புதன், 7 டிசம்பர், 2016

எடப்பாடியை பின் தள்ளி மீண்டும் முன்னே வந்த பன்னீர்செல்வம் .. வெங்காயம் உதவி ?


‘எல்லோர் மனதிலும் இருக்கும் சந்தேகம்தான்! சரியான நேரத்தில் பதிவிடப்பட்டு இருக்கும் ஸ்டேட்டஸ்!’ என, ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்க்கு கமெண்ட் போட்டிருந்தது வாட்ஸ் அப். அப்படி என்ன ஸ்டேட்டஸ் அது? பார்த்தோம்.
“மறுபடியும் பன்னீர் எப்படி முதல்வர் ஆனார்? என்ற கேள்வி அதிகாரிகள் மட்டத்திலும், அதிமுக வட்டாரத்திலும் அதிகமாக முணுமுணுக்கப்படுகிறது. அந்த முணுமுணுப்புக்குக் காரணம் சசிகலாவுக்கும் சரி... அவரது சொந்த பந்தங்களுக்கும் சரி... பன்னீரை பிடிக்காமல் போனதுதான். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த சமயத்தில், இனி அவரை காப்பாற்ற முடியாது என்ற சூழ்நிலை வந்தபோது, அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

சசிகலாவின் சகோதரர் திவாகரனோ, ‘எந்தக் காரணத்துக்காகவும் இனி பன்னீரை முதல்வராக்கக் கூடாது. அவர் ரொம்பவும் வளர்ந்துட்டாரு. அதனால, எடப்படி பழனிசாமிதான் சரியான சாய்ஸ். அவரை முதல்வராக்கிடலாம்.’ என்று சசிகலாவிடம் சொன்னதாகச் சொல்கிறார்கள். சசிகலாவின் எண்ணமும் அதுவாகவே இருந்திருக்கிறது. எல்லோரும் எடப்பாடிதான் அடுத்த முதல்வர் என முடிவெடுத்துவிட்டார்கள். அறிவிப்பு செய்யவேண்டியது மட்டுமே பாக்கி. இது தொடர்பாக திங்கள்கிழமை காலை பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், முன்னாள் டிஜிபி ராமானுஜம் ஆகியோரை அதிகாலையிலேயே அழைத்து சசிகலா பேசியிருக்கிறார். இது தொடர்பாக மின்னம்பலத்திலும் அன்று செய்தி வெளியாகியிருந்தது.
அந்த மீட்டிங்கில், ‘எடப்பாடி பழனிசாமியைத்தான் அடுத்த முதல்வராக அறிவிக்க முடிவு செஞ்சிருக்கேன். நீங்க எல்லோரும் அதுக்கு ஒத்துழைப்பு கொடுக்கணும்’ எனச் சொல்லியிருக்கிறார் சசிகலா. குறிப்பாக பன்னீரிடம், ‘உங்க ஒத்துழைப்பு மிகவும் அவசியம்’ என்று சசிகலா சொல்ல… ‘நீங்க என்ன சொன்னாலும் சரிம்மா..’ என்று சொல்லியிருக்கிறார் பன்னீர்.
அந்த மீட்டிங் முடித்து வெளியேவந்த பன்னீர்செல்வம், அவருக்கு நெருக்கமான சில முக்கிய தொழிலதிபர்களிடம் இது சம்பந்தமாக பேசியிருக்கிறார். அவர்கள், தங்களுக்கு வேண்டிய பாஜக பெரும் புள்ளிகளிடம் பேசினார்கள். ஹைதராபாத் முதல்வர் சந்திரபாபு நாயுடு, வெங்கய்யா நாயுடுவிடம் பன்னீருக்காக பேசியுள்ளார். கவர்னரிடமும் சிலர் பன்னீருக்கு சார்பாக பேசியுள்ளார்கள்.
இதையடுத்து, மாலை 2.30 மணியளவில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அவர் சசிகலாவை சந்தித்துப் பேசியிருக்கிறார். பிறகு, அப்பல்லோவில் இருந்து அவர் நேராக போட் கிளப் சாலையில் உள்ள அவரது மகள் வீட்டுக்குப் போயிருக்கிறார். அங்கே வெங்கய்யா நாயுடுவை பன்னீருக்கு ஆதரவானவர்கள் சந்தித்தார்கள். ‘நான் சசிகலாவிடம் பேசிவிட்டேன். நோ பிராப்ளம்’ என்று, அவர்களை அனுப்பிவைத்தார் நாயுடு.
இதேநேரத்தில் தம்பிதுரை, ஜெயகுமார், செங்கோட்டையன் போன்றோர் ‘எடப்பாடி பழனிசாமியை சி.எம். என்று சொன்னால் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர், எங்க எல்லோரையும்விட ஜுனியர். பன்னீரை பொருத்தவரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. அதுவுமில்லாமல் அவர் அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர். அம்மாவால் முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டவர். அதனால், அவர்தான் முதல்வராக இருக்கணும். எடப்பாடி பழனிசாமிதான் என்றால் கட்சியில் குழப்பம் வரும்’ என்று, சசிகலாவைச் சுற்றியுள்ள உறவினர்களிடம் சொல்லிவிட்டார்களாம். இப்படி, வந்த நெருக்கடிகளை சசிகலாவால் சமாளிக்க முடியவில்லை.
அதன்பிறகு, தன் சொந்தங்களை அழைத்துப் பேசியிருக்கிறார். ‘இந்த நேரத்துல குழப்பம் வந்தால் அது எனக்குத்தான் கெட்ட பேரா முடியும். பன்னீர்தான் முதல்வராக இருக்கணும்னு எல்லோரும் சொல்றாங்க. இருந்துட்டுப் போகட்டும். கொஞ்ச நாள் ஆகட்டும் என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.’ என சசிகலா சொல்ல அதை, திவாகரன் உட்பட பலரும் ஏற்கவில்லை. ஆனாலும் அவர்களையெல்லாம் ஒருவழியாக சசிகலாதான் சமாதானப்படுத்தியிருக்கிறார். அதன்பிறகுதான் தலைமை கழகத்தில் எம்.எல்.ஏ. கூட்டம் நடந்தது. ஓ.பன்னீரும், எடப்பாடி பழனிசாமியும் ஒரே காரில் வந்திறங்கினார்கள். கூட்டம் தொடங்கியது. அவைத்தலைவர் மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வர் என்று சொன்னவுடன் எல்லா எம்.எல்.ஏ.க்களிடமும் கையெழுத்து வாங்கப்பட்டது. மூன்று தனிப் பேருந்துகளில் எல்லா எம்.எல்.ஏ-க்களும் பதவியேற்பு விழாவுக்காக கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. ஆனால் 36 எம்.எல்.ஏ.க்கள் மட்டும்தான் ஓ.பி.எஸ். முதல்வர் ஆனதை வரவேற்கிறார்களாம்.” என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ்.மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: