வியாழன், 7 செப்டம்பர், 2017

சென்னையில் 33 இடங்களில் போராட்டங்கள்... ஆயிரம் பெண்கள் உள்பட 6,215 பேர் கைது .. பின்னர் விடுவிக்கப்பட்டதாக

சென்னை, நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் சென்னை நகரில் 33 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 5 இடங்களில் நடந்த போராட்டங்களில் 11 பெண்கள் உள்பட 199 பேரை போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். அதன்பிறகு அவர்களை விடுதலை செய்தனர். இதேபோல் 28 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஆயிரம் பெண்கள் உள்பட 6,215 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர.
 சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நினைவிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அப்புறப்படுத்தி காவல்துறையினர் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். அதேபோல் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே திரளான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் போராட்டத்தை அடுத்து கிண்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


மாணவர்கள் தியானப் போராட்டத்தில் ஈடுபட முடிவு

மெரினா ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் தியானப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். ஓ.பன்னீர் செல்வதை தியானம் செய்ய அனுமதித்ததை போல் எங்களையும் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழம் மற்றும் புதுச்சேரியில் 4-வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்றும் வருகிறது. அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வு முறையால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் கட்சிகளை தொடர்ந்து கடந்த 4-ந்தேதி முதல் பள்ளி-கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம், மறியல், மனித சங்கிலி, பேரணி ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 4-வது நாளாக மாணவர்கள் போராட்டம் நீடித்தது.

அரியலூர் அரசு கல்லூரி மாணவர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 4வது நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று முதல் கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி மாணவர்கள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்துவதற்காக கல்லூரியில் இருந்து சாலைக்கு வந்தனர். நெல்லை மாவட்டத்தில் இன்றும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டையில் ஜான்ஸ் கல்லூரி, பேட்டை இந்து கல்லூரி, ஐ.டி.ஐ. மாணவ- மாணவிகள் போராட்டத்தில் பங்கேற்றனர். பாளையங்கோட்டை பிரான்சிஸ் சேவியர்ஸ் என்ஜினியரிங் கல்லூரி, சேரன்மாதேவி ஸ்காடு என்ஜினீயரிங் கல்லூரி மாணவ- மாணவிகளும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர் ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்தனர். கல்லூரி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர்.

திருச்சி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். காரைக்குடி அழகப்பா அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1500-க்கும் மேற்பட்டவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல், தேனி, பெரம்பலூர் ஆகியர் ஊர்களிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலூர் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்களில் கறுப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 80-க்கும் மேற்பட்டோர் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவாரூர் அடுத்த திருநெய்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தினகரன்

கருத்துகள் இல்லை: