வியாழன், 25 அக்டோபர், 2018

திமுக முன்னாள் மகளிரணி தலைவி நூர்ஜஹான் பேகம் காலமானார்

LR Jagadheesan : ஒடிசலான உருவம். புன்னகை மாறாத முகம். எளிமையான
தோற்றம். நம் அண்டை அயலில் வசிக்கும் பீவியம்மாவைப்போல இயல்பான நடத்தை. அதுதான் நூர்ஜஹான் பேகம்.
திமுக மாநாட்டு மேடைகளிலும் பொதுக்கூட்டங்களிலும் தொடர்ந்து பேசிய அந்த கட்சியின் முன்னணி பேச்சாளர். பகட்டற்ற பேச்சு. ஆனால் அதில் அடுக்கடுக்கான வாதங்களை முன்வைப்பார். ஆண்பேச்சாளர்களின் ஆரவார முழக்கங்களுக்கு மத்தியில் இவரது பேச்சு மெல்லிய பூங்காற்றாய் வித்தியாசமாய் ஒலிக்கும். அதன் எளிமையே அதற்கான தனித்துவத்தை ஏற்படுத்திக்கொடுக்கும். கேட்பவரை கட்டிப்போடும்.
இஸ்லாமிய சமூகத்தில் இருந்து வந்த மிக குறைவான பெண் அரசியல்வாதிகளில் தனக்கென தனித்த இடத்தை உருவாக்கிக்கொண்டவர்.
சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு முழுநேர அரசியலுக்கு இவரை ஈர்த்தது எது?

திமுக என்கிற அரசியல் கட்சியில் முன்னணி மேடைப்பேச்சாளராக உருவாக்கிய சூழலும் காரணிகளும் எவை?
அவரைப்போன்றவர்கள் அரசியலில் சந்தித்த சவால்கள் அவற்றை அவர்கள் எதிர்கொண்டு கடந்துவந்த விதங்கள் குறித்து அவரது அனுபவ கருத்துக்களை பதிவு செய்ய நினைத்திருந்தேன்.
இனி அதற்கான சாத்தியம் இல்லை என்பது வேதனையான செய்தி.
திராவிடர் இயக்கத்துக்கும் இஸ்லாமான தமிழர்களுக்குமான உறவு என்பது கட்சி அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது; மிகவும் ஆழமானது என்பதே இன்றைய தலைமுறையின் பொது புத்தியில் இருந்தும் அறிவுலக, அரசியல் விவாத தளத்தில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டு மறைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கவலையளிக்கும் சூழலில் அதை மறுப்பதற்கான வாழும் உதாரணங்களில் ஒருவரான இவரைப்போன்றவர்கள் மறைவது கூடுதல் வேதனை.
மெரினாவில் அண்ணாசமாதிக்கு அருகே கலைஞருக்கு இடமில்லை என்கிற இந்திய/தமிழக அரசுகளின் கேவலமான முடிவால் எழுந்த கொந்தளிப்பான சூழலில் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞருக்கு அஞ்சலி செலுத்தவந்த நரேந்திர மோடிக்கான தன் எதிர்ப்பைக்கூட நூர்ஜஹான் பேகம் மிகுந்த கண்ணியத்துடனே வெளிப்படுத்தினார். அதுவே அவரது அரசியல் அடையாளமும் கூட.

கருத்துகள் இல்லை: