புதன், 6 செப்டம்பர், 2017

கனிமொழி : தி.மு.க பொய்ப்பிரச்சாரத்தை ஊடகங்களில் தொடர்ந்து பரப்பி வருகின்றனர்

Kanimozhi Karunanidhi: பா.ஜ.க வின் செய்தி தொடர்பாளர்கள், தி.மு.க நீட் தேர்வை ஆதரித்ததாக ஒரு பொய்ப்பிரச்சாரத்தை ஊடகங்களில் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இது அவர்களால் திட்டமிட்டு நடத்தப்படும் பொய்ப்பிரச்சாரமன்றி இதில் உண்மை துளியும் இல்லை.
தி.மு.க ஆகஸ்ட் 1, 2016 அன்று நீட் தேர்வை ஆதரித்து நாடாளுமன்றத்தில் பேசியதாக சமூக வலைதளங்களில் தவறான ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. தலைவர் கலைஞர் அவர்கள் நீட் தேர்வை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்திருக்கிறார். தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தவரை நீட் தேர்வை நடைமுறைப்படுத்த அனுமத்திக்கவில்லை என்பதே உண்மை. தளபதி அவர்களும் நீட் தேர்விற்கு எதிராக தொடர்ந்து குரலெழுப்பி வருகிறார்கள்.
ஆகஸ்ட் 1, 2016 அன்று நாடாளுமன்றத்தில் நான் பேசிய போது தெளிவாக, கல்வி மீண்டும் மாநிலப்பட்டியலில் கொண்டிவரப்பட வேண்டும் என்றும் நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்தும் பேசியிருக்கிறேன். இதிலிருந்தே இவர்கள் பகிரும் தகவல்களில் எந்த அளவிற்கு புரட்டு இருக்கிறது என்று புரியும். ஆகஸ்ட் 1, 2016 அன்று நாடளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையின் தமிழாக்கம் :

“நீட் சட்டம் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டதால், நாடெங்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவக் கல்லூரி கனவுகளோடு 12ம் வகுப்பு முடித்து விட்டு வரும் மாணவர்களின் கனவை சிதைக்கும் வண்ணம், மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், அவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத ஒரு நிலை உருவாகியிருக்கிறது. பல மாணவர்கள் இத்தேர்வுக்கு தயார் செய்ய முடியாமல் பல சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். நமது நாட்டின் சிறப்பே பன்முகத்தன்மை. ஆனால் அந்த பன்முகத் தன்மையை சிதைக்கும் வகையில், அரசு முன்னேற்றம் என்ற பெயரில் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே நீட் தேர்வும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கல்வித் துறையில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. ஆனால் நம் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சினைகள் உள்ளன.
ஒரு குடும்பத்தையே எடுத்துக் கொண்டால், ஆண் பிள்ளைக்கு கிடைக்கும் அத்தனை வாய்ப்பும் பெண் குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியான சிக்கல்கள் உள்ளன. இப்படிப்பட்ட சூழலில், பல்வேறு கல்வி முறைகளில் பயிலும் அனைத்து மாணவர்களும், நாட்டில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சரியான நடவடிக்கையா? ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு கல்வி முறைகள் உள்ளன. தமிழகத்திலும் பல கல்வி முறைகள் உள்ளன. ஆனால் அமைச்சரோ, நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் என்சிஇஆர்டி புத்தகங்களின் அடிப்படையில் நடத்தப்படும் என்று கூறுகிறார். இது நியாயமான நடைமுறையா? தமிழக மாநில கல்விப் பாடத்திட்டத்தின்படி படித்த தமிழக மாணவர்களை மத்திய பாடத் திட்டத்தின்படி நுழைவுத் தேர்வு எழுத வைப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும்? மாணவர்கள் 12ம் வகுப்பு முடித்து, நல்ல மதிப்பெண் எடுத்துள்ளார்கள். அவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் மறுக்கப்படுகிறது.
2007ம் ஆண்டில் திமுக அரசு மருத்துவ பொறியியல் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்தது. வெறும் 12ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே கல்லூரி அனுமதி நடைபெற்றது. இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு, பல முதல் தலைமுறை மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப் பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு இது பெரும் வகையில் பயனளித்தது. இது போன்ற ஒரு நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியதன் மூலம், கிராமப்புரங்களை சேர்ந்த பல மாணவர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகி உள்ளது. அந்த மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வுக்கும் படிக்க வேண்டும். நுழைவுத் தேர்வுக்காக சிறப்பு பயிற்சி எடுப்பவர்களை மட்டுமே ஊக்குவிக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் உள்ளன.
இந்த நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணம் மிக அதிகமாக இருக்கும். இதைத்தான் இந்த அரசு ஊக்குவிக்கிறது. 12ம் வகுப்பில் அதிக சிரமப்பட்டு நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை.
மருத்துவக் கல்வியில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. போதுமான மருத்துவக் கல்லூரிகள் இல்லை. தனியார் கல்லூரிகளில் கட்டணம் மிக அதிகமாக இருக்கிறது. ஆனால் இதற்கு நீட் தீர்வல்ல. இதற்கு மாணவர்கள் பாதிக்காத வகையில் வேறு தீர்வை காண வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் எளிமையான முறையில் நல்ல கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நீட் தேர்வை இந்நாட்டின் மாணவர்கள் மீது அரசு திணிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். கல்வியை மாநில அரசுகளிடம் விட வேண்டிதற்கான நேரம் வந்து விட்டது. அந்தந்த மாநில அரசுகளே அம்மாநில மாணவர்களுக்கான நலனை பாதுகாக்க முடியும். மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்கும் என்று நம்புகிறேன்"

கருத்துகள் இல்லை: