
vikatan.com : உயிரோடு உலவும் மர்மக் கொலைக்காரர் யார்?
சுவாதி கொலை... ராம்குமார் மர்ம மரணம்...கவர் ஸ்டோரி<>‘அம்மா சொன்ன மின் மிகை மாநிலத்தை ராம்குமார் டெஸ்ட் பண்ணி பார்த்து இருப்பார் போல!’
‘தோட்டா செலவு இல்லாமல் சிக்கனமாக என்கவுன்ட்டர் நிகழ்த்த முடியுமா?
என ஸ்காட்லாந்துயார்ட் போலீஸ் பிரமிப்பு!’
‘ஒய்.ஜி.மகேந்திரன் மேடைக்கு வரவும்!’
‘போலீஸ் சொன்னால் அது பொய்யாகத்தான் இருக்கும் என்று
எத்தனை உறுதியாக நம்புகிறது இந்த சமூகம்!’
‘இந்த வழக்கில் இதுவரை சுற்றப்பட்ட பூக்களிலேயே பெரிய பூ இந்த சாவுப்பூதான்!’
‘பலிஆடுன்னு பட்டவர்த்தனமாகவே சொல்லலாம்!’
‘தா.கிருஷ்ணன் அவரே வெட்டிக்கொண்டு இறந்தார்.
அதையே நம்பினோம். இதை நம்ப மாட்டோமா ஆபீஸர்!’
‘காவிகளின் வலையில் வீழ்ந்தாயடா!’
‘தமிழக மின்துறை அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும்!’
இவை
எல்லாம்.... ராம்குமார் மர்ம மரணத்துக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில்
வலம்வரும் கருத்துகள். ‘ராம்குமார் தற்கொலை’ என்பதை நம்ப மறுப்பதைத்தான்,
இந்த விமர்சனங்கள் காட்டுகின்றன. நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில்
தொடங்கி, ராயப்பேட்டை பிணக்கிடங்கு வரை, இந்த இரு மரணங்களும் புரியாத
புதிர்! ‘காவிரி நெருப்பை அணைக்க கரன்ட் ஷாக்’ கொடுத்திருக்கிறார்கள் என
கடும் விமர்சனங்களும் எழுந்துள்ள சூழலில், ராம்குமாரின் மர்ம மரணத்தைப்
பற்றிய தொகுப்பு இங்கே...
‘‘அது நடந்தே விட்டது!’’
‘‘ராம்குமார் குற்றவாளி இல்லை. உண்மைக் குற்றவாளிகளை போலீஸ்
காப்பாற்றுகிறது...’’ என குற்றம்சாட்டி வருபவர், தேசியக் கொடி எரிப்பு
வழக்கில் கைதான திலீபன் மகேந்திரன். பி.ஜே.பி-யின் மாநிலத் துணைத் தலைவர்
கருப்பு முருகானந்தம் கொடுத்த புகாரின் அடிப்படையில், திலீபனை திருச்சி
சிறையில் அடைத்தது போலீஸ். சிறையில் திலீபனை சித்ரவதை செய்ததாக சர்ச்சை
எழுந்தது. இந்த நிலையில், சிறையில் இருந்து ஜாமீனில் வந்த திலீபன் மற்றும்
அவரது வழக்கறிஞர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.
திலீபன்
என்ன சொல்கிறார்? ‘‘ராம்குமார் யார் என்பது சுவாதிக்கும், சுவாதி யார்
என்பது ராம்குமாருக்கும் தெரியாது. சுவாதியை காதலித்ததாக நாடகம் நடத்தி,
அப்பாவி ஒருவனைக் கொன்றுவிட்டார்கள். ‘ராம்குமாரின் உயிருக்கு ஆபத்து
இருக்கிறது’ என ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வந்தோம். ராம்குமார் கைதுக்குப்
பிறகு, பல இடங்களில் விசாரித்து ஆதாரங்களைத் திரட்டினேன். ராம்குமாரின்
ஃபேஸ்புக் அக்கவுன்ட் பாஸ்வேர்டை வாங்கி, சுவாதிக்கும் ராம்குமாருக்கும்
ஃபேஸ்புக்கில் தொடர்பு இருந்ததா என்று தேடினேன். அப்படி எதுவும் இல்லை.
தற்கொலை செய்துகொண்ட டி.எஸ். பி. விஷ்ணுப்பிரியாவின் செல்போனில் உள்ள
தகவல்களை வெளியிட்ட போலீஸ், சுவாதியின் செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர்
ஆகியவற்றில் இருந்த விவரங்களை ஏன் வெளியிடவில்லை? சுவாதி கொலை நடந்த
மறுநாள், ‘சுவாதி இரண்டு வருடங்களாக ஒருவரைக் காதலித்தார்’ என ரயில்வே
டி.ஐ.ஜி பாஸ்கர் சொன்னார். உடனே சுவாதியின் அக்கா நித்யா அதை மறுத்தார்.
ஆனால், சுவாதியை ராம்குமார் காதலித்தார் என போலீஸ் சொன்னபோது, நித்யா
அமைதியாக இருந்தார். அது ஏன்?’’ என்கிறார் திலீபன்.
சிறைக் கம்பிகளுக்குப் பின்னால்!
வேலூர்
சிறையில் கொலைவெறியோடு பேரறிவாளன் தாக்கப்பட்டு ஒரு வாரம் ஆவதற்குள்,
புழல் சிறையில் ராம்குமாரின் மர்ம மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவை மட்டுமல்ல... கடந்த ஒரு மாதத்தில், கடலூர் சிறையில் இரண்டு கைதிகள்
தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளனர்; கோவை மத்திய சிறையில் கழுத்தை
அறுத்து கைதி செந்தில்குமார் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
பாதுகாப்பற்ற இடங்களாகத் தமிழகச் சிறைகள் மாறியுள்ளன. “சிறைக் கைதிகளைப்
பாதுகாப்பது சிறை நிர்வாகத்தின் பொறுப்பு. பெரும்பாலான கொலைகள் உணர்ச்சி
வேகத்தில் நடப்பவை. கொலை செய்தவர்கள் தெளிவடையும்போது, மிகுந்த மன
உளைச்சலுக்கு ஆளாவார்கள். அவர்களுக்குத் தேவையான மனநல ஆலோசனையை வழங்க
வேண்டியது சிறை நிர்வாகத்தின் கடமை. ஆனால், அவர்களைத் தனிமைச் சிறையில்
அடைத்து மேலும் மன நோயாளி ஆக்குகிறார்கள்’’ என்கிறார் வழக்கறிஞர்
புகழேந்தி.
கருப்பு முருகானந்தம் யார்?
“சுவாதி
கொலை வழக்கில் மூளையாகச் செயல்பட்டார்” என கருப்பு முருகானந்தத்தை குற்றம்
சாட்டுகிறார்கள் ஃப்ரான்ஸில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர் தமிழச்சியும்,
திலீபன் மகேந்திரனும். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பு
முருகானந்தம், பி.ஜே.பி-யின் மாநில துணைத் தலைவர். சென்னை துறைமுகப்
பொறுப்புக் கழக இயக்குனராகவும் உள்ள கருப்பு முருகானந்தம் மீது கொலை, கொலை
முயற்சி, கொலை மிரட்டல், கந்து வட்டி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பிரிவுகளில்
22 வழக்குகள் உள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது,
இவருக்கு ஆதரவாக தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கே
பிரசாரம் செய்தார். சமீபத்தில், பிரதமர் மோடியை கருப்பு முருகானந்தம்
சந்தித்துள்ளார். இவ்வளவு செல்வாக்கு மிகுந்த கருப்பு முருகானந்தம், தன்
செல்வாக்கை சுவாதி கொலைக்குப் பயன்படுத்தினார் என்பதுதான் அவர்களின்
குற்றச்சாட்டு.
முருகானந்தம்
நம்மிடம், “சுவாதி யார் என்று எனக்குத் தெரியாது. அவர் அப்பாவோடு சேர்ந்து
திட்டமிட்டு கொலை செய்தேன் என்று தகவல் பரப்புகிறார்கள். யார் என்றே
தெரியாத ஒரு நபரை கற்பனையாகவே உருவாக்குகிறார்கள். இந்த வழக்கில், சி.பி.ஐ
விசாரணை வேண்டும் என்று மனுதாக்கல் செய்யலாம் என்று
திட்டமிட்டிருக்கிறேன்’’ என்றார்.
“தோள்பட்டையில் சீராய்ப்பு!”
புழல்
சிறையில் இருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ராம்குமார் கொண்டு
வரப்பட்டார். ராயப்பேட்டை மருத்துவ அதிகாரி சையது அப்துல் காதரிடம்
பேசினோம். “ ‘4.45 மணிக்கு ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார்.
ஆம்புலன்ஸில் ஏற்றி வந்தபோது, இதயத் துடிப்பு இருந்தது. வரும் வழியில்தான்
உயிரிழந்தார்’ என அம்புலன்ஸில் வந்த டாக்டர் நவீன் என்னிடம் தெரிவித்தார்.
மார்ச்சுவரிக்கு உடலை அனுப்பினோம். ராம்குமார் 5 மணிக்கு
உயிரிழந்திருக்கலாம். அவரது இடது தோள்பட்டையில் சிராய்ப்பு இருந்தது’’
என்றார்.
‘‘ராம்குமார் செய்தது தவறு’’
சுவாதி
கொலை வழக்கில், சுவாதியின் நண்பர் முகமது பிலால் சித்திக் போலீஸின்
விசாரணை வளையத்தில் இருந்தார். ‘‘இந்த வழக்கை போலீஸார் நன்றாகக்
கொண்டுசென்றனர். ஆனால், சிறைத்துறை கவனமில்லாமல் நடந்துகொண்டதே ராம்குமார்
தற்கொலைக்குக் காரணம். இந்த வழக்கில் ஆரம்பத்தில் எப்படி செயல்பட்டேனோ
அப்படியே இப்போதும் செயல்படுவேன். கொலையா? தற்கொலையா? என்பது விசாரணையின்
முடிவில்தான் தெரியும். பார்ப்போம்’’ என்றார் பிலால் சித்திக்.

போலீஸ்
வட்டாரத்தில் சிலர், ‘‘இந்தக் கொலைகளில் சம்பந்தப்பட்ட மர்மக் கொலையாளி
யார் என்ற மர்மம் கொடி கட்டிப் பறக்கிறது. சுவாதியை இரண்டு பேர்
கொன்றார்கள், சுவாதியை பெங்களூருவில் இருந்து வந்த மனிதர்கள்
விரட்டினார்கள் என்ற நிலையில் ராம்குமார் மட்டும் கைதுசெய்யப்பட்டார்.
இப்போது ராம்குமாரும் மர்மமாக மரணம் அடைந்துவிட்டார். ராம்குமார் உயிருடன்
இருந்தால் அவர் உண்மைக் குற்றவாளியைச் சொல்லிவிடலாம் என்று பயந்தவர்கள்
இப்படிச் செய்துள்ளார்கள். சுவாதியின் குடும்பத்தினர், கருப்பு
முருகானந்தம், தமிழச்சி, பிலால் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டும்.
மதச்சார்பு அமைப்புகள் சிலவற்றின் நெட்வொர்க் இதில் கண்காணிக்கப்பட
வேண்டும். அப்போதுதான் உண்மைக் குற்றவாளிகள் சிக்குவர்” என்று
கிசுகிசுக்கிறார்கள்.
உண்மைக் கொலையாளியைக் கைது செய்வது எப்போது?
-
ஜோ.ஸ்டாலின், சி.ய.ஆனந்தகுமார், அ.அச்சணந்தி, கே.புவனேஸ்வரி, படங்கள்:
கே.குணசீலன், சொ.பாலசுப்ரமணியன், ச.வெங்கடேசன், தி.குமரகுருபரன்,
தே.தீக்ஷித்
சந்தேகம் கிளப்பும் கேள்விகள்!

‘சுவாதியின் படுகொலையும் ராம்குமாரின் சந்தேக மரணமும் தமிழகக் குற்ற
வரலாற்றின் மர்மப் பக்கங்கள் ஆகிவிட்டன. இருவரின் மரணங்களிலும் ஏராளமான
சந்தேகங்கள்... அவிழ்க்கப்படாத முடிச்சுகள்...

“சுவாதியை ஒரு இளைஞன் ரயிலில் வைத்து அடித்தான்” என பள்ளி ஆசிரியர் ஒருவர்
வாக்குமூலம் அளித்தார். அதுபற்றி ஏன் விசாரிக்கப்படவில்லை? அடித்த மர்ம
நபர் யார்?

‘‘ ‘உங்களுக்குக் கொடுக்க வேண்டியதெல்லாம் கொடுத்துவிட்டேன். இனியும்
தொந்தரவு செய்யாதீர்கள். இல்லை என்றால், நான் போலீஸுக்குப் போவேன்’ என
சுவாதி செல்போனில் பேசியபடி வந்தார்’’ என சுவாதியை ரயில் நிலையத்துக்கு
அழைத்துவந்த ஆட்டோக்காரர் சொல்லியிருக்கிறார். சுவாதியை மிரட்டியது யார்?

சுவாதி கொலைக்கு ஒரு வாரத்துக்கு முன்பு, ராம்குமார் ஹைதராபாத்தில்
இருந்ததாக செல்போன் நிறுவனம் மூலம் பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராம்குமார் ஏன் ஹைதராபாத் போனார்? அங்கு யாரைச் சந்தித்தார்?

சுவாதியின் செல்போனை, கொலை செய்தவன் எடுத்துப்போய்விட்டதாக போலீஸ் சொன்னது. அதுபற்றிய விவரங்கள் எங்கே?

பெங்களூரு போன போலீஸ், அங்கே சுவாதி பணிபுரிந்த நிறுவனம், பெங்களூரு நண்பர்கள் என யாரை விசாரித்தது?

சுவாதியின் லேப் டாப்பில் இருக்கும் தகவல்களை போலீஸ் ஏன் வெளியிடவில்லை?

சுவாதி பிணமாகக் கிடந்த இடம், சடலம் வைக்கப்பட்ட வீடு என எந்த இடத்திலும் சுவாதியின் தாய் இல்லையே. ஏன்?

‘ராம்குமார் சுவாதியை ஒருதலையாகக் காதலித்தார். அது நிறைவேறவில்லை என்பதால் கொலை செய்தார்’ என எதன் அடிப்படையில் போலீஸ் சொன்னது?

கைதுசெய்யப்பட்டபோது ராம்குமார் தற்கொலைக்கு முயன்றார் என படம் வெளியிட்ட
போலீஸ், இப்போது தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான படத்தையோ, வீடியோவையோ
ஏன் வெளியிடவில்லை?

‘சிறையில் ராம்குமார் பாதுகாப்புக்காகப் பணியில் இருந்த சிறைக் காவலரை இரண்டு நாட்களுக்கு முன்பு மாற்ற வேண்டிய அவசியம் என்ன?

கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிறைக்குள் மின் வயர்கள் எல்லாம்
சுவற்றுக்கு உள்ளேதான் பதிக்கப்பட்டு இருக்கும். பிறகு எப்படி மின் வயரைப்
கடித்தார்? ஸ்விட்ச் போர்டை ராம்குமார் எப்படி உடைத்தார்? பக்கத்தில்
இருந்த காவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக