வெள்ளி, 26 அக்டோபர், 2018

இஸ்லாமிய சைவம்.. Islamic Vegetarianism உயிர்ப்பலி இல்லா பண்டிகை... கவிஞர் தாமரை

Vegan Muslims Create a New ‘Qurbani’ Sacrifice Tradition With Compassion for Animals
Kavignar Thamarai : ( Festivals without Animal Sacrifice )
உயிர்களைக் கொன்று நாம் உயிர்வாழ வேண்டியதில்லை, அவற்றுக்கும் நம்மைப் போலவே உணர்வுகள், வலி, வேதனை, குடும்பம், ரத்தம், சதை உள்ளன, நாம் வாழ தாவர உணவுகளே போதுமானவை என்பதைப் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். வள்ளுவர் முதல் வள்ளலார் வரை நமக்கும் இந்த மரபு உண்டு. உயிர் வாழ மனிதர்களுக்கு உள்ள உரிமை போலவே விலங்குகளுக்கும் உள்ளது என்பதை அறிந்தேற்றம் ( Recognition ) செய்வதே நோக்கம்.
விலங்குகளுக்கான உரிமை பற்றிப் பேசுவதென்பது ( Animal Rights ) மனிதர்களுக்கான உரிமைகளுக்கு ( Human Rights ) எதிரானது அல்ல. விலங்கு உரிமைகள் பற்றி ஆர்வலர்கள் பேசும் போதெல்லாம் பலரும் பதற்றமடைந்து தாக்குதலில் இறங்குவதெல்லாம் இதில் உள்ள நியாயத்தைக் கண்டு அச்சமடைவதன் காரணமே !. எங்கே சிந்தித்தால் நாமும் இதை ஏற்றுக் கொண்டு விடுவோமோ என்கிற பதற்றம்தான் !. மனிதர்கள் மேல் கொண்டுள்ள அன்பின் நீட்சியே விலங்குகளின் மேல் பொங்கும் அன்பு என்று புரிந்து கொண்டால் போதுமானது. இதற்கு எந்த மதத்தையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் என எந்தப் பண்டிகையின் போதும் உயிர்களைக் கொன்று புசித்துக் கொண்டாட வேண்டியதில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு நினைத்தே பார்த்திராத 'இசுலாமிய சைவம்' ( Islamic Vegetarianism ) இன்று உலகமெங்கும் வேகம் பிடித்திருக்கிறது. அதிலும் நனிசைவம் ( Vegan ) எனப்படும் முழுமையான தாவரப் பயன்பாடு எனும் உயர்ந்த சிந்தனை பரவி வருவது மகிழ்ச்சியை, நம்பிக்கையை அளிக்கிறது.
சமூக ஊடகங்களில் பல இசுலாமியர்கள் தோன்றி 'உயிர்க்கொலை வேண்டாம்' என்று வேண்டுகோள் வைக்கின்றனர். புகழ்பெற்ற இந்தி நடிகர் இர்ஃபான்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த வரிசையில் இணைந்துள்ளனர்.
எனது முகநூல் நண்பரும் இசுலாமியப் பகுத்தறிவு சிந்தனையாளருமான அபித் சுஹைல் (Abid Suhail) அவர்களின் பதிவைப் பகிர்வதில்
பெருமை கொள்கிறேன்.
நனிசைவ இசுலாமே ( Vegan Islam ) வருக வருக .. உலகிற்குப் புது சிந்தனை தருக ....
பி.கு : சமூக ஊடகங்களில் 'பிரியாணி பிரியாணி' என்று நாக்கைச் சப்புக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டுகிறேன். நமக்கு நகைச்சுவை, விலங்குகளுக்கு உயிர்வாதை
உயிர்ப்பலி தொடர்பான கோரமான படங்கள், காணொலிகளைத் தவிர்த்திருக்கிறேன்

கருத்துகள் இல்லை: