சனி, 24 செப்டம்பர், 2016

விசாரணை படம், ஆஸ்கரை வென்றே தீரும்!' - (கதாசிரியர் சந்திரகுமார் ) லாக்-அப் மனிதனின் நம்பிக்கை


விகடன்.காம் : வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை திரைப்படம் சிறந்த வெளிநாட்டுப் பிரிவுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ' ஆஸ்கர் விருதைப் பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் விசாரணை படத்திற்கு இருக்கிறது. கண்டிப்பாக ஆஸ்கர் வெல்வோம்' என்கிறார் படத்தின் கதாசிரியர் சந்திரகுமார். 
கோவை, பீளமேடு ஆட்டோ டிரைவர் சந்திரகுமாரின் அனுபவத்தில் இருந்து எழுதப்பட்ட லாக்-அப் நாவலை, விசாரணை திரைப்படமாக வெளிக்கொண்டு வந்தார் இயக்குநர் வெற்றிமாறன். இதுவரையில், வெனிஸ் திரைப்பட விருது, தேசிய விருது என ஏழு விருதுகளைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், மத்திய திரைப்படக் குழு, ஆஸ்கர் விருதுக்கு விசாரணை படத்தை பரிந்துரைத்துள்ளது. இதை அறிந்து உற்சாகத்தில் இருக்கின்றனர் விசாரணை படக்குழுவினர். 
சந்திரகுமாரிடம் பேசினோம். " மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைத்த மத்திய திரைப்படக் குழுமத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதன்முதலாக, என் கதையை படமாக்குவதாக வெற்றிமாறன் சொன்னபோது, ' என் பெயரை டைட்டிலில் போடுவீர்களா?' என்று கேட்டேன். ' உங்களை நான் ஒரு கோடி பேருக்கு அறிமுகம் செய்து வைப்பேன்' என்றார். அடுத்ததாக, ' உலகம் முழுவதும் வாழும் நாடோடிக் குழந்தைகளின் விடுதலைக்கு இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்ய வேண்டும்' என கோரிக்கை வைத்தேன். ' தமிழ்நாட்டில் நமது படம் பேசப்பட்டாலே போதும். உலகம் முழுவதும் என்பது சரியாக இருக்குமா?' என்றார். அவரிடம், ' இது சர்வதேசத்திற்கும் பொருந்தக் கூடிய ஒரு கதைக்களம். உலகம் முழுவதிலும் வாழும் ஏதிலிகளின் வலி அதில் இருக்கிறது. அவர்களை அதிகாரத்தின் கரங்கள் ஒடுக்குகின்றன. அந்த அதிகாரத்திற்கு எதிரான முழக்கம் இந்தக் கதையில் இருக்கிறது' என்றேன். என் கருத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். 

கடந்த ஓராண்டில் ஏழு விருதுகளைப் பெற்றுவிட்டது விசாரணை. இப்படியொரு திரைப்படத்தை, ' மத்திய திரைப்படக்குழு ஆஸ்கருக்கு அனுப்பும்' என்று நாங்கள் நினைக்கவில்லை. எங்களின் எதிர்பார்ப்பை இந்திய தேர்வுக்குழு நிறைவு செய்துவிட்டது. இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதை, விசாரணை படம் பெறும் என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இந்த 21-ம் நூற்றாண்டு என்பது மனித உரிமைகளுக்கான ஆண்டு. ' ஒரு தனிமனிதன் சுதந்திரமானவனாகவும் பாதுகாப்பானவனாகவும் வாழ வேண்டும். அந்த எல்லையை மனித சமூகம் தொட வேண்டும்.
சமூகம் என்கிற கூட்டமைப்பில் தனிமனிதன் எப்போதும் நசுக்கப்படுகிறான். தனிமனிதனின் விடுதலையையும் ஒட்டுமொத்த மக்களின் வளர்ச்சியையும் தீர்மானிக்கக் கூடிய ஒரு பொதுச் சமூகம் உருவாக வேண்டும்' என்பதுதான் உலகம் முழுவதிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் மையக் கருத்தாக இருக்கிறது. அரசுகள் இன்னமும் பழமையான பயங்கரவாத முறைகளான ராணுவ தாக்குதல், போலீஸ் தடியடி என அப்பாவி மக்களின் மீது தாக்குதல்களைத் தொடுத்துக்கொண்டே இருக்கின்றன. இதற்கு நடுவில்தான் மானுட விடுதலையை நோக்கி நாம் நகர்கிறோம். லாக்-அப் கதையும் அதையொட்டித்தான். காட்சிப்படுத்துதல், தொழில்நுட்பம், கலைஞர்களின் அற்புதமான நடிப்பு, நேர்த்தியான இயக்கம் என அனைத்திலும் சிறப்பாக உருவான படம். 
கடந்த 2015-ம் ஆண்டில் டி காப்ரியோ நடித்த 'ரெவனென்ட்' படம் ஆஸ்கரை வென்றது. 200 ஆண்டுகளுக்கு முந்தைய தனிமனிதனின் போராட்டம்தான் கதை. இதற்கு முந்தைய ஆண்டில், '12 இயர்ஸ் ய ஸ்லேவ்' படம் ஆஸ்கரை வென்றது. ஒரு மனிதன் 12 ஆண்டுகள் அடிமைப்படுத்தப்படுகிறான். அந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுதலைக்கான தேவையை முன்வைத்து எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படமாக அது அமைந்தது. 2013-ம் ஆண்டில் ஆஸ்கரை வென்ற ஆஸ்திரேலிய படமும், 1895-ம் ஆண்டு நடந்த போயர் யுத்தத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான். அந்தப் படத்தில், பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றும் ஒரு வீரன், கமாண்டர் ஒருவர் மேல் வழக்குத் தொடுக்கிறான். அந்த அதிகாரியின் அத்துமீறல்களை ஆதாரத்தோடு முன்வைக்கிறான்.
கமாண்டர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுகின்றன. ஆனால், பிரிட்டிஷ் ராணுவம் பெற்றி பெறுவதற்காகத்தான் போயர்களை அடக்குகிறது. ராணுவத்தின் உத்தரவுகளைத்தான் அந்த கமாண்டர் பின்பற்றினார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது, தீர்ப்பை ஏற்றுக் கொண்ட கமாண்டர் வசனம் பேசுவார், ' பிரிட்டிஷ் அரசுக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது' என உயர் அதிகாரிகளைப் பார்த்துக் கேட்பார். தொடர்ந்து, ' நீங்க என்ன செய்யச் சொன்னீர்களோ, அதைத்தான் நான் செய்தேன். என்னைத் தூக்கில் போட வேண்டாம். சுட்டுக் கொல்லுங்கள்' என்கிறான். அதன்படியே தீர்ப்பும் நிறைவேற்றப்படுகிறது.  
தற்போது 2016-ம் ஆண்டுக்கான ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட விசாரணை படமானது, ஆந்திர நிலப்பரப்பில் நடக்கும் ஒரு கதை. சாலையோரப் பணியாளர்கள், சந்தேக வழக்கு என அதிகார அமைப்பு, அவர்களை தங்களுக்கானவர்களாக மாற்றுவதற்கான முறைகளும், கேள்வி கேட்பார் இல்லாமல் இருக்கும் எளியவர்களை இந்த சிஸ்டம் எப்படி நசுக்குகிறது என்பதையும் விவரித்த படம். இந்த சிஸ்டம், ஒடுக்கப்பட்ட மக்களின் மீது தொடர்ந்து அதிகாரத்தை செலுத்திக் கொண்டே இருக்கிறது. அதன் உண்மை முகத்தை உலகுக்கு உரத்துச் சொன்னது விசாரணை திரைப்படம். இந்தக் காரணத்தினால்தான், இத்தாலியில் மனித உரிமைப் பிரிவில் விருதை வென்றது. அனைத்து தகுதிகளோடும் ஆஸ்கர் பயணத்திற்குச் செல்கிறோம். வெற்றிகரமான பயணமாகவே அமையும்" என்றார் நெகிழ்ச்சியோடு. 
லாக்-அப் மனிதனின் கரங்களில் ஆஸ்கர் தவழட்டும்!
-ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை: