Mathi Oneindia Tamil அகமதாபாத்: தமிழகத்தைப் போல ஆயிரக்கணக்கான குஜராத் 'அனிதா'க்களின் மருத்துவ படிப்பு கனவிலும் கொள்ளி வைத்திருக்கிறது நீட். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களால் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் அரியலூர் அனிதா தூக்கிடு மாண்டு போனார். அனிதாவின் மரணம் தமிழகத்தை கொந்தளிக்க வைத்திருக்கிறது. கடந்த 6 நாட்களாக மாணவர்கள் வீதியெங்கும் வீரியத்துடன் போராடி வருகின்றனர். அதேநேரத்தில் நீட் ஆதரவாளர்களோ, மற்ற மாநிலங்கள் எல்லாம் அமைதியாக இருக்கிறது; அவர்களும்தான் நீட் எழுதினார்கள் என சப்பை கட்டு கட்டுகிறார். உண்மையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயிரக்கணக்கான அனிதாக்களின் மருத்துவ படிப்பு கனவில் கொள்ளி வைத்திருக்கிறது இந்த நீட். குஜராத் நீட் தேர்வில் தமிழகத்தைப் போல இன்னொரு கொடுமை நிகழ்ந்துள்ளது. குஜராத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆங்கில வினாத்தாள் எளிதாகவும் குஜராத்தி மொழி வினாத்தாள் மிக கடினமானதாகவும் இருந்திருக்கிறது.
குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் குக்கிராமத்தைச் சேர்ந்தவர் பார்கவ் படேல். மாநில பாடத்திட்டத்தில் படித்து 92% மதிப்பெண்கள் பெற்றவர். ஆனால் நீட் தேர்வில் 292 மதிப்பெண்கள்தான் பெற முடிந்தது. நீட் தரவரிசைப் பட்டியலில் 3,881-வது இடம் கிடைத்தது. இதனால் மருத்துவ படிபு கனவு தகர்ந்தது.
அதேநேரத்தில் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றிருந்தால் அரசு மருத்துவ கல்லூரியில் பார்கவ் படேலுக்கு எளிதாக இடம் கிடைத்திருக்கும். இந்த பார்கவ் படேலுக்கு பூஜ் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் தருகிறார்கள். ஆனால் ரூ17 லட்சம் தர வேண்டுமாம். ஆனால் எங்களால் அவ்வளவு தொகை கட்ட முடியாது என இப்போது அடுத்த ஆண்டு நீட் தேர்வுக்கு கோச்சிங் செல்ல அகமதாபாத்துக்கு செல்கிறாராம்.
இதற்காக ரூ1.5 லட்சத்தை புரட்டிக் கொண்டிருக்கிறது பார்கவ் படேல். ஹிம்மத் நகரைச் சேர்ந்த ஹனி படேல் என்ற மாணவி மாநில பாடத்திட்டத்தில் 92% மதிப்பெண்கள் பெற்றவர். நீட்டில் 225 தான் பெற முடிந்தது; கவுசல் சவுத்ரி 90% மதிப்பெண் பெற்றவர். ஆனால் நீட்டில் 234 தான் பெற முடிந்தது. இப்படியான பட்டியல் நீண்டு போகிறது குஜராத்தில்...
அம்மாநிலத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களில் 2,000 பேர் ஆண்டுதோறும் மருத்துவ படிப்பில் சேருவார்கள். இந்த ஆண்டு வெறும் 400 பேருக்குத்தான் மருத்துவ படிப்பு சாத்தியமாகியிருக்கிறது. எஞ்சிய அனிதாக்கள் கனவை தொலைத்தவர்களாக நீட்டை சபித்தவர்களாக கிடைத்த படிப்பை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக