செவ்வாய், 23 அக்டோபர், 2018

அமைச்சர் ஜெயக்குமார் பாலியல் வன்முறை பதிவு ... தேசிய மனித உரிமை ஆணையம்..

அமைச்சர் - இளம்பெண்: யார் சொல்வது உண்மை?மின்னம்பலம்:  தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், இளம்பெண் தொடர்பான சர்ச்சை வலையில் சிக்கியிருப்பது பற்றித் தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
நேற்று இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ்பாபு, அமைச்சர் ஜெயக்குமார் மீது மத்திய பெண்கள் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் கொடுத்திருக்கிறார்.
அதில், “உதவி கேட்டு வந்த பெண்ணை அமைச்சர் ஜெயக்குமார் பாலியல் வன்முறை செய்திருக்கிறார். இதனால் அந்தப் பெண்ணின் வயிற்றில் கரு வளர, அதைக் கலைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார். இதற்கு அப்பெண் மறுக்க, அவரை மிரட்டியிருக்கிறார் அமைச்சர். அவரது செல்வாக்கால் புகார் கொடுத்தும் அதைக் காவல் துறை பதிவு செய்ய மறுக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேசிய மனித
உரிமை ஆணையம் இந்தப் புகாரை பதிவு செய்து, நடவடிக்கைக்காக அனுப்பியிருக்கிறது.

இதற்கிடையில் சிந்து என்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த முழு சம்பவச் சங்கிலித் தொடரையும் அவரது தரப்பினர் நம்மிடம் மனம்விட்டுப் பேசினார்கள்.
”ராயபுரத்தில் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் அந்தப் பெண். பல வரன்கள் பார்த்தும் ஒன்றும் அமையாததால் குடும்பமே விரக்தியில் இருந்தது. இதையடுத்து சிலர் பேச்சைக் கேட்டு கோவளம் அருகே உள்ள ஒரு முஸ்லிம் சாமியாரிடம் போயிருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் தாயார்தான் அழைத்துப் போயிருக்கிறார்.
பூஜை செய்த சாமியார், பில்லிசூனியம் மாதிரி இருக்கிறது என்றும் அதை அகற்றுவதற்கு நிறைய செலவாகும் என்றும் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக சுமார் ஒன்றரை லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டார். ஆனால் மாதங்கள் பல கடந்தும் பலன் ஏதுமில்லை.
இதனால் கோபமான அந்தப் பெண்ணின் தாயார், ‘நீ செஞ்ச பூஜை பலிக்கலை. அதனால ஒன்றரை லட்சம் பணத்தைத் திரும்பக் கொடு’ என்று கேட்க , அந்த முஸ்லிம் சாமியாரோ முடியாது என்று மறுத்திருக்கிறார்.

அந்தப் பணத்தைத் திரும்ப வாங்க என்ன வழி என்று யோசித்த அந்தத் தாய், ‘நம்ம மீனவ சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் இருக்காரு. அவர்கிட்ட போய் சொல்லிப் பார்ப்போம்’ என்று தன் மகளைக் கூட்டிக்கொண்டு ஜெயக்குமாரின் வீட்டுக்குப் போகிறார்.
அமைச்சரைப் பார்த்து கோவளம் கதையைச் சொல்ல, ‘சரிம்மா நான் பேசி பணத்தைத் திரும்பத் தர ஏற்பாடு பண்றேன்’ என்று சொல்லியிருக்கிறார் அமைச்சர். இந்தக் கோரிக்கைக்காக சில பல முறை தாயும் மகளும் அமைச்சர் வீட்டுக்குப் படையெடுத்திருக்கிறார்கள்.
ஒருநாள் அந்தப் பெண்ணின் போனைத் தொடர்புகொண்ட அமைச்சர் ஜெயக்குமார், ‘உடனே புறப்பட்டு என் வீட்டுக்கு வாம்மா... இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு. இங்கேயே பேசி முடிச்சு பணத்தை வாங்கிக் கொடுத்துடறேன்’ என்று வரச் சொல்லியிருக்கிறார்.
ஆனால் அந்தப் பெண்ணோ, ‘சார்... எங்கம்மா இப்ப வீட்ல இல்ல. நான் மட்டும்தான் இருக்கேன். அதனால வர முடியாது’ என்று மறுத்திருக்கிறார். ஆனால் ஜெயக்குமாரோ, ‘உனக்காக அதிகாரியே வந்திருக்கிறார் வாம்மா’ என அழுத்தம் கொடுக்க, அதுவரை இல்லாத வகையில் தான் மட்டும் தனியே அமைச்சரின் வீடு தேடிப் போயிருக்கிறார் அந்த இளம்பெண்.
அதன்பின்?
அமைச்சரின் வீட்டில் அப்போது யாரும் இல்லை என்றும், தன்னை முன் ஹாலில் அமரவைத்து அமைச்சர் ஜூஸ் கொடுத்து அவரும் குடித்தார் என்றும் சொல்லியிருக்கிறார் அப்பெண். அதுமட்டுமல்ல... ஜூஸ் குடித்த சில நிமிடங்களில் தான் மயங்கிவிட்டதாகவும் அப்பெண் சொல்கிறார். சில மணி நேரங்கள் கழித்து தான் வீட்டுக்குச் செல்லும்போது தனக்கு ஏதோ ஒரு அவலம் நடந்துவிட்டதை உடல் ரீதியாக உணர்ந்துகொண்ட அந்த இளம்பெண், அதை தன் தாயிடம் சொல்லிக் கதறியிருக்கிறார்.
பெற்ற வயிற்றில் பகீர் என்று கத்தி இறங்கினாற்போல் வலிக்க, மீண்டும் அமைச்சர் வீட்டுக்குப் போனார் அந்தத் தாய். ‘என்னங்க என் பொண்ணை இப்படி பண்ணிட்டீங்க?’ என்று ஓலமிட, ’கவலைப்படாதம்மா... நான் பாத்துக்குறேன். நானே கல்யாணம் பண்ணிக்கிறேன். வீடு வாங்கித் தர்றேன். கார் வாங்கித் தர்றேன்’ என்று சமாதானம் செய்து அனுப்பிவைக்கிறார் ஜெயக்குமார்.
அதன் பின் பலமுறை ஜெயக்குமார் அழைக்க, கல்யாணம் பண்ணிக்கிறேன் என்ற அவரது வார்த்தையில் நம்பிய அந்தப் பெண்ணும் கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் போயிருக்கிறார்” என்று நிறுத்திய அந்தப் பெண்ணின் தரப்பினர், திண்டுக்கல் திருப்பத்தை நம்மிடம் கூறினர்.
“ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் ஜெயக்குமார் சில மாத்திரைகள் கொடுப்பதையும் அதை அந்தப் பெண் சாப்பிடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். பிறகுதான் அது கரு உருவாவதைத் தடுக்கும் மாத்திரை என்று அந்தப் பெண்ணுக்கு தெரியவந்திருக்கிறது.
உடனே, ‘என்னை எப்போது கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க?’ என்று அப்பெண் கேட்க, அப்போது ஜெயக்குமாரின் பதிலில் தொனி மாறியிருந்தது. ஆக, தன்னை இவர் திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்று கருத ஆரம்பித்தார் அந்தப் பெண்,
அந்த நேரம்தான் அரவக்குறிச்சி மறுதேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது ஜெயக்குமாரும் அங்கே முக்கிய பொறுப்பாளர். திடீரென ஒருநாள் ஜெயக்குமாரிடம் இருந்து போன். அந்த இளம் பெண் இம்முறை ஒரு முடிவோடு கிளம்பியிருக்கிறார். ஜெயக்குமார் சொன்னபடி திண்டுக்கல் விவேரா கிராண்ட் ஹோட்டலில் 219ஆம் எண் கொண்ட அறை புக் செய்யப்பட்டிருந்தது.
நவம்பர் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை அந்த அறையில் தங்கியிருந்தார்கள் இருவரும். அப்போது வழக்கம் போல் ஜெயக்குமார் மாத்திரையைக் கொடுக்க, ‘மாத்திரை கொடுத்து என்னை ஏமாத்துறே’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட அந்தப் பெண் மாத்திரை சாப்பிடுவது போல் நடித்தார். அதன் பின் சில பல முறை இப்படி நடக்க, மாத்திரையும் போடாமல் விட்டதால் அந்த இளம் பெண் வயிற்றில் கருத்தரித்தது.
இப்போது மீண்டும் தாயும் பெண்ணும் ஜெயக்குமாரிடம் கருத்தரித்த விஷயத்தைச் சொல்ல, அதை கலைக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தியுள்ளார் ஜெயக்குமார். ஆனால், அதை மறுத்து தன்னை திருமணம் செய்துகொள்ள போராடுகிறார் அந்தப் பெண். அதற்குள் குழந்தையும் பிறந்துவிடுகிறது. அரசு மாறிய பிறகு ஜெயக்குமார் மீது புகார் கொடுக்கலாம் என்று காத்திருந்த நிலையில் ஜெயக்குமார் தரப்பினரின் தொடர் மிரட்டலால்தான் இந்த விஷயங்களை வெளியே சொல்லவே அந்தப் பெண்ணும் தாயும் முடிவு செய்தனர்.”
- இதுதான் கோவளம் முதல் திண்டுக்கல் வரை நடந்த கதை என்று கோவையாகச் சொல்லி முடித்தார்கள் அந்த இளம் பெண் தரப்பினர்.
ஆனால், நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “சசிகலா குடும்பத்தினரை எதிர்ப்பதால், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நான் ஏதோ பெண்ணுடன் இருப்பது போன்று கடந்த ஆண்டு மார்ஃப்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை பரப்பினர். அது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சசிகலா குடும்பத்தை முழுமையாக எதிர்ப்பதால், என்னை நேரிடையாக எதிர்க்க முடியாமல், ஆடியோவை மார்ஃப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கு பின்னாடி உள்ளவர்கள் சட்டத்துக்குப் பதில் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன். இந்த ஆடியோ தொடர்பாக வழக்கு தொடர்வேன்.
சசிகலா குடும்பம், தினகரனைச் சார்ந்தோர்தான் இந்த வேலையைச் செய்துள்ளனர். சவால்விட்டுச் சொல்கிறேன், ஆடியோவில் வருவதுபோன்று நான் யாருடனும் பேசியது இல்லை. டி.ஜெயக்குமார் என்று உலகில் நான் மட்டுமா உள்ளேன். களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதி இது. எந்தப் பரிசோதனைக்கும் நான் தயாராக உள்ளேன்” என்று அறிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அமைச்சர் சொல்வது உண்மையா? அந்த இளம்பெண் சொல்வது உண்மையா? விசாரணை நடந்தால் மட்டுமே இது வெளிச்சமாகும்!

கருத்துகள் இல்லை: