வியாழன், 8 டிசம்பர், 2016

நீதிமன்ற காப்பகத்தில் ஜெயாவின் 750 செருப்புகள், 10,500 புடவைகள்,800 கிலோ வெள்ளி,தங்கம் .....


பெங்களூரு: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதா மரணமடைந்து விட்டார். இந்த வழக்கு இப்போது என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டால் அத்தோடு அந்த பிரச்சினை ஓயும். பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்யும் பட்சத்தில் ஜெயலலிதாவின் வீடுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ள அவரது பொருட்கள், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும். மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட பிற குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும். 1991-1996ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சுமார் 66.65 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை குவித்தார் என்பது ஜெயலலிதாவின் மீதான குற்றச்சாட்டாகும். 800 கி.கி வெள்ளி, 750 ஜோடி செருப்புகள், 10,500 புடவைகள் மற்றும் 91 கைக்கடிகாரங்கள் போன்ற பொருட்களை வழக்கிற்காக இணைத்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த பொருட்கள் அனைத்தும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த பொருட்கள் கர்நாடகாவில் பெங்களூரு சிவில் கோர்ட் வளாகத்தில் முதல் மாடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களை இரவு பகலாக ஆயுதப்படை போலீசார் பாதுகாத்து வருகின்றனர்.
நான்கு காவலர்கள்
750 செருப்புகள், 10,500 விலை உயர்ந்த புடவைகள் தங்க நகைகள் போன்றவைகள் இரவு பகலாக காவலர்கள் பாதுகாத்து வருகின்றனர். இதில் தங்க நகைகளின் மதிப்பு ரூ. 3.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா தனது அபிடவிட்டில் இதே சொத்துக்களை தெரிவித்துள்ளார்.
2001-2006 இல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, திமுகவின் முயற்சியால் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது. ஜெயலலிதாவிடம் இருந்த புத்திசாலி வழக்கறிஞர்களால் இந்த வழக்கு 18 வருடங்கள் நீட்டிக்கப்பட்டது. செப்டம்பர் 27, 2014 அன்று இந்த வழக்கின் தீர்ப்பை சிறப்பு நீதிமன்றத்தில் அறிவித்தார் சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. ஜெயலலிதா, சசிகலா நடராஜன், இளவரசி மற்றும் வி.என்.சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு வருடங்கள் எளிய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும், ஜெயலலிதாவிற்கு 100கோடி ரூபாயும், மற்றவர்களுக்கு 10கோடி ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டது.
குமாரசாமி விடுதலை
பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. மேல்முறையீடு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்தார். இதனையடுத்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளது.
20 ஆண்டுகால வழக்கு
சொத்துக்குவிப்பு வழக்கு1996ம் ஆண்டு தொடரப்பட்டது. 1997ம் ஆண்டு ஜெயலலிதா வீட்டில் இருந்து புடவைகள், நகைகள், தங்க வளையல்கள், ஒட்டியானம், வைர நகைகள், வெள்ளி பொருட்கள், வெள்ளி வாள் என பல கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் தற்போது ஜெயலலிதாவின் நினைவுகளை சுமந்து கொண்டு இருக்கின்றன. tamiloneindia.com

கருத்துகள் இல்லை: