புதன், 6 செப்டம்பர், 2017

மாபா பாண்டியராஜன் :நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கொண்டுவர நான் முயற்சி செய்தேன்


நீட் தேர்வுக்கு கையெழுத்திட்டேனா? : மாஃபாநீட் தேர்வுக்குத் தான் கையெழுத்திடவில்லை என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு தற்காலிக விலக்காவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீட் தேர்வின் அடிப்படையிலேயே தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தன்னுடைய மருத்துவம் படிக்கும் கனவு தகர்ந்துபோனதால், உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. நிர்பயா சட்டம்போல அனிதா சட்டமும் நிறைவேற்றப்பட வேண்டுமெனக் கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.
இதற்கிடையே நீட் தேர்வை ஏற்றுக்கொள்கிறோம் என்று அப்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன் கையெழுத்திட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகிப் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்து கரூரில் இன்று (செப்டம்பர் 6) செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “நீட் விவகாரத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தமிழகத்தில் நீட் தேர்வைக் கொண்டுவரக்கூடிய எந்த ஒப்பந்தத்திலும் நான் கையெழுத்திடவில்லை.அந்த விவகாரத்தை சுகாதாரத் துறையினர் கவனித்து வருகின்றனர். நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கொண்டுவர மட்டுமே நான் முயற்சி செய்தேன். சமூக வலைதளங்களில் வெளியாகிய செய்தி தவறான செய்தியாகும்” என்று விளக்கமளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: