வியாழன், 8 டிசம்பர், 2016

காங்கிரஸ் திமுக கூட்டணி டமால் ?ராகுல் மீது கோபத்தில் திமுக -..பீட்டர் அல்போன்ஸ்

திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் மறுபடியும் கசப்பு உருவாகியிருக்கிறது. அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவைச் சந்திக்க அக்டோபர் 7ஆம் தேதி தனி விமானம் மூலம் சென்னை வந்த ராகுல் காந்தி, அப்பல்லோ சென்று ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களைச் சந்தித்து பேசி விட்டு டெல்லி சென்றார். அப்போது சென்னை வந்த ராகுல், திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்கவில்லை என்பது சில சலசலப்புகளை ஏற்படுத்திய நிலையில், அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கூட்டணி பற்றி சில கடுமையான கருத்துகளை வெளியிட்டார்.
பின்னர் தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தலும், புதுச்சேரி நெல்லித்தோப்பில் இடைத்தேர்தலும் நடந்தது. தமிழகத்தின் மூன்று தொகுதிகளிலும் திமுக-வை காங்கிரஸ் ஆதரித்தது. புதுச்சேரியில் நாராயணசாமியை திமுக ஆதரித்ததோடு ஸ்டாலின் நாராயணசாமிக்காக பிரச்சாரமும் செய்தார்.
தேர்தல் முடிந்தது. தமிழகத்தின் மூன்று தொகுதிகளிலும் திமுக தோல்வியடைய, புதுச்சேரியில் நாராயணசாமி வென்றார். அதற்கு திமுக-வின் ஆதரவு முக்கிய காரணம் என்பது அனைவருக்குமே தெரியும் என்கிற நிலையில், டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11 மணியளவில் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா மரணமடைந்ததாக அப்பல்லோ நிர்வாகம் அறிவிக்க, 6ஆம் தேதி நடந்த இறுதிச்சடங்கில் பங்கேற்க தனி விமானம் மூலம் சென்னை வந்தனர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்தும். இறுதி வரை இருந்து சென்ற ராகுல் காந்தி, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியைச் சந்திக்காமல் சென்றது திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது.
அக்டோபர் மாதம் 26ஆம் தேதியில் இருந்து உடல்நலம் குன்றிய கருணாநிதி டிசம்பர் 1ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏழு நாட்களுக்குப் பின்னர் நேற்று (07-12-2016) வீடு திரும்பிய நிலையில் டெல்லியில் குலாம்நபி ஆசாத்தைச் சந்தித்த திமுக எம்.பிக்கள் இது தொடர்பான கவலையை குலாமிடம் பகிர்ந்துள்ளார்கள்.
சோனியா காந்தி உடல்நலம் குன்றியபோது அவர் நலம் பெற வாழ்த்துக்கூறி ராகுலுக்கு கடிதம் எழுதினார் கருணாநிதி. ஆனால் சுகவீனமாகி இத்தனை நாட்கள் கழிந்த பிறகும், தமிழகத்துக்கு இருமுறை ராகுல் வந்து சென்ற போதும் கருணாநிதியை நேரிலும் சந்திக்கவில்லை, ஒரு தொலைபேசியிலோ, கடிதத்திலோ கூட உடல்நலம் விசாரிக்கவில்லை. இதுதான் திமுக தொண்டர்களின் கோபத்துக்குக் காரணம்.
இதையடுத்து பீட்டர் அல்போன்ஸ் நேற்று இ-மெயில் மூலம் ராகுல் காந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது: ‘ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக-வை மத்திய பாஜக தனது கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. எனவே அதிமுக-வை நம்பி கூட்டணி கட்சியான திமுக-வை இழந்து விடக்கூடாது. இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவரான கருணாநிதியை சந்திக்காமல் நீங்கள் திரும்பியது திமுக-வினரை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரிக்க விரைவில் சென்னை வர வேண்டும்’. இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார். மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: