சனி, 24 செப்டம்பர், 2016

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் பல்கலை கழக பேராசிரியர் ஆகிறார்

புதுடில்லி : இந்திய பிரதமராக 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10
ஆண்டுகள் பதவியில் இருந்தவர் மன்மோகன்சிங். 2014-ம் ஆண்டு பார்லி., தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் அவர் மூன்றாவது முறையாக தொடர்ந்து பிரதமராகும் வாய்ப்பு பறிபோனது.
தற்போது மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் மட்டும் பங்கேற்கும் அவர், மற்ற நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட முடிவு செய்திருந்தார். இந்நிலையில் பஞ்சாப் பல்கலைக்கழகம், மன்மோகன்சிங்கை மீண்டும் பேராசிரியர் பணிக்கு வருமாறு அழைத்தது. அந்த அழைப்பை மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டுள்ளார்.    சிறந்த உலகம் போற்றும் பொருளாதார நிபுணர் திரு.மன்மோகன்சிங் அவர்கள். அவர்களிடம் பாடம் படிக்க இருக்கும் மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.


பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் ஜவகர்லால் நேரு இருக்கையில் பொருளாதாரத் துறையின் தலைவர் பதவியை அவர் வகிக்க உள்ளார். கடந்த ஆண்டே பேராசிரியர் பணியை ஏற்று மாணவர்களுக்கு பொருளாதாரம் பற்றி பாடம் நடத்த மன்மோகன்சிங் திட்டமிட்டார். ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல். ஏ.க்கள் ஆதாயம் தரும் வேறு எந்த பணிகளிலும் ஈடுபடக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இதனால் பேராசிரியர் பணியை ஏற்க மன்மோன்சிங் ஆலோசித்து வந்தார்.

பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் கவுரவப் பேராசிரியர் பணியை ஏற்றால், அது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்யும் சட்டப் பிரிவுக்குள் வருமா? என்று அவர் மத்திய அமைச்சகங்களுக்கு கடிதம் எழுதி கருத்து கேட்டார். அதன் பேரில் இது தொடர்பாக பார்லி., குழு கூடி விவாதித்தது. அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கவுரவப் பேராசிரியர் பணியை ஏற்கலாம். அது ஆதாயம் தரும் பணியில் வராது என்று தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து மன்மோகன் சிங் பேராசிரியராக பணியாற்ற தடை இல்லை என்று மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. மத்திய சட்ட அமைச்சகம், மத்திய மனிதவள அமைச்சகமும் மன்மோகன்சிங் பேராசிரியராக பணிபுரிய ஒப்புதல் அளித்துள்ளன.

எனவே அவர் விரைவில் கவுரவ பேராசிரியர் பொறுப்பை ஏற்க உள்ளார். அவருக்கு மாதச் சம்பளம் வழங்கப்பட மாட்டாது. அதற்கு பதில் தினசரி படியாக ரூ.5000 வழங்கப்படும். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்த மன்மோகன் சிங் 1954-ல் பட்டம் பெற்றார். பிறகு 1957-ல் அதே பல்கலைக் கழகத்தில் மூத்த விரிவுரையாளராக சேர்ந்தார். 1963-ம் ஆண்டு முதல் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். பொருளாதாரம் குறித்து ஏராளமான புத்தகங்கள் எழுதியுள்ள அவரை மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அரசியலுக்கு அழைத்து வந்து நிதி அமைச்சர் ஆக்கினார்.

கருத்துகள் இல்லை: