புதன், 24 அக்டோபர், 2018

இளம்பெண் அமைச்சரிடம் சிக்கியது எப்படி?

தினகரன் : சென்னை : இளம் பெண் மூத்த அமைச்சரிடம் சிக்கியது எப்படி என்று தற்போது பரபரப்பு  தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் மூத்த அமைச்சருக்கு இளம்பெண் தொடர்பு எப்படி கிடைத்தது என்ற பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது அது வருமாறு:
சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் சசி(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) மற்றும் அவரது தாயார் ஆகியோர் 2016ம் ஆண்டு ஒரு பரிகார பூஜைக்காக சென்னையை அடுத்து கோவளம் வந்துள்ளனர். அப்போது அந்த சாமியார் அவர்களிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பணத்தை ஏமாற்றி வாங்கிக் கொண்டு எந்த பரிகாரமும் செய்யவில்லை. இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக சாமியார் குறித்து புகார் தெரிவிக்க கோவளம் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டனர். ஆனால் அங்கு புகார் வாங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து சிலரது தொடர்பின் பேரில் சென்னையை சேர்ந்த மூத்த அமைச்சரிடம் சாமியார் பற்றி இளம்பெண்ணும், அவரது தாயாரும் புகார் கூறியுள்ளனர். முதல் சந்திப்பிலேயே இளம்பெண் அழகில் மயங்கிய அமைச்சர், எப்படியாவது தனது ஆசையை தீர்த்துக்கொள்ள நினைத்தார். சாமியாரிடம் பணத்தை வாங்கி தருகிறேன் என்று கூறி அடிக்கடி தனது வீட்டுக்கு இளம்பெண்ணை வரவழைத்துள்ளார்.


ஒருநாள் இளம்பெண்ணுக்கு போன் செய்து, சாமியார் தரப்பினரை இன்று வீட்டுக்கு வர சொல்லியுள்ளேன். வந்து பணத்தை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதை நம்பி இளம் பெண் மட்டும் தனியாக வந்துள்ளார். அப்போது அமைச்சரின் வீட்டின் வரவேற்பு அறையில் உட்கார வைத்து கூல்டிரிங்ஸ் குடிக்க கொடுத்துள்ளார். அதில் லேசான மயக்க மருந்து போட்டுள்ளார்.  கூல்டிரிங்ஸ் குடித்த சில நிமிடங்களில் இளம்பெண் மயங்கி தூங்கி விட்டார். இரண்டு மணி நேரம் கழித்து தூங்கி முழித்த இளம்பெண், தான் மோசம் போய் விட்டது தெரிந்தது. நடந்த விஷயம் பற்றி தனது அம்மாவிடம் இளம்பெண் கூறி கதறியுள்ளார். அம்மா அமைச்சரை நேரில் சந்தித்து சண்டை போட்டுள்ளார். ஆனால் அமைச்சர் தனது அதிகார பலத்தை வைத்து மிரட்டி, சில லட்சங்களை கொடுத்து அமைதிபடுத்தி விட்டார். அம்மாவுக்கும் அமைச்சர் மூலம் அதிக பணம் கிடைத்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமைச்சரும், இளம்பெண்ணிடம், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். சென்னையில் ரூ.2 கோடிக்கு வீடு வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அடிக்கடி சந்தித்துள்ளார். அமைச்சரின் பேச்சை நம்பிய இளம்பெண்ணும், அம்மாவும் அடிக்கடி சென்னை வந்து சென்றனர். அப்போது ஒரு முறை இளம்பெண் கர்ப்பமானார். ஆனால் அமைச்சர் பணம் கொடுத்து கர்ப்பத்தை கலைத்துவிட்டார்.

இந்த நிலையில்தான் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அமைச்சரை பொறுப்பாளராக ஜெயலலிதா நியமித்தார். அமைச்சர் அங்கேயே ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அப்போது இளம்பெண்ணையும் அழைத்து சென்றார். இந்த சந்திப்பில் இளம்பெண் கர்ப்பமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர், வழக்கம்போல் பணத்தை அள்ளி கொடுத்து கர்ப்பத்தை கலைக்க ஏற்பாடு செய்தார். ஆனால் இந்த முறை இளம்பெண் கர்ப்பத்தை கலைக்க மறுத்துவிட்டார். தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும், வீடு வாங்கி தருவதாகவும் அமைச்சர் தொடர்ந்து ஏமாற்றி வருவதை தெரிந்து கொண்ட இளம்பெண்ணும், அவரது தாயாரும் கண் கலங்கினர். பெரிய இடத்தில் மோத முடியாமல் தவித்தனர். அப்போதுதான் தங்களை காப்பாற்றிக்கொள்ள சென்னை வடசென்னையை சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ ஒருவரிடம் இளம்பெண் அடைக்கலம் புகுந்தார். அந்த எம்எல்ஏவுக்கு அமைச்சர் பரம எதிரி என்பதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்.

டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்எல்ஏ ஆலோசனைபடி, கர்ப்பத்தை கலைக்க மறுத்துவிட்டு அமைச்சர் கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுத்து விட்டனர். இளம்பெண் அமைச்சரின் குழந்தையை வயிற்றில் வளர்க்க தொடங்கினார். வடசென்னை எம்எல்ஏ ஆலோசனைபடி, கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9ம் தேதி தண்டையார்பேட்டையில் உள்ள ஜெயம் நர்சிங் ஹோமில் இளம்பெண் சசிவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததற்காக, சென்னை மாநகராட்சி மூலம் பிறப்பு சான்றிதழ் வாங்கப்பட்டுள்ளது. இதில் குழந்தையின் அப்பா பெயர் அமைச்சர் என்றும் அச்சிடப்பட்டுள்ளது. அமைச்சரின் சென்னை முகவரியும் இடம் பெற்றுள்ளது. இவ்வளவு ஆதாரங்களை கையில் வைத்துள்ளதால் இளம்பெண்ணை ஒன்றும் செய்ய முடியாமல் அமைச்சரின் தரப்பு தற்போது தவித்து வருகிறது. இதுபற்றி அமைச்சரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் செல்போனை எடுக்கவில்லை.

கருத்துகள் இல்லை: