அனிதாவின் மரணம் அரசியல் சமூக தளங்களில் விரிவாக ஆராயப்பட்டு வருகிறது. இதிலுள்ள நீட், அரசுகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றைச் சற்றே விலக்கிவைத்துவிட்டு, தன்னைத் தானே மாய்த்துக்கொண்ட ஒரு மாணவியின் உயிரிழப்பாகப் பார்க்கும்போது உளவியல் ரீதியாக இதை அணுக வேண்டியுள்ளது.
பெற்றோராகட்டும், சமூகமாகட்டும் தோல்வியை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை அடுத்தத் தலைமுறைக்குக் கற்றுத்தரத் தவறிவருகிறோம். மருத்துவராக வேண்டும் என்பது அனிதாவின் பல வருடக் கனவு. அந்தக் கனவு மொத்தமாகக் கண் முன்னால் சுக்குநூறாக நொறுங்கிப் போவது என்பது மாபெரும் வலிதான். ஆனால், அதை எதிர்கொள்ளும் பக்குவத்தை இளம் தலைமுறையினருக்குக் கற்பிக்க வேண்டும். மேலும், ஓர் அனிதா உயிரை மாய்த்துக்கொள்ளக் கூடாது.
எல்.கே.ஜி. சேர்க்கும்போதே இந்தக் கல்லூரியில், இந்தப் படிப்பில் அவனையோ, அவளையோ சேர்க்க வேண்டும் என்று எதிர்காலம் குறித்து திட்டமிடும் பெற்றோர்களில் எத்தனைப் பேர் ஒருவேளை அது முடியாமல் போனால் என்ன செய்வது என்பதைப் பற்றி சிந்திக்கிறார்கள்? எப்போதும் வெற்றி மட்டுமே ஒரே குறிக்கோள் என்று குழந்தையின் மனதில் பதிய வைக்கப்படுவதால்தான் சிறிய தோல்விகள், ஏமாற்றங்களைக்கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தேர்வில் தோற்றுப்போய் தற்கொலை செய்துகொள்பவர்கள் இருப்பதுபோல், தோற்றுப்போவோம் என்ற பயத்தில் தற்கொலை செய்துகொள்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். உலகில் உள்ள யாரும் தோல்வியை விரும்புவதில்லைதான். அதேவேளையில், தோல்வியைச் சந்திக்காதவர்களும் யாருமில்லை என்ற உண்மை ஏன் நமக்குப் புரிவதில்லை?
அனிதாவின் மன தைரியம் அளப்பரியது. அதுதான், தன் உரிமையைப் பெற உச்ச நீதிமன்றம் வரை செல்ல அவரைத் தூண்டியது. இல்லையென்றால் நீட் முடிவுகள் வந்தபோதே அவர் துவண்டுப் போயிருப்பார். வெற்றி சாத்தியம் என்ற நம்பிக்கையே அவரை உறுதியாகப் போராட தூண்டியது. ஆனால், தோல்வி பெற்றதும் ஏமாற்றம், விரக்தி காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டார்.
இதுதொடர்பாகக் கல்வியாளரும் எழுத்தாளருமான அயிஷா நடராசனிடம் பேசியபோது, “தேர்வில் தோல்வியடைந்த குழந்தைகளுக்குத் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையைவிட அவர்களது பெற்றோர், சமூகத்திடம் வரும் அழுத்தமே அதிக அளவு தற்கொலைக்குத் தூண்டுகிறது. இந்த அழுத்தத்தை எப்படி எதிர்கொள்வது என்ற அச்சத்திலேயே அவர்கள் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கின்றனர். அனிதா விவகாரத்தில் மாற்று வழியை அரசு காட்டியிருக்க வேண்டும். ஆனால் அரசு அதில் தவறிவிட்டது” என்று அவர் கூறுகிறார்.
சமீப நாள்களாக மாணவர்கள் தற்கொலை என்பது குறைந்துள்ளது. 10ஆம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களின் தரப் பட்டியல் அறிவிக்கப்படாது என்று தமிழக அரசு கடந்த மே 11, 2017 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை ஒரு அரசாணையாகவும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. அது, மாணவர்களிடம் இருந்த மன அழுத்தத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் குறைத்தது என்பதைச் சுட்டிக்காட்டும் நடராசன், இது ஒரு நல்ல முன்னெடுப்பு என்கிறார். அயல்நாடுகளில் தற்கொலை எண்ணம் உடையவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்குப் பல அமைப்புகள் உள்ளன. ஆனால் நம்மிடம் அந்த வசதிகள் இல்லை. அதை அதிகரிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.
“மருத்துவப் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நீட் வந்ததுபோல் ஜெ.இ.இ. எனப்படும் பொறியியல் நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் கட்டாயமாகும் என்று கூறப்படுகிறது. எனவே, தற்போதிலிருந்தே மாணவர்களுக்கு அது தொடர்பான விழிப்புணர்வை வழங்க வேண்டும். அகில இந்தியத் தேர்வை மாணவர்கள் தயக்கமில்லாமல் எழுத வேண்டுமென்றால் பள்ளிகளிலேயே அதற்கான மாதிரித் தேர்வை அரசு நடத்த வேண்டும்” என்றும் அவர் தெரிவிக்கிறார்.
இது தொடர்பாக மனோதத்துவ நிபுணர் டாக்டர் சுனில்குமார் மற்றும் சுதா காமராஜ் அவர்களிடம் கேட்டோம். இவ்விஷயத்தில் உள்ள பல்வேறு பரிமாணங்களையும் அவர்கள் விளக்கமாகக் கூறுகிறார்கள்:
“ஒரு விஷயத்தை அடைய முடியாது என்று தன்னம்பிக்கை இழக்கும்போது சுய தண்டனை அளித்துக்கொள்ளும் வகையில் தற்கொலைக்கு முயல்கிறார்கள். இந்தத் தோல்வியைத் தன்னால் கடக்க முடியாது என்று மரணத்தைத் தீர்வாக எண்ணுகின்றனர். தங்களின் வேதனைகளை மற்றவர்களிடம் தெரியப்படுத்தத் தற்கொலை செய்துகொள்பவர்களும் உண்டு. அரசு மீதிருந்த நம்பிக்கையை முழுவதும் இழந்ததால் அனிதா இந்த தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம்.
இந்தியாவில் 5 நிமிடத்துக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக உலக சுகாதார அமைப்பு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தற்கொலைக்கு முக்கியக் காரணமாக அமைவது மன அழுத்தம்தான். இதை ஒரு நோயாகக் கருதாமல் மனநல ஆலோசகரிடம் சென்று ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது” என்று சுதா காமராஜ் கூறுகிறார்.
“மாணவர்களிடையே தற்கொலையைத் தடுக்கப் பள்ளி அளவிலேயே ஆசிரியர்களும் பெற்றோர்களும் தோல்வியை எப்படிக் கையாள்வது என்று கற்றுத் தர வேண்டும். மன அழுத்தத்தைக் கையாள்வது, சிக்கலிலிருந்து வெளியே வருவது, முடிவெடுத்தல், உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது, சுய அலசல் உள்ளிட்டவற்றை ஆரம்பப் பள்ளி முதலே மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.
நாளுக்கு நாள் உலகம் போட்டி நிறைந்ததாக மாறிவருகிறது. அதற்கேற்றவாறு அனைவரும் மாறிவருகின்றனர். இதற்கு மாணவர்கள் விதிவிலக்கல்ல. தங்களைச் செம்மைப்படுத்தியே ஆக வேண்டிய நிர்பந்தத்துக்குள் அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான நிர்பந்தத்தினால் உளவியல் ரீதியாக அவர்கள் பல சிக்கல்களுக்கு ஆளாகுகிறார்கள்.
ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு ஏட்டுக் கல்வியை கற்றுக் கொடுக்கிறார்களே தவிர, வாழ்க்கைத் திறன்கள் குறித்துக் கற்றுக்கொடுப்பதில்லை. தோல்விகளை எப்படி எதிர்கொள்வது, மற்றவர்களிடம் எவ்வாறு பேசுவது, ஒரு முடிவை எப்படி எடுப்பது, பிரச்னைகளை எவ்வாறு சரி செய்வது உள்ளிட்ட வாழ்க்கைக்குத் தேவையான நடைமுறைகளையும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். இவை அனைத்தையும் பள்ளி அளவிலே மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து வந்தால் அவர்களைத் தற்கொலை முயற்சியில் இருந்து தடுக்க முடியும்”என்று அவர்கள் கூறுகிறார்கள்.
எந்த ஒரு போட்டியிலும், எந்த ஒரு முயற்சியிலும் எந்தப் போராட்டத்திலும் வெற்றி, தோல்வி இரண்டும் சாத்தியம் என்பதை முதலில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். தோல்வி என்பதும் ஒரு சாத்தியம் என்னும்போது, அந்தத் தோல்வி வந்தால் எப்படி அதை அணுக வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளுதல் அவசியமானது. தோல்வியாக இருந்தாலும் ஏமாற்றமாக இருந்தாலும். அதைப் பக்குவமுடன் அணுக அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். தோல்விகளைத் தாண்டித் தீர்வை நோக்கி முன்னகர அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
இதையெல்லாம் செய்தால் இன்னொரு அனிதாவைப் பறிகொடுக்கும் அவலநிலை நமக்கு ஏற்படாமல் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக