வியாழன், 25 அக்டோபர், 2018

மலையக மக்கள் போராட்டம் அதிர்ந்தது கொழும்பு .. வரலாறு படைத்தது . ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு மற்றும்...


.BBC : இந்திய வம்சாவழி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த (தினசரி) அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகம் அருகில் இருந்து போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்ததை அடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.
சமூக வலைத்தளங்களின் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்து, கொழும்பு காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியிருந்தனர். இன்று காலை 10 மணிக்கு ஒன்று கூடிய சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மற்றுமொரு குழு கொழும்பு செட்டியார்தெருவிலிருந்து பேரணியாக காலி முகத்திடலை நோக்கி வந்தது. இவ்வாறு பேரணியாக வந்தவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக காலி முகத்திடலை நோக்கிச் செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் போலீசார் இரும்பு சாலைத் தடுப்புகளைப் பயன்படுத்தி பேரணியை தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து போலீசாருக்கும் பேரணியில் ஈடுபட்ட தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.


இதன் விளைவாக, போலீசார், பேரணியில் பங்கேற்றவர்களை பேருந்து மூலம் காலி முகத்திடலுக்கு அழைத்து சென்று போராட்டத்தை நடத்த வழி செய்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டம் மேலும் வலுப் பெற்று காலி முகத்திடல் முழுவரும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த நிலையில் சுமார் இரண்டு மணி வரை காலி முகத்திடலில் இருந்த போராட்டக்காரர்கள், திடீரென காலி வீதி வழியாக ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து, அதிக அளவிலான போலீசார் அழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் சாலைத் தடுப்புகள் போடப்பட்டு பேரணி நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீதியில் அமர்ந்த இளைஞர்கள் போராட்டங்களை தொடர்ந்தனர்.

அவர்கள் ஜனாதிபதியை உடனே சந்திக்க வாய்ப்பு வேண்டும் என்று கோரினர். ஆனால், அவர்களுக்கு ஜனாதிபதியை சந்திக்க நாளை வியாழக்கிழமை நேரம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதை அவர்கள் ஏற்க மறுத்த நிலையில் அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. காலி வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மலையக மக்களுக்கான அக்டோர் 24 புரட்சி என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் தமிழ் இளைஞர், யுவதிகளினால் முன்னெடுக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: