minnambalam.com :
செங்கோட்டையன் தலைமையில் அதிமுக மூத்த தலைவர்கள் இன்று (10/12/2016) போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பொதுச் செயலாளர் பதவியை ஏற்குமாறு கோரிக்கை வைத்தனர்.
அதிமுக-வின் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் கட்சிக்கு அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்ததைத் தொடர்ந்து, பல்வேறு வதந்திகள் உலவத் தொடங்கின.
இதுதொடர்பான விவாதங்களும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எழுந்தன.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக-வின் அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, மேயர் சைதை துரைசாமி, அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட முக்கிய அதிமுக நிர்வாகிகள் இன்று போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது செங்கோட்டையன், மதுசூதனன் ஆகியோர் சசிகலாவிடம், ‘அம்மாவுக்குப் பிறகு, கட்சியை வழிநடத்திச் செல்லவேண்டிய பொறுப்பில் நீங்கள்தான் இருக்கிறீர்கள். எல்லோரையும் ஒருங்கிணைத்துச் செல்வதில் உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. கட்சியின் ஒற்றுமையைப் பாதுகாக்க உங்களைவிட்டால் யார் உண்டு. எனவே, நீங்கள்தான் அதிமுக-வுக்கு பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும். அதன்மூலம் தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து முடிவு கட்ட வேண்டும்.’ என்று கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சிக் கேட்டனர்.
அதிமுக-வுக்கு அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற கேள்விக்கு பலவாறு வதந்திகள் உலவின. அதில், செங்கோட்டையன்தான் அடுத்த பொதுச் செயலாளராக வேண்டியவர் என்றும் வதந்தி பரவியது. முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் தொலைக்காட்சி ஒன்றுக்கு இதுகுறித்து கருத்து தெரிவித்தபோது, செங்கோட்டையன் பொதுச் செயலாளர் பதவிக்கு வரவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
மூத்த தலைவரும் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை, ‘’சசிகலாவை 1985லிருந்தே எனக்குத் தெரியும். ஜெயலலிதாவுடன் இருந்து சிறப்பாக செயல்பட்டவர். அவர்தான் கட்சியை வழிநடத்த தகுதியானவர்” என்கிறார். அமைச்சர்களும் வெளிப்படையாக சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக