வெள்ளி, 8 செப்டம்பர், 2017

மோடி .. இந்திய வரலாறு இதுவரை கண்டிராத ஒரு பொய்யன் பிரதமர் பதவியில்..

savukkuonline.com
காவிரி நீரை மட்டும் மோடியா வாங்கித் தர வேண்டும்  ? இப்படி ஒரு வரியை
பார்க்கும் பொழுது செம்ம சிரிப்பு தான் வந்தது, அதாவது நல்லது நடக்கும் பொழுது மோடி தான் கேட்டை ஆட்டினார், அதே சமயம் தோல்விகள் துயரங்கள் என்றால் ஸ்பெஷல் சாதா வீர துறவி மோடி பொறுப்பாக மாட்டார், என்பதை மற்றவர்கள் மனதில் பதிய வைக்க முயற்சிக்கும் வேலை தான்.
ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தர மறுக்கின்றது, மாநில முதல்வர்கள் பேசியும் பிரயோஜனம் இல்லை, விவசாய சங்கங்கள் பேசியும் பிரயோஜனம் இல்லை, தமிழகம் நீதிமன்றம் செல்கிறது அதுவும் இந்தியாவின் கடைசி நம்பிக்கை, அந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது அப்பொழுதும் பிரயோஜனம் இல்லை.
இப்பொழுது கர்நாடகாவை யாரால் நிர்பந்திக்க முடியும், இந்த நாட்டின் பிரதமரால், ஆனால் அப்படி மோடி ஏதாவது செய்வாரா? ஒரு நேர்மையான பிரதமரால் கண்டிப்பாக முடியும், மோடி ஒரு அரசியல் கட்சி சார்ந்த அடியாள் அம்புட்டு தான்.

“மித்ரோன் மித்ரோன் தமிழ்நாட்டில் உள்ள மித்ரோனுக்கு தண்ணீர் விடு” என்றால், கர்நாடகாவில் உள்ள பாஜக தலைவர்களும் தொண்டர்களும், இங்குள்ள பாஜக ஆட்களை போல தமிழின இன எதிரிகள் இல்லை, மொழி மற்றும் இனப்பற்று உள்ளவர்களாக, தமிழகத்திற்கு தண்ணீர் தருவதை இன துரோகமாக கருதுகிறார்கள். தொண்டன் முதற்கொண்டு எவனும் ஓட்டு போட மாட்டான், அதற்கு முன்பே அந்த கட்சி தலைவர்களே கட்சியை கலைத்து விடுவார்கள்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவில் உள்ள பொழுது, மோடிக்கு தமிழ்நாட்டில் விவசாயம் அழிந்து விவசாயிகள் இறப்பதில் கவலை ஒன்றும் வரப்போவது இல்லை. நேர்மையான பிரதமராக இருந்தால் கட்சியாவது மண்ணாவது நாம் தற்போழுது பிரதமர், அதனால் பிரதமர் போல நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருவது இயல்பு.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கோரக்புரில் 309 குழந்தைகள் அநியாயமாக இறந்துள்ளன.   தன்னுடைய கட்சி ஆளும் மாநிலம் என்ற ஒரு காரணத்தால் வாயை திறக்காமல் இருக்கின்றார். நாட்டையே துயரத்தில் ஆழ்த்திய ஒரு சம்பவத்திற்கு வேதனையை வெளிப்படுத்தாத, ஒரு அருமையான பிரதமர் நமக்கு வாய்த்து இருக்கின்றார். இவர்கள் மன்மோகன் சிங்கை மௌன குரு என்று நக்கலடித்தார்கள்.
ஊழலுக்கு எதிரானவரா ? சார் ! நான் ஒரு கதை சொல்லட்டுமா?
வியாபம் முறைகேடு! கடத்தல், கொலை, தற்கொலை என்று அணைத்து சாராம்சமும் கலந்த ஊழல், இதுவரை 36  பேர் இறந்துள்ளார்கள், 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஊழலை வெளி கொண்டு வந்தவர்கள் டாக்டர்.ஆனந்த் ராய், அஷிஷ் சதுர்வேதி, பிராஷாந்த் பாண்டே.
டாக்டர்.ஆனந்த் ராய் பாஜகவின் உறுப்பினர் ஆர் எஸ் எஸ் பணிகளில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இந்த ஊழலை வெளிக் கொண்டு வந்த நாளில் இருந்து, ஆர்எஸ்எஸ்ஸில் இருந்து ஒதுக்கப்பட்டார், காங்கிரஸ் உளவாளி என்று பாஜகாவால் முத்திரை குத்தப்பட்டவர். தனது உயிருக்கு ஆபத்து என்று 2013 ஆம் ஆண்டு நீதிமன்றம் சென்றார். மாதம் 50000 ஆயிரம் நீதிமன்றம் கேட்க தன்னிடம் அவ்வளவு வருமானம் இல்லை கூறினார்.
பல தரப்பட்டவர்களின் நெருக்கடிகளுக்கு பணிந்து இரண்டு வருடம் கழித்து அரசாங்கம் பாதுகாப்பை வழங்கியது. ஒருமுறை இந்த ஊழலை வெளிக் கொண்டு வந்ததற்காக என்னை ஆர் எஸ் எஸ் ஒதுக்கியது என்று பேட்டி அளித்தார். இடமாறுதல் மற்றும் அரசாங்க நெருக்கடிக்கு இடையிலும் “பல் மற்றும் மருத்துவ நுழைவு தேர்வு ஊழலை” அம்பலப்படுத்தினார். உச்ச நீதிமன்றம் இது வியாபம் ஊழலை விட மோசமானது என்று கருத்து கூறியது.
அஷிஷ் சதுர்வேதி! இப்பொழுது தான் இவருக்கு வயது 27, ஆறு வருடங்கள் முன்பு தனது தாயை கேன்சர் நோய்க்கு பலி கொடுத்தவர், ம.பியில் உள்ள அரசாங்க மற்றும் தனியார் மருத்துவர்கள் தகுதி இல்லாமல் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்த பிறகு மருத்துவர்களின் தேர்வு பற்றி எல்லா தகவலையும் சேகரித்து, உண்மைகளை வெளிக் கொண்டு வந்த மற்றொரு தீவிர ஆர் எஸ் எஸ் உறுப்பினர்.
இன்றைய நிலைமை என்ன தெரியுமா! இவரை அந்த பாஜக அரசாங்க காவல்துறை எது செய்தாலும் தனது மொபைலில் வீடியோ எடுக்கும், குளிப்பது முதற்கொண்டு, இதற்கு பெயர் தான் அரசாங்க தீவிரவாதம். தன்னுடைய வாழ்க்கையில் தனிமை மட்டுமே இவருக்கு துணை. அக்கம் பக்கம் உள்ளவர்கள் இவருடன் பேசமாட்டார்கள், இரண்டு காவல்துறை அதிகாரிகள் கூடவே இருந்தும், இதுவரை 16 முறை தாக்குதலுக்கு உள்ளவர். புகார் அளிக்க சென்றால், கூட இருந்த காவல்துறை அதிகாரிகள், அப்படியெல்லாம் நடக்கவேயில்லை என்று கூறுவார்களாம். எல்லாவற்றையும், அதாவது தன்னுடைய எதிர் காலம் முதற்கொண்டு  இழந்து, உயிருடன் வாழ்வது பெரிய ஆச்சர்யம்.  இவர் செய்த ஒரே தவறு ஊழலுக்கு எதிராக நின்றது.
பிரசாந்த் பாண்டே! இவர் கொடுத்த பெண் ட்ரைவ் சரி இல்லை, இவரின் மனைவி ஹவாலா மோசடியில் ஈடுபட்டார் என்று இவரும் பாவம், அரசாங்க தீவிரவாதத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். இந்த மூவரும் செய்தது ஒன்று தான், ஊழலுக்கு எதிராக உறுதியாக நின்றது. அதிலும் உலக ஒழுக்க இயக்கமான ஆர் எஸ் எஸ் என்று டௌசர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்களுக்கே இந்த நிலைமை. நன்றாக யோசித்தால், நேர்மை, தேசப்பற்று என்று பேசும் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் ஒருநாளும் வியாபம் ஊழல் பற்றி வாயே திறந்து கிடையாது.
பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த பெருமகனார் என்னும் மோடிஜீ
பொய் பொய் வாயை திறந்தாலே பொய் தான்! ஹிட்லருக்கு கோயபல்ஸ் மாதிரி இந்த அரசாங்கத்திற்கு ஏகப்பட்ட கோயபல்ஸ்கள்!
சார்! இன்னொரு கதை சொல்லட்டுமா!
மோடி பிரதமர் ஆகி இரண்டாம் ஆண்டு கொண்டாட்டம், பாஜக அதனை பெரிய விழாவாக கொண்டாட வேண்டி புது டெல்லி இந்திய கேட் பகுதியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறது. பாஜ௧ கட்சி விழாவை அரசாங்க நிறுவனமான தூர்தர்ஷன் ஒளிபரப்பு செய்கிறது. ஆறு மணி நேர விழா முடிவில் மோடி மேடை ஏறுகிறார், மைக்கை பிடித்து புளுகத் துவங்குகிறார்.
“எரிவாய்வு மானியத்தை வங்கி கணக்குகளில் செலுத்தியதால் 15,000 கோடிகளை நான் சேமித்துள்ளேன். மக்கள் மோடிஜி! நீங்கள் செய்வது எல்லாம் சரி என்று கூறுகிறார்கள்”
இவர் பேசிய நாளில் இருந்து ஒரு மாதம் முன்பு அதாவது ஏப்ரல், இவரால் நியமிக்கப்பட்ட அரவிந்த் சுப்பிரமணியன் 12,700 கோடிகள் என்கிறார், அதுவும் எதிர் பார்க்கப்படும் சேமிப்பு, அதாவது வருங்காலத்தில் சேமிக்கப்படும். IISD அமைப்பு அக்டோபர் 2015 ஆம் ஆண்டு, கோடி கணக்கில் ஒன்றும் சேமிப்புகள் எதுவும் நடக்கவில்லை, 143 கோடிகள் வரையில் சேமிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறி இருந்தது.  இணைப்பு
அடுத்த அண்ட புளுகு:
“ஒரு கோடிக்கும் அதிகமானோர் தங்களது எரிவாய்வு மானியத்தை கொடுத்துள்ளதால், 3 கோடி புதிய எரிவாய்வு இணைப்புகளை ஏழை எளிய மக்களுக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளேன்”
அரசாங்க தகவல் வெறும் 45 லட்சம் என்று கூறுகிறது, இவர் பேசிய மாதத்தில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்பு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் 60 லட்சம் புதிய இணைப்புகள் என்று பேட்டி கொடுத்தார்.  இணைப்பு   இணைப்பு 2

அடுத்த அண்ட புளுகு:
“நாங்கள் 1.65 கோடிகள் போலி குடும்ப அட்டைகளை அப்புறப்படுத்தியுள்ளோம்.” இப்படி பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே “நாங்கள் 1.62 கோடிகள் போலி குடும்ப அட்டைகளை கண்டு பிடித்துள்ளோம்” என்று கூறுகிறார். இவர் பேசிய முந்தின மாதம் அரசாங்க குறிப்பு, 66 லட்சம் குடும்ப அட்டைகளை அழிக்கப்பட்டுள்ளது, அதில் அனைத்தும் போலிகள் இல்லை, சிலர் இந்த மானிய பொருட்களை வாங்க தகுதி இல்லாதவர்கள்.  அந்த குடும்ப அட்டைகளும் அடங்கும் என்று கூறப்பட்டிருந்தது.  இணைப்பு
பிறகு ஜன் தன் திட்டத்தில் 20 கோடிகள் வங்கி கணக்குகள் துவக்கப்பட்டது என்று கூறுகிறார், ஆனால் உண்மையில் 8.6 கோடிகள் தான். இந்திய தான் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்கிறார், அந்த வருடம் தான் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனும், மோடியால் நியமிக்கப்பட்ட சிறப்பு பொருளாதார ஆலோசகருமான அரவிந்த் சுப்பிரமணியனும், பொருளாதார வளர்ச்சி குறியீடுகளை வரையறுக்கப்படும் பார்முலாக்களில் செய்யப்பட்ட மாற்றங்களை பற்றி சந்தேகம் தெரிவித்து இருந்தனர்.  இணைப்பு
கருப்பு பணமும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையும்
தொட்டுதொடரும் பாரம்பரியமாக இந்த வருட சுதந்திர உரையில் மோடி அவர்கள் கருப்பு பணம் பற்றி ஒரு விளக்கம் அளித்திருந்தார், புரிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள். “கடந்த மூன்று ஆண்டுகளில் 1.25 லட்சம் கோடிகள் கருப்பு பணத்தை கைப்பற்றியுள்ளோம், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வெளி நிபுணர்கள் கணக்கு படி வங்கி கணக்கில் முறையாக செலுத்தப்படாத 3 லட்சம் கோடிகளை வங்கி கணக்குகளில் கொண்டு வந்துள்ளோம். 2 லட்சம் கோடிகள் கருப்பு பணம் என்பதை கண்டறிந்துள்ளோம், 1.75 லட்சம் கோடிகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.
இதை புரிந்து கொள்ளுவதே நம்மை மிகப்பெரிய பொருளாதார நிபுணராக மாற்றி விடும், 3 லட்சம் கோடி கணக்கு போட்ட அந்த “வெளி நிபுணர்கள்” யார் என்று சொல்லவே இல்லை. 2 லட்சம் கருப்பு பணத்தில் எதற்கு 1.75 லட்சம் கோடிகளை மட்டும் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்? அதற்கும் விளக்கம் இல்லை. சரி! மத்திய ரிசர்வ் வங்கியிடம் ஏதாவது தகவல் இருக்கின்றதா என்று பார்த்தால், அவர்கள் அதை Excess Deposit Not Unaccounted Income என்று 2.7 லட்சம் கோடிகள் முதல் 4.3 லட்சம் கோடிகள் என்று பதிவு செய்து வைத்துள்ளார்கள். இணைப்பு
புதிய வருமானவரி கட்டுபவர்கள், அதாவது பணமதிப்பிழப்புக்கு பிறகு மோடி அவர்களின் சுதந்திர உரையின் படி 56 லட்சம், மே 2017 நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ கூறுப்படி 91 லட்சம், அதே ஆகஸ்ட் 12 தேதி சிறப்பு பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்து 5.44 லட்சம்.
வருமானவரித்துறை ஏதாவது தகவல் வைத்துள்ளார்களா என்று துழாவினால், 2016-2017 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட ஐடிஆர் படிவங்கள் எண்ணிக்கை 2.79 கோடிகள், அதுவே ஆம் 2015-2016 ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட ஐடிஆர் படிவங்கள் எண்ணிக்கை 2.23 கோடிகள், கூட்டி கழித்து பார்த்தல் 56 லட்சம் வரும், தகவல் சரி தான் போல என்று, அரசாங்க பதிவேட்டை பார்த்தால் வெறும் 33 லட்சம்.
தகவல்களை ஆராய்ந்தால் 1.08.2017 அன்று ராஜ்ய சபாவில் எழுந்த கேள்விக்கு பதிலாக பணமதிப்பிறக்கம் துவங்கிய நாள் முதல் 31 மார்ச் 2017 வரை 1.96 கோடி ஐடிஆர் படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது அதுவே 2015-2016 ஆம் ஆண்டில் 1.63 கோடி ஐடிஆர் படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, மீண்டும் கூட்டி கழித்து பார்த்தல் 33 லட்சம். இதில் எது உண்மை என்று நீங்கள் ஆராய்ந்து முடிக்கும் பொழுது உயிர் இருக்காது.
“18 லட்சம் பேர் தெரிவித்திருந்தது வருமானத்தை விட அதிகமாக ஈட்டுகிறார்கள், அவர்களை விளக்கம் அளிக்க வேண்டும். 4.5 லட்சம் பேர் தங்கள் தவறை உணர்ந்து வருமான வரி கட்ட முன்வந்துள்ளார்கள், 1 லட்சம் பேருக்கு வருமான வரி பற்றி தெரியவில்லை, அவர்களையும் நாங்கள் வருமான வரி கட்ட வைத்துள்ளோம்” என்பதே மோடியின் பேச்சு.
ஆனால் பாராளமன்றத்தில் வருவாய் செயலாளர் ஹஸ்முக் ஆடிய “18 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு தகவல் அனுப்பி இருந்தோம், அதில் 9.27 லட்சம் பேர் பதில் அளித்துவிட்டார்கள்” என்று தகவல் சமர்பிக்கின்றார். இதில் எங்கேயும் 4.5 லட்சம் பேர் திருந்துனதும் இல்லை, 1 லட்சம் பேர் புதியதாக வரி கட்டின தகவலும் இல்லை.  இணைப்பு
போலி நிறுவன ஒழிப்புகள் குளறுபடி!
“நாங்கள் மூன்று லட்சம் போலி நிறுவனங்களை கண்டறிந்துள்ளோம், இந்த நிறுவனங்கள் இந்தியாவின் வளங்களை கொள்ளையடித்த ஹவாலா மோசடி நிறுவனங்கள், அதில் லட்சம் நிறுவனங்களின் உரிமங்கள் இரத்து செய்தோம், ஆம்! புயலாக லட்சம் நிறுவனங்களையும் மூடினோம்” என்கிறார் மோடி.
பாராளமன்றத்தில் பெருநிருவன விவகாரங்கள் துறை அமைச்சகம் தாக்கல் செய்த தகவலில், Section 248 Under Companies Act 2013படி 1,62,618 நிறுவனங்களின் உரிமங்கள் இரத்து என்று 12.07.2017 அன்று தகவல் தாக்கல் செய்துள்ளது. Section 248 என்னவென்றால் நிறுவனம் துவங்கி ஒரு ஆண்டிற்குள் வணிகத்தை துவங்காதவர்கள், இரண்டு நிதியாண்டாக வணிகம் செய்யாதவர்கள், சந்தா கட்டாதவர்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் 13,300 கோடிகள் அளவிலான ஹவாலா மோசடியில் ஈடுபட்டது வெறும் 1155 நிறுவனங்கள் என்று வருமான வாரியத்துறையும் பாராளுமன்றத்தில் தகவல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இணைப்பு
இப்படி வாயை திறந்தாலே பொய்யும், தவறான பொருளாதாரம் சம்மந்தமான குறியீடுகளும் தகவல்களும் என்றாவது ஒருநாள் சர்வதேச நாடுகளின் நன்மதிப்பை இந்தியா இழக்க வழி வகுத்துவிடும்.
2015 ஆம் ஆண்டே மத்திய புள்ளிவிவரங்கள் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு நிர்ணயம் செய்யும் அடிப்படை ஆண்டை 2004-2005 ஆம் ஆண்டில் இருந்து ஆண்டு 2011-2012 என்று மாற்றி மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீட்டை வெளியிட்டது.
“அதில் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளது இது எங்களுக்கு மட்டும் இல்லை நிதி அமைச்சகம், மத்திய ரிசர்வ் வாங்கி மற்றும் மொத்த நிதி ஆதாரங்களும் பாதிக்கப்படும். ஆகையால் அனைத்துலக நாணய நிதியத்தை சேர்ந்த குழு ஒன்றை அனுப்புகிறேன், கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்” என்று சர்வதேச நாணய நிதியத்தின் இந்திய பிரிவு தலைவர் பால் கேஷின் கூறினார். இணைப்பு.  இப்படி சர்வதேச அளவில் கேவலத்தை சந்தித்து, முட்டு சந்தில் அடி வாங்கினாலும், கவலையே படாமல் தங்கள் பொய்யை தொடர்ந்து வருகிறார்கள் மோடியும் அவரது அடியாட்களும்.
இதில் வியப்பான விஷயம் என்னவென்றால், ஒரு அரசியல்வாதி பொய்யை சொல்லி அவ்வப்போது மாட்டிக் கொள்வது இந்திய அரசியல் சூழலில் சகஜம்தான்.  ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் பின்பும், பொய்யை மட்டுமே ஒரு பிரதமர் பேசுவதும், எத்தனை முறை அம்பலப்பட்டாலும் கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாமல் அந்த பொய்க்கு அவர் கட்சித் தொண்டர்கள் முட்டுக் கொடுப்பதும் இந்தியாவில் இருப்பதிலேயே இப்படி ஒரு மானங்கெட்ட கட்சி கிடையாது என்பதையே காட்டுகிறது.
அடுத்த பாராளமன்ற தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெரும் என்று அரசியல் விமர்சர்கள் கூறுகிறார்கள்.  அதற்கு ஏற்றாற்போல தான் இராகுல் காந்தியின் நடவடிக்கைகளும் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் பாஜக செயல்களுக்கு முட்டுக்கொடுக்கும் விதமாக, பணத்தை வாங்கி கொண்டு ஏகப்பட்ட ஸ்லீப்பர்செல்கள் பொய் பிரச்சாரங்களில் தங்களை அருமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். விமர்சனம் என்ற ஒன்றை வைத்தவுடன் நமக்கு “ஆண்டி இந்தியன்” “தேசத் துரோகி” பட்டம் வழங்குபவர்களும் இவர்கள் தான். இவர்களுடன் தான் அடுத்த சில வருடங்களும் பயணிக்க வேண்டும். பாரத் மாதாவிற்கு ஜே!
ராஜரத்தினம் சக்ரவர்த்தி   சவுக்கு

கருத்துகள் இல்லை: