வியாழன், 22 செப்டம்பர், 2016

சென்னை மாணவர்களின் கைப்பைகளில் பயங்கர ஆயுந்தங்கள் .. தமிழ் சினிமா விதைத்த விஷம்

விகடன்.காம்  : சென்னையில் சில கல்லூரி மாணவர்கள் கையில் புத்தகத்தை வைத்திருக்கிறார்களோ இல்லையோ ஆயுதம் வைத்திருப்பது சமீபகால டிரெண்ட்டாக இருக்கிறது. சென்னையில் சில கல்லூரி மாணவர்களுக்கு இடையே ரூட் தல பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதில் அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடப்பதுண்டு. போலீஸாரும் மாணவர்கள் பிரச்னைக்கு நடவடிக்கை எடுத்தாலும் அது தொடர்கதையாகி வருகிறது. கல்லூரி வளாகத்திலேயே கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் நிலையும் உள்ளது.

இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது போலீஸாரும் கவனமாகவே செயல்படுகின்றனர். மாணவர்கள் பிரச்னை என்பதால் அது பலநேரங்களில் பூதாகரமாக வெடித்ததுண்டு. இன்று காலை சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களில் சிலர் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் கல்லூரிக்கு வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிந்ததும் கல்லூரி முதல்வர் காளிராஜ், போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
பிறகு கல்லூரி நிர்வாகம் ஆயுதங்களோடு வந்திருந்த 6 கல்லூரி மாணவர்களை போலீசிடம் ஒப்படைத்தது. அவர்களின் பெயர் விவரம். கொளத்தூரை சேர்ந்த பி.காம் முதலாம் ஆண்டு மாணவர் திணேஷ், குன்றத்தூரை சேர்ந்த பி.காம் இரண்டாமாண்டு மாணவர் செல்லமுத்து, சூளைமேடுவை சேர்ந்த பி.சி.ஏ இரண்டாமாண்டு மாணவர் அருண்குமார், அம்பத்தூரை சேர்ந்த பி.காம். முதலாமாண்டு மாணவர் கார்த்திகேயன், கொடுங்கையூரை சேர்ந்த பி.சி.ஏ முதலாமாண்டு மாணவர் மணிகண்டன், கொரட்டூரை சேர்ந்த பி.காம் முதலாமாண்டு மாணவர் எல்.மணிகண்டன் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸார் நடத்திய விசாரணையில், கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் ஈடுபட மாணவர்கள் ஆயுதங்களுடன் வந்தது தெரியவந்தது.

இதனிடையே, இந்த விவகாரத்தில், கல்லூரியில் இருந்து 70 மாணவர்களை அதிரடியாக இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை: