விகடன் :கார்த்திக்.சி
: அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் தொடரப்பட்ட பொதுநல வழக்கு, இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மாணவி அனிதா, செப்டம்பர் 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் தற்கொலையையடுத்து, தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துவருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராடிவருகின்றனர். இந்த நிலையில், வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், 'அனிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்; தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். அனிதா மரணத்துக்காக நடைபெறும் போராட்டங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும்' என்று கூறி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக