ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

பசும்பாலையும் குடிக்காதீங்க! - விலங்குகள் நல வாரியம் பிரச்சாரம்!


minnambalam.com இந்திய விலங்குகள் நல வாரியம் என்பது, மத்திய அரசின்கீழ் இயங்கினாலும் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து விலங்குகளை கொடுமைப்படுத்துவதாக ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால் தமிழனின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும், பசுக்களை கொல்லக்கூடாது; பசு மாமிசம் சாப்பிடக்கூடாது என பசு ரட்சகர்கள் என்ற பெயரில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால், வட மாநிலங்களில் பல தலித் மக்கள் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி இந்திய விலங்குகள் நல வாரியம், ‘பசு மாடுகள் மற்றும் எருமை மாடுகளை கொடுமைப்படுத்தி பால் குடிக்க வேண்டுமா? அப்படிப்பட்ட பாலையும் குடிக்காதீர்கள்’ என இணையதளம் மூலமாக பிரச்சாரம் தொடங்கவுள்ளது.
உணவே மருந்து என்பதற்கேற்ப அனைத்து நோய்களுக்கும் சிறந்து விளங்கி வருகிறது பால். மேலும், பால் சுரக்காத தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பசும்பாலையே கொடுத்து வளர்க்கின்றனர். மேலும், பாலும், பால் பொருட்களும் இந்திய வளர்ச்சியின் அடையாளமாக கருதப்படுகிறது. முன்னொரு காலத்தில் பால் என்பது வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் உணவுப் பொருளாக இருந்தது. ஆனால், அந்த நிலை வெண்மைப்புரட்சிக்கு பின் மாறி, அனைத்து மக்களும் பயன்படுத்தும் வழக்கத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த இந்திய விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு (FIAPO) இணையதளத்தில் ‘பசுக்கள், எருமைகளை கொடுமைப்படுத்தி அவற்றின் பாலைக் குடிக்காதீர்கள்’ என வரும் வெள்ளிக்கிழமை முதல் பிரச்சாரம் செய்யவுள்ளது.
இது குறித்து விலங்குகள் நல வாரிய அமைப்பின் இயக்குநர் அர்பன் சர்மா, “கடந்த சில ஆண்டுகளாகவே பால் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. அந்த தேவையை சமாளிக்க, பசுக்களையும், எருமைகளையும் கொடுமைப்படுத்தாமல் அதிகமாக பால் கறக்க முடியாது. இதனால், அவற்றைக் கொடுமைப்படுத்தியே அதிகமாக பால் கறக்கப்படுகிறது. ஒரு பசு மிக விரைவாக கன்றை பெற்று எடுப்பதில்லை. அப்படியே பசு பெற்றெடுத்தாலும், அந்த கன்று தாயிடமிருந்து சில நாட்களில் பிரிக்கப்படுகிறது. மேலும், பெண் கன்று பாலுக்காக மட்டுமே வைத்து பராமரிக்கப்படுகிறது. ஆண் கன்று பால் தராது என்பதற்காக அவை இறைச்சிக்காக அனுப்பப்படுகிறது அல்லது தெருக்களில் அநாதையாக விடப்படுகிறது.
ஒரு தாய்க்கு பால் சுரப்பதற்காக ‘ஹார்மோன்’ ஊசி செலுத்தப்படுவதில்லை. அப்படி செலுத்துவது சட்டவிரோதமாக கருதப்படுகிறது. ஆனால், அனைத்து மாடுகளுக்கும் இந்த ஹார்மோன் ஊசி செலுத்தப்பட்டு தான் பால் கரக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இயற்கையாக ஒரு பசு கருத்தரிப்பதை தடுத்து, ஊசி மூலம் செயற்கையாக கருத்தரிக்க வைக்கப்படுகிறது. பசு உண்மையாக நமது தாயாக இருந்தால், இதை எல்லாம் நாம் செய்வோமா? இதுபோன்ற கொடுமைகளை, எப்படி பொறுமையாக சகித்துக்கொண்டு இருப்பது? பசுக்களும், எருமை மாடுகளும் சுதந்திரமாக இருக்கும் விலங்குகள். ஆனால், அவற்றை எங்கும் செல்லவிடாமல் தடுத்து ஓர் இடத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்துகின்றனர். எனவே, மக்கள் இதுபோன்ற கொடூரத்தன்மையை புரிந்துகொள்ள வேண்டும்.
மனிதனைத் தவிர மற்ற எந்த பாலூட்டிகளும் மற்ற இன பாலூட்டிகளின் பாலை குடிப்பதில்லை. மனிதன் குறிப்பிட்ட வயதுக்கு மேல் தாயிடம் பால் குடிக்கத் தேவையில்லை. அதற்கு மேல் தேவைப்பட்டால், இயற்கை தேவையானவற்றை அளிக்கும். மேலும், பால் என்பது மனிதர்களின் உடல்நலத்துக்கு அத்தியாவசியம் கிடையாது. எங்காவது நீங்கள் நாயிடம் பன்றி பால் குடிப்பதை பார்த்திருக்கிறீர்களா?. அப்படி இருக்கும்போது, பசுவிடம் நாம் எப்படி பால் குடிப்பது?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதுகுறித்த பிராசாரத்தை வீடியோ காட்சிகளாக பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்திய விலங்குகள் நல வாரியத் தூதராக ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா ரஜினி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விலங்குகள் நல வாரிய தூதர் பதவியில் இருந்து செளந்தர்யா விலகக் கோரி வரும் திங்கட்கிழமை முதல் போராட்டம் நடத்தப்படும் என தமிழர் வீர விளையாட்டுப் பேரவையின் தலைவர் ராஜேஷ் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: