சனி, 27 அக்டோபர், 2018

கேரளா அரசு கலைப்பு ? மிரட்டும் உயர்நீதிமன்றம் .. சபரிமலை ...கைது செய்தால் பெரிய விலை கொடுக்க வேண்டி வரும்

tamiltehindu : சபரிமலையில் போராட்டம் நடத்தியவர்கள் என்ற போர்வையில் சுய விளம்பரத்துக்காகக் கைது நடவடிக்கையில் ஈடுபடாதீர்கள், மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று கேரள அரசை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ம் தேதி தீர்ப்பளித்தது. ஆனால், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது உள்ள பெண்கள் செல்ல அனுமதியில்லை எனும் பாரம்பரிய நடைமுறை நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கேரளா முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. நாள்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வந்தன
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. ஆனால், கோயில் திறந்தபின் உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் காரணம் காட்டி கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்கள், பெண் சமூக செயற்பாட்டாளர்கள், செய்தியாளர்கள் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு, திருப்பி அனுப்பிவிடப்பட்டனர்.

இதனால், சபரிமலை கடந்த 5 நாட்களாக மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க 50 வயதுக்குக் கீழ் உள்ள பெண்கள் அனைவரும் போராட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்தச் சூழலில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் கடந்த இரு நாட்களாக போலீஸார் தீவிரமாக இறங்கி உள்ளனர். கடந்த இரு நாட்களில் இதுவரை 452 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 2,300 பேரை போலீஸார் இதுவரை கைது செய்துள்ளனர். இதில் 700 பேர் மட்டும் பத்தினம்திட்டா மாவட்டத்தில் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பத்தினம்திட்டாவைச் சேர்ந்த சுரேஷ் குமார், அனோஜ் குமார் ஆகியோர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், சபரிமலைப் போராட்டத்தில் பங்கேற்றோம் எனக் கூறி அப்பாவி மக்களையும், அந்த போராட்டத்துக்கு தொடர்பில்லாதவர்களையும் போலீஸார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். சட்டத்துக்குப் புறம்பாக நடத்தப்படும் கைது நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த மனு இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் மாநில அரசைக் கடுமையாக எச்சரித்தனர். சபரிமலையில் போராட்டம் நடத்தினார்கள் என்ற போர்வையில் சுய விளம்பரத்துக்காகக் கைது நடவடிக்கையில் அரசும், போலீஸாரும் இறங்கக்கூடாது. கைது நடவடிகைக்கை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதற்கான விளக்கம் தேவை.
போராட்டத்தில் பங்கேற்று இருந்தார்கள் என்று உறுதி செய்தபின்புதான் போராட்டக்காரர்களைக் கைது செய்ய வேண்டும். அதைவிடுத்து அப்பாவிகளையும், போராட்டத்தில் பங்கேற்காதவர்களையும் கைது செய்தால், அரசு மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

கருத்துகள் இல்லை: