கலைஞருக்கு இடது பக்கம் நூர்ஜஹான் |
நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டியவர் அம்மா நூர்ஜஹான் பேகம். ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக, மதுரை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.
மாநில மகளிரணி செயலாளர் கவிஞர் கனிமொழி அவர்கள் மதுரை சென்று, அம்மா நூர்ஜஹானை பார்த்துவிட்டு தான் பெரம்பலூர் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டார். இங்கு கூட்டம் முடியும் தருவாயில், அங்கு கூடு பிரிந்திருந்தார் அம்மா நூர்ஜஹான்.
கடந்த சில மாதங்களாக இந்தக் கூட்ட ஏற்பாட்டிற்காக தொடர்ந்து பேசி வந்தார். கடந்த வாரமும், அழைத்து கூட்ட ஏற்பாடுகள் குறித்து பேசிவிட்டு, "24 மதியம் குருவாயூர் எக்ஸ்பிரஸ்ஸில் அரியலூர் வந்து விடுகிறேன்", என்று சொன்னார். ஆனால், வரவில்லை. விடைபெற்று விட்டார், ஒட்டு மொத்தமாக.
இஸ்லாமிய சமூகத்தில் ஒரு பெண் பொதுவாழ்விற்க்கு வருவது, இப்போது எளிதாக சாத்தியமாகி வருகிறது. ஆனால், அம்மா நூர்ஜஹான் வந்த காலத்தில், அது அவ்வளவு சிரமமான காரியம்.
அதுவும் பெரியாரிய சிந்தனையோடு, திராவிட இயக்கத்தில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, கொள்கைப் பிரச்சாரம் செய்தது அசாத்தியமான செயல். செய்து காட்டினார்.
சிறு வயதிலேயே திராவிட இயக்க மேடையில் முழங்கிய பெண்மணி முன்னாள் அமைச்சர் சற்குணப்பாண்டியன். அவரும் இவரும் இணை பிரியாத் தோழிகள். அவரது மறைவிற்கு பிறகு மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார்.
தலைவர் கலைஞர் மீது மாறாத பற்றுக் கொண்டவர் நூர்ஜஹான். தலைவர் கலைஞர் அவர்களே ஒரு முறை சொன்னது போல், அவர் பயணம் செய்யும் ரயில் திண்டுக்கல்லை விடியற்காலை அடையும் போது கேட்கும் முதல் குரல் நூர்ஜஹானின் "தலைவர் கலைஞர் வாழ்க" முழக்கமாகத் தான் இருக்கும். இது சிறுமியாக இருந்த காலத்தில் துவங்கிய பழக்கம்.
பிற்காலத்தில் மாநில மகளிரணி செயலாளராக இருந்த காலத்திலும், பொதுக்குழு கூட்டம், செயற்குழு கூட்டம் போன்ற எந்த நிகழ்வாக இருந்தாலும் அங்கும் இவர் குரல் தான் முதலில் ஒலிக்கும். இவை எல்லாம் அவர் தலைவர் கலைஞர் கேட்கும் வகையில், நேரில் வாழ்த்தி எழுப்பிய குரல்.
கடைசியாக அம்மா நூர்ஜஹான் அவர்கள் எழுப்பிய "தலைவர் கலைஞர் வாழ்க" வாழ்த்துக் குரல் தான் ஒப்புயர்வு இல்லாதது. தலைவர் கலைஞர் அவர்கள் மறைவுற்று, மெரினா இடப் பிரச்சினையில் கொந்தளிப்பாக இருந்த நேரம். அப்போது பிரதமர் மோடி அஞ்சலி செலுத்த வருகிறார். மோடியின் கார் அருகில் சென்று, "தலைவர் கலைஞர் வாழ்க", என்று முழங்குகிறார் வீராங்கனை நூர்ஜஹான்.
தன் தலைவர் மறைவுற்றிருக்கும் நேரம். தன் தலைவனுக்கு அவமாரியாதை என்ற உடன் தன் எதிர்ப்பை காட்டுகிறார். அதுவும் நாகரீகமான முறையில், " தலைவர் கலைஞர் வாழ்க", என்று. தலைவன் பார்க்கப் போவதில்லை, ஆனாலும் முழங்கிக் கொண்டிருந்தார். அது தான் நூர்ஜஹான் பேகம்.
சிறு வயதில் கழக மேடை ஏறியவர், கடைசி வரை தன் பிரச்சாரப் பணியை விடவில்லை. தலைவர் கலைஞர், நூர்ஜஹான் அவர்களை மாநாடுகளில் பேச வைத்தார். மகளிரின் பிரதிநிதியாக மாநாட்டு கொடி ஏற்ற வைத்திருக்கிறார். அது பொதுக் கூட்டமோ, தெருமுனைப் பிரச்சாரமோ, தான் மாநில நிர்வாகி என்ற பந்தா இல்லாமல் எளிமையாக கலந்து கொண்டு பிரச்சாரம் செய்வார் அம்மா நூர்ஜஹானும்.
நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் பொதுக் கூட்டத்திற்கு வந்தவர், பின்னர் நான் மாவட்ட செயலாளராக நடத்திய பலக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு உரையாற்றினார். நான் அவரை அம்மா என்று தான் அழைப்பேன். அவரும் அந்தப் பாசம் குறையாமல் நடந்து கொள்வார். என் முகநூல் பதிவுகளை மகள் காட்டினார் என சொல்லி மகிழ்வார்.
நேற்று கவிஞர் கனிமொழி அவர்களை வரவேற்க மதுரை சென்ற போது, அம்மா நூர்ஜஹான் அய்.சி.யூவில் இருந்ததால் பார்க்கவில்லை. மாலை மகளிரணி கூட்டம் முடிந்து தான் அம்மா நூர்ஜஹான் மறைவுத் தகவல். கவிஞர் கனிமொழி சென்னை செல்லாமல், திண்டுக்கல் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இன்று (25.10.2018) நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை முடித்துக் கொண்டு, கழகத் தலைவர் தளபதி அவர்கள் திண்டுக்கல் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
வாழ் நாள் முழுதும், கழகத்திற்காக பிரச்சாரம் செய்தவருக்கு பெரிய பொறுப்புகளில் அமரும் சூழல் அமையவில்லை. நகராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி நழுவிப் போனது. ஆனாலும் அதற்கெல்லாம் ஆசைப்பட்டதாக ஒரு நாளும் சொன்னவரில்லை. சலித்துக் கொண்டவரும் இல்லை.
கழகத்தின் வீர மங்கைக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிட்டியது. அந்த மெல்லிய தேகத்தில், அசாத்திய துணிச்சலான மனதை தாங்கி உழைத்தவர் உறங்கிக் கொண்டிருந்தார்.
உருது மொழியில் 'நூர்ஜஹான்' என்றால் உலகின் வெளிச்சமாம். இந்த நூர்ஜஹான், 'திராவிட வெளிச்சம்'. தமிழகத்தில், இந்த வெளிச்சம் படாத கிராமங்கள் இருக்காது.
# திராவிட வெளிச்சம் 'நூர்ஜஹான்', தொடர்ந்து புகழ் ஒளி வீசும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக