லக்னோ,
உ.பி. சட்டசபை தேர்தல் தோல்வியில் இருந்து மகனை
காப்பாற்றுவதற்காக சிவபால் யாதவை முலாயம் சிங் யாதவ் பலிகடா ஆக்கி விட்டார் என மாயாவதி குற்றம் சாட்டி உள்ளார்.
சமாஜ்வாடி கட்சியில் புயல்
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக ஆளும் சமாஜ்வாடி கட்சியில் புயல் வீசி வந்தது. முதல்–மந்திரி அகிலேஷ் யாதவுக்கும், அவரது சித்தப்பாவும், மூத்த மந்திரியுமான சிவபால் யாதவுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதில் சிவபால் யாதவின் முக்கிய இலாகாக்களை பறித்த அகிலேஷ் யாதவ், அவரது ஆதரவாளர்கள் 2 பேரின் பதவியை பறித்தார். ஆனால் கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ், தனது தம்பி சிவபால் யாதவுக்கு ஆதரவாக செயல்பட்டு, மகன் அகிலேஷ் யாதவை மாநில கட்சி தலைவர் பதவியை விட்டு நீக்கினார்.
அந்த பதவியில் தம்பியை அமர்த்தினார். அத்துடன் தம்பியிடம் பறித்த இலாகாக்களை அவரிடம் ஒப்படைக்க மகனுக்கு உத்தரவிட்டார். இதற்கிடையே சிவபால் யாதவை அகிலேஷ் யாதவ் நேற்று முன்தினம் வீடு தேடிச் சென்று சந்தித்தார். இதையடுத்து அவர்கள் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மகனை காப்பாற்ற... இந்த சர்ச்சைகளை தொடர்ந்து முலாயம் சிங் யாதவ் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குரல் கொடுத்தார். நேற்று அவர் ஒரு பரபரப்பு அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:–
மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தோற்பது உறுதி. எனவே இந்த தோல்வியில் இருந்து மகனை காப்பாற்றுவதற்காகத்தான் சிவபால் யாதவை மாநில கட்சி தலைவராக முலாயம் சிங் யாதவ் நியமித்துள்ளார்.
குடும்ப நாடகம் தன் மகன் மீது கொண்டுள்ள அன்பால், அவரிடம் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புதவற்காக, முலாயம் சிங் நன்கு திட்டமிட்டு நடத்தியுள்ள வியூகம்தான் இது. அவருடைய திட்டப்படிதான் இந்த குடும்ப நாடகம் அரங்கேறி முடிந்துள்ளது.
இதன்மூலம், மகனை காப்பாற்றுவதற்காக சிவபால் யாதவை முலாயம் சிங் யாதவ் பலிகடா ஆக்கி விட்டார்.
மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகி உள்ளது. பிஜ்னோர் வகுப்பு கலவரம், அகிலேஷ் யாதவின் தோல்வியை காட்டுகிறது. இனி, உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் தோல்வி, சிவபால் யாதவ் தலையில் விழும். தனது மோசமான ஆட்சிக்கு பின்னும் அகிலேஷ் யாதவ் எல்லா பொறுப்பில் இருந்தும் தப்பித்து விடுவார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக