ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

.புகைச்சலில் முடிந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...! ஜனநாயக நெருப்பு இருப்பதால் புகைச்சல் வருவது இயல்புதான்!

விகடன்.com திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வெறும் 25 நிமிடங்களில் முடிந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பலவித கேள்விகளை எழுப்பியுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அக்கட்சியின் தலைமையிடமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தமிழகம் முழுவதிலிமிருந்தும் மாவட்ட செயலாளர்கள் திரண்டு வந்தனர் இன்று காலை. வழக்கத்திற்கு மாறாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இன்று பலவித நெருடலான சம்பவங்கள் அரங்கேறின.


10 மணிக்கு அறிவிக்கப்பட்டிருந்த கூட்டத்திற்கு திமுக பொதுச் செயலாளர் ஸ்டாலின் 11.15 மணிக்குதான் கூட்டம் நடந்த கலைஞர் அரங்கத்திற்கு வந்தார். அவருடன் அன்பழகனும் வந்தார். நடக்கமுடியாத நிலையில் ஊன்றுகோலுடன் வந்த அன்பழகனை கட்சி நிர்வாகிகள் கைத்தாங்கலாக கூட்டம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர். 10 மணி முதலே அரங்கத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். ஒரு சிலரைத்தவிர மாவட்ட செயலாளர்கள் சிலரது முகத்தில் ஒருவித பதற்றத்தை காண முடிந்தது.

சரியாக 12. 05 க்கு கருணாநிதி அரங்கத்திற்கு வந்தார். கூட்டம் துவங்கி தீர்மான நகல் படித்து முடிக்கும்வரை அவரது முகம் இறுக்கமாகவே இருந்தது. வழக்கமாக மேடையின் கீழ் உள்ளவர்களின் வணக்கத்திற்கு பதில் வணக்கம் சொல்லும் கருணாநிதி இன்று கண்டும் காணாததுபோலவே மேடையில் அமர்ந்திருந்தார். அருகிலேயே ஸ்டாலின் அமர்ந்திருந்தும் எப்போதாவதுதான் அவரை திரும்பிப்பார்த்தார். பல சமயங்களில் விட்டத்தை நோக்கியே அவரது பார்வை இருந்தது.
கருணாநிதியின் இந்த இறுக்கத்திற்கு காலையில் கோபாலபுரத்தில் நடந்த நிகழ்வுகளே காரணம் என்று காதை கடித்தனர் சிலர். சில தினங்களுக்கு முன் நடந்த திமுக முப்பெரும் விழாவில் பேசிய கருணாநிதி, 'கழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக கட்டிக்காத்துவருகிறேன். கழகம் நெருக்கடியான நிலையில இருக்கும்போது அதை விட்டு நகரமாட்டேன். இன்னும் 50 ஆண்டுகளுக்கு கழகம் வலுவாக இருக்கும்படியாக கழகத்தை வைத்துவிட்டே வெளியேறுவேன்' என்ற தொனியில் பேசினார்.

இது குடும்பத்திற்குள் சின்ன சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் கருணாநிதி மனவருத்தம் கொள்ளும்வகையில் நிகழ்வுகள் நடந்தது என்கிறார்கள். இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது எதிரொலித்துவிடக்கூடாது என்பதற்காக தந்தையை சமாதானம் செய்யும் நோக்கில் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன், அன்பழகன் ஆகியோருடன் காலையிலேயே கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று பேசினார் என்கிறார்கள். அப்போது, தான் கட்சிக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவன் என்று கருணாநிதி காட்டமாக பேசினார் என்கிறார்கள்.

ஆலோசனை ஒரு நல்ல முடிவை எட்டியபிறகே ஸ்டாலினும் மற்றவர்களும் அங்கிருந்து புறப்பட்டனராம். இருப்பினும் தனது வருத்தத்தை வெளிக்காட்டும் விதமாகவே 10 மணி கூட்டத்திற்கு 12. 05 க்கு கருணாநிதி வந்ததாக சொல்கிறார்கள். மேடையிலும் வழக்கத்திற்கு மாறாக உற்சாகம் குறைந்த முகத்துடனே இருந்தார். கூட்டம் எப்போது முடியும் என்ற உணர்வுதான் அவரது முகத்தில தென்பட்டது. தீர்மானங்கள் வாசித்து முடித்ததும் சம்பிரதாயமாக கூட்டம் முடிக்கப்பட்டது.
வெளியே வந்தவர் யாருடைய முகத்தையும்  பார்க்காமல் விறுவிறுவென தனது சக்கர நாற்காலியுடன் காரில் ஏறி கிளம்பினார். அரங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்டாலின் முகம் இறுக்கமாகவே இருந்தது. விருதுநகர் மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் உடன் டென்ஷனாக பேசியபடி அரங்கத்திலிருந்து அறிவாலயத்திற்கு நடந்தே சென்றார். அவரைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் பலரும் வெளியே வந்தனர். அவர்களின் தலைவர் மற்றும் தளபதியின் வாட்டம் அவர்களிடமும் தொற்றிக்கொண்டிருந்தது. ஜெ. அன்பழகன், சேகர், காஞ்சி மாவட்ட செயலாளர் எம்.கே சுந்தர், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, சுரேஷ்ராஜன், நேரு உள்ளிட்டோர் முகங்கள் இறுக்கமாக இருந்தன. முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன்  மற்றும் சிலர் மட்டும் கொஞ்சம் ரிலாக்ஸாக அரங்கத்திற்கு வெளியே சுற்றிக்கொண்டிருந்தனர்.

அவித்த கடலை பிரியரான தங்கபாண்டியன் அரங்கித்திற்கு வெளியே கடலை விற்றுக்கொண்டிருந்த பெண்மணியிடம் கடலை வாங்கி தின்றுகொண்டிருந்தவர், பார்க்கும் மாவட்ட செயலாளர்களிடம் அதை பகிர்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தார். பின்பு காரில் ஏறியபின்னரும் அதே பெண்மணியிடம் ஒரு பை நிறைய வாங்கிக்கொண்டே கிளம்பினார்.

கூட்டம் துவங்கியதும் சமீபத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் சற்குணப் பாண்டியன், மறைவுக்கு இரங்கல் தெரிவித்தபின் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் : 1

 வி.பி. சிங் பிரதமராக இருந்த நேரத்தில்,  கருணாநிதி மேற்கொண்ட  அணுகுமுறையின் காரணமாக  காவிரி பிரச்சினைக்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றத்தின்  இறுதித் தீர்ப்பை  எப்படி அமல்படுத்துவது என்பதை நடுவர் மன்றம்  மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது.  “காவிரி மேலாண்மை வாரியம்” (Cauvery Management Board)   - “காவிரி ஒழுங்காற்றுக்  குழு” (Cauvery Water Regulation Committee)    என்ற இரண்டு அமைப்புகளை உருவாக்கி, இவைகளின் மூலம் நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டு மென்று காவிரி நடுவர் மன்றம்   குறிப்பிட்டிருக்கிறது.   இந்தக் காவிரி மேலாண்மை வாரியத்திற்குத் தான் அரசியல் அங்கீகாரம் உண்டு.

கர்நாடக அரசைக் கேள்வி கேட்கவும், கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கவும் இந்தக் குழுவுக்குத் தான் அதிகாரம் உண்டு.  இந்தக் குழுக்களை குறிப்பிட்ட காலத்திற்குள்  மத்திய அரசு அமைத்திருந்தால்  இப்போது ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகள் எல்லாம் வந்தே இருக்காது.  இந்தக் குழுக்களை அமைக்க வேண்டுமென்று தமிழகத்திலிருந்து எல்லா தரப்பினரும் தொடர்ந்து வற்புறுத்தியும், மத்திய அரசு என்ன காரணத்தினாலோ  இவைகளை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவதை  மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. இனியாவது உடனடியாக இந்தக் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய  அரசு அமைக்க வேண்டு மென்று வற்புறுத்தி கேட்டுக் கொள்வது.

 ஜெயலலிதா,  அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டங்களை கூட்ட தமிழகத்திலே உள்ள  அனைத்துக் கட்சிகளின் சார்பில் வேண்டுகோள் விட்டபோதும், கூட்டத்தைக் கூட்டாமல் தன்னிச்சையாக  செயல்பட்டு  வருகிறார்.  ஆனால் தண்ணீரை கொடுக்க வேண்டிய இடத்திலே உள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா, கர்நாடகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைப் பல முறை கூட்டியிருக்கிறார்.  முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் இத்தகைய சர்வாதிகாரப் போக்கினை  மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

தீர்மானம்   :  2.

காவிரிப் பிரச்னைக்காக  தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள்  குரல் கொடுத்து வரும் நிலையில், கர்நாடகத்தில்  வன்முறைகள் தலைதுாக்கி, பல கோடி ரூபாய் இழப்புகளை  கர்நாடகத்தில் தமிழர்கள் சந்திக்க வேண்டிய  நிலை ஏற்பட்டது.  கர்நாடகத்தில் சிறையிலே இருந்த கைதிகளை விடுவித்து அவர்கள் மூலமாக,  அந்த மாநிலத்தில் வாழும் தமிழர்கள் மீது தாக்குதல்  நடைபெற்றுள்ளது.
வழக்கமாக குறுவை சாகுபடிக்கென ஜூன் 12ஆம் தேதி வாக்கில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும்  இதற்குரிய முன்னேற்பாட்டுப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்க வேண்டும்.  மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை எடுத்துச் செல்லும் ஆறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றை சீரமைத்துப் பராமரிப்பதோடு மட்டுமன்றி, மேட்டூர் அணை நீர்வரத்தை உறுதி செய்யும் வகையில், அணையின் நீர் மட்டத்தைக் கண்காணிப்பதுடன், போதிய நீர் வரத்து இல்லை எனில் கர்நாடக மாநில அரசுடன் பேசி நீர் வரத்தை உறுதி செய்திருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிகளைச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல் தமிழக அரசு செயலற்றுத் தூங்கிக் கொண்டிருந்த காரணத்தால், தமிழகம் முழுவதுமுள்ள விவசாயிகளே சாலையில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். எதிர் விளைவாகக் கர்நாடக மாநிலத்தில் உள்ளவர்களும் போராடும் நிலை ஏற்பட்டதோடு, இருமாநில மக்களிடையே மோதலும், பொருள் சேதமும் ஏற்பட்டது.
கர்நாடகத்தில் நிலவிய  இத்தகைய வன்முறைகளை மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு,  இழப்புக்கு ஆளானவர்களுக்கு உரிய நிவாரணத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறது. - என 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.- அ. சையது அபுதாஹிர், எஸ்கிருபாகரன்>படங்கள்: நிவேதன்<

கருத்துகள் இல்லை: