புதன், 7 டிசம்பர், 2016

மே.வங்கத்தில் பாஜக தலைவர் மகேஷ் சர்மாவிடம் 33 லட்சம் புதிய 2000 நோட்டுக்கள் .. 6 பேர் கைது

 West Bengal BJP leader Manish Sharma arrestedகொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ரூ33 லட்சம் மதிப்புள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய பாஜக பிரமுகரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது. மேலும், புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்தன. எனவே, செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தி மாற்றி வருகின்றனர்.


அதேசமயம், ஹவாலா பணப் பரிமாற்றம் செய்வோரிடம் கருப்புப் பணம் புழங்குவதாக தகவல் வெளியானது. இதையடுத்து ஹவாலா டீலர்கள் மற்றும் தனி நபர்களிடம் கருப்பு பண புழக்கத்தை தடுக்கும் வகையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சில இடங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை கமிஷனுக்கு மாற்றி தருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் ராணிகஞ்ச் பகுதியில் நிலக்கரி மாபியாக்கள் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும், பழைய ரூபாய் நோட்டுகளை கமிஷனுக்கு மாற்றி தருவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பில் சோதனை செய்த போலீசார், ரூ33 லட்சம் மதிப்புடைய புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ரானிகஞ்ச் பாஜக தலைவர் மகேஷ் சர்மா உள்பட 6 பேரை கைது செய்தனர். தினமலர்,காம்

கருத்துகள் இல்லை: