ஒரு வேளை, வக்கிரமும் அசிங்கமும் நிறைந்த இந்து மதத்தை சுத்தப்படுத்துவது நம் வேலையில்லை. அதை விட்டு வெளியேறுவது மட்டுமே நம் கடமை என்று புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் சொன்னது இந்த திருந்தாத ஜென்மங்களினால் ஏற்பட்ட இதே விரக்தியினால் தானோ என்று தோன்றுகிறது.
கணக்கில்லா மரணங்களை கண்டாகிவிட்டது. ஆனால் இந்த போராளிகளின் குரல்கள் ஓய்ந்ததாய் இல்லை. வெறியர்களின் மனமும் மாறியதாக இல்லை.
எரிக்கப்பட்ட சேரிகளின் சாம்பலை கைகளில் ஏந்தியவளாக, அதன்பின்னான அத்தனை துன்பங்களையும் கண்ட சாட்சியாக, அரசின்-காவல் துறையின் ஜாதிய வன்மத்தால் கதியின்றி நின்ற தலித்துகளின் கையறு நிலையை சட்டத்தின் வழி போராடி நீதி பெற முயற்சித்து தோற்றவளாக சொல்கிறேன், இந்த பார்ப்பனிய-ஜாதிய-மதவாத சமூகத்தில் இந்தப் போராட்டக் குரல்களால் எதுவும் மாறிவிடவில்லை.
பாகுபாட்டில் ஊறிய இச்சமூகத்தில் ஒன்றை விட்டால் இன்னொன்று என்று காரணங்கள் மாறுகின்றனவே ஒழிய, தீர்வு கண்ட பாடில்லை.
இந்த ஓட்டரசியல் ஜனநாயகத்தை நம்புவதானால், அரசியல் அதிகாரம், நீதித்துறை, நடைமுறைப்படுத்தும் நிறுவனம் ஆகியவை உண்மையில் யாரிடம் இருக்கிறது என்ற கேள்வி இன்றியமையாததாகும்.
எந்த கட்சி ஆட்சியை பிடித்தாலும், அவ்வரசின் கொள்கைகளை வகுப்பவர் எவர், ஜனநாயகத்தின் நான்கு தூண்களை கையகப்படுத்தியிருப்பவர் எவர் என்பதிலிருந்தே இந்த ஓட்டரசியல் ஜனநாயகம் என்பது எவ்வளவு பொய்யான கட்டமைப்பு என்பது விளங்கும்.
ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களும், முற்போக்கு சிந்தனையாளர்களும், சமூக நீதிப் போராளிகளும் ஜனநாயக அரசின் உறுப்புகளை கைப்பற்றாத வரை என்ன போராடினாலும், பார்ப்பனிய சட்டங்கள் வந்தபடியே தான் இருக்கும், அவற்றை நீதிமன்றங்கள் உறுதிப்படுத்திக்கொண்டே தான் இருக்கும்.
ஆனால் இவற்றை மக்கள் போராட்டத்தின் மூலம் வென்றுவிட முடியுமென எண்ணினால், அநீதிக்கு-சமத்துவமின்மைக்கு எதிரான பல கோடி மனிதர்களின் தனி நபர் மாற்றமும், கோபமும் தேவையாக இருக்கிறது. இந்த ஜாதிய சமூகத்தில் அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் அது சாத்தியம் என என்னால் நம்ப முடியவில்லை.
பூணூலை உயர்த்தும் பெருமையையும், மலச் சட்டியை ஏந்தும் கோபத்தையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பதை ‘சமத்துவம்’ எனக் கருதும் தளத்தில் என்ன நம்பிக்கை ஏற்படும் எனக்கு?
நேற்று ரோஹித் – இன்று அனிதா – நாளை நான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக