளும்தான் காரணம். அவற்றை மேம்படுத்த சென்னையில் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதும் தி.மு.க. காலத்தில்தான்.
இதற்கெல்லாம் மகுடம்போல், மாரத்வடா பல்கலைக்கழகத்துக்கு அண்ணல் அம்பேத்காரின் பெயரைச் சூட்ட அவர் பிறந்த மகாராஷ்ட்ர மாநிலம் மறுத்தது வந்த நேரம் அது. 1997-ல் சென்னையில் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தை கலைஞர் கருணாநிதி துணிச்சலுடன் நிறுவினார். தமிழகத் தென் மாவட்டங்களில் தலித் - ஆதிக்க சாதியினரிடையே வன்முறைகளும் கலவரங்களும் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த கால கட்டத்தில்தான் இதையும் அவர் செய்தார்.
கல்வி மாநில உரிமை
மாநிலக் கல்வி, தொழில் வளர்ச்சியில் அவர் சமரசம் செய்து கொண்டதில்லை. அதன் பயனாக, சர்வதேச மதிப்புமிக்க தேசிய சட்டப் பள்ளி, இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் ஆகியவை திருச்சியிலும், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூரிலும் அமைக்கப்படக் காரணமாக இருந்தார்.
தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து பெறக் காரணமாக இருந்தது மட்டுமல்லாமல், இந்திய மொழிகள் ஆராய்ச்சி மையத்திலிருந்து தமிழைத் தனியாகப் பிரித்து, தனியாகச் சீரிய ஆய்வை மேற்கொள்ள சென்னையில் 2008-ல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நிறுவப்படவும் காரணமாக அமைந்தார்.
1975-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை காலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுப்பட்டியலில் இருந்த கல்வியை, குறிப்பாக, உயர்கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று இறுதிவரை போராடியதும் கல்வித் துறையில் அவரது பங்களிப்பை உயர்த்திப் பிடிக்கின்றன.
கட்டுரையாளர், பாரதிதாசன் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: akilram11@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக