வியாழன், 8 டிசம்பர், 2016

அப்போலோ மருத்துவர்களும் செவிலியர்களும் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதாக ஒரு நியுஸ் நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்


மின்னம்பலம்.காம் ஜெயலலிதா மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. அவருக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனையிலும், அவர் படித்த பள்ளியான பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியிலும் அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும், செவிலியர்களும் அவருடனான தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.
தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களையும், செவிலியர்களையும் தனது வீட்டுக்கு வருமாறும், அவர்களுக்குச் சிறப்பான டீ தயார் செய்து அளிப்பதாகவும் சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தன்னை தினந்தோறும் கவனிக்க வரும் மூன்று செவிலியர்களுக்கும் ‘கிங்காங்’ என்று ஜெயலலிதா செல்லப் பெயரிட்டு அழைத்துள்ளார். அவர்களிடம் ‘உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். நான் செய்கிறேன்’ என்று சிகிச்சையில் இருக்கும்போது ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

“நாங்கள் அவரின் அறைக்குள் நுழைந்ததுமே அவர் எங்களை பார்த்து புன்னகைப்பார். எங்களிடம் சிரித்து பேசுவார். சில நேரம் நாங்கள் இருப்பதற்காகவே சிரமப்பட்டாவது சிறிது சாப்பிட முயற்சிப்பார். அவர் என்ன சாப்பிட்டாலும் எங்களுக்கு ஒரு ஸ்பூன் அளித்துவிட்டு, அவர் ஒரு ஸ்பூன் சாப்பிடுவார்” என்று அந்த மூன்று செவிலியர்களில் ஒருவரான செவிலியர் ஷீலா, ஜெயலலிதாவின் அன்பை நினைவுகூர்ந்தார்.
ஜெயலலிதாவுக்கு பிடித்த உப்புமா, பொங்கல், தயிர் சாதம், உருளைக்கிழங்கு கூட்டு ஆகியவற்றை அவருடைய பிரத்யேக சமையல்காரர் சமைத்து தருவார் எனவும் அவற்றை ஜெயலலிதா முடிந்த அளவு விரும்பி சாப்பிடுவார் எனவும் அந்த மூன்று செவிலியர்களும் தெரிவித்தனர். மூன்று ஷிப்டுகளிலும் 16 செவிலியர்கள் ஜெயலலிதாவை பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்டாலும், ஷீலா, ரேணுகா மற்றும் சாமுண்டேஸ்வரி ஆகிய மூவரும்தான் ஜெயலலிதாவுக்கு பிடித்தமான செவிலியர்கள் என்று தெரிவித்தனர்.
‘செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நிலை மோசமான நிலையில் ஜெயலலிதா அப்பல்லோ கொண்டு வரப்பட்டார். நான்கு மணி நேர சிகிச்சைக்கு பிறகு மீண்டும் அவர் சாதாரண நிலைக்கு திரும்பினார். சகஜ நிலைக்கு வந்ததுமே, தனக்கு சாண்ட்விச்சும், காபியும் வேண்டும் என்று கேட்டார். அவர் மிகவும் களைப்பாக இருந்ததில்லை. சிகிச்சை அளிக்க வரும் மருத்துவர்களிடம் பேசிக் கொண்டிருப்பார். சில நேரங்களில் சருமத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று பெண் மருத்துவர்களுக்கு டிப்ஸ் அளிப்பார். ஒரு சமயம் பெண் மருத்துவர்கள் தங்களை சிகை அலங்காரத்தை மாற்றிக் கொண்டு வர வேண்டும் என கட்டளைகூட இட்டுள்ளார். எவ்வளவு பிசியான வேலை இருந்தாலும், பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள சிறிது நேரம் ஒதுக்க வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கருத்து” என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சத்திய பாமா நினைவுகூர்ந்தார்.
அவருக்கு அப்பல்லோ மருத்துவமனையின் காபி பிடிக்காது. ஒருமுறை தனது அறை முழுவதும் மருத்துவர்களும், செவிலியர்களும் இருக்கும்போது, அங்கிருந்த அனைவரையும் தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்துள்ளார். “வாங்க எல்லாரும் நம்ம போயஸ் கார்டன் வீட்டுக்கு போகலாம். உங்களுக்கு ஸ்பெஷல் கொட நாடு டீ தரச் சொல்கிறேன்” என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பேல் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் போது, ‘நான்தான் இப்போதைக்கு உங்கள் பாஸ். நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும்’ என விளையாட்டாக தெரிவித்துள்ளார். அதற்கு, ‘இந்த மாநிலத்துக்கே நான்தான் தலைவி' என்று அவருக்கு உடனடியாக பதில் அளித்துள்ளார் ஜெயலலிதா.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தேர்தல்களில் அதிமுக வெற்றியடைந்த செய்தியை ஜெயா டிவி-யில் பார்த்ததும் புன்னகைத்தார். ஆனால், இந்த சூழ்நிலை முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாறிப் போயுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அறைக்குள் நுழைந்து வெண்டிலேட்டர் கருவியை சரி செய்து பார்த்த மருத்துவர், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உறுதி செய்துள்ளார். அதன் பிறகு கடந்த திங்களன்று அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. “சிகிச்சை முடிந்த பின்பு எங்களை சட்டமன்றத்துக்கு அழைத்துச் செல்வதாக அம்மா கூறியிருந்தார். ஆனால், இனி அதற்கு வாய்ப்பே இல்லை” என செவிலியர் ஷீலா கூறியபோது அவருக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அப்பல்லோவில் நடந்த நினைவு 75 நாட்களுடன் ஜெயலலிதாவுடன் வாழ்ந்த தாதிகளுக்கு பல நினைவுகளை விட்டுச் சென்றுள்ளது.

கருத்துகள் இல்லை: