tamil.thehindu.com :உதயசூரியன் சின்னத்தை தாலியில் அணிந்திருக்கும் ரவியின் மனைவி மைதிலி, மைதிலி அணிந்திருக்கும் தாலியில் உள்ள உதயசூரியன் சின்னம்
பெண்கள் புனிதமாகக் கருதுவது தாலி. அந்தத் தாலியையும் கணவரின் கட்சிக்காக
விட்டுக்கொடுத்து அந்த புனிதத்தில் கட்சியின் சின்னத்தை இடம்பெறச்செய்து
அதையே தாலியாகக் கொண்டு வாழுகின்றனர் விருத்தாசலத்தை அடுத்த மதுரா பட்டி
எனும் எம்.பட்டி கிராமப் பெண்கள்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது மதுரா
பட்டி எனும் எம்.பட்டி கிராமம். இந்தக் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம்
குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராம மக்கள் பெரும்பாலானோர் விவசாயத்தைச்
சார்ந்தே வாழ்கின்றனர்.
இக்கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பான்மையோர் திமுகவின் தீவிர
விசுவாசிகளாக உள்ளனர். கடந்த 1957-ம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட்ட
போது, அப்போது கட்சிக்கு உதயசூரியன் வழங்கப்பட்டது. அப்போது
காங்கிரஸூக்கும், திமுகவுக்கும் இடையே கடும் பகை இருந்த சூழலில் பலர்,
அண்ணாவின் பேச்சாலும், கருணாநிதியின் பேச்சாலும் ஈர்க்கப்பட்டு தீவிரமாகக்
கட்சிப் பணியாற்றியுள்ளனர். கட்சியின் பிடிப்பால் ஈர்க்கப்பட்டு கட்சியின்
தீவிர விசுவாசியானவர்கள், சுயமரியாதை திருமணம் செய்துகொண்டதோடு, தங்கள்
மனைவிக்கு உதய சூரியன் சின்னம் பொருந்திய தாலியையே கட்டியுள்ளனர்.
அதோடு அவர்கள் நிற்கவில்லை தங்கள் வீட்டுக்கு வரும் மருமகள்களுக்கும் உதயசூரியன் சின்னத்தையே தாலியாக அணிந்துவந்துள்ளனர்.
எம்.பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் தான் உதயசூரியன் தாலியை
முதன் முதலில் தனது மனைவிக்குக் கட்டி அப்போது பரபரப்பை ஏற்படுத்தியவர்.
அவரைத் தொடர்ந்து ஹரிகிருஷ்ணன் என்பவர் தனது 4 மகன்களுக்கும் சுயமரியாதை
திருமணம் செய்து வைத்து, உதய சூரியன் பொருத்திய தாலியையே அணியச்
செய்துள்ளார். 13 ஆண்டுகளுக்கு முன் எம்.பட்டியைச் சேர்ந்த ரவி என்பவரை
திருமணம் செய்துகொண்ட மைதிலி என்பவரும் உதயசூரியன் தாலியையே அணிந்துள்ளார்.
இதில் என்ன விநோதம் என்றால், மைதிலியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்
தீவிர அதிமுக என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கணவருக்காக உதயசூரியனை
நெஞ்சில் சுமந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் சுப்ரமணியனை(82) சந்தித்து, திமுகவின் தற்போதைய நிலை
குறித்துக் கேட்டபோது, கருணாநிதியின் பேச்சாற்றலால் ஈர்க்கப்பட்டவன் நான்.
காங்கிரஸிலிருந்து பலரைப் பிரித்து திமுகவில் இணைத்தேன். கட்சியின் மீதான
பிடிப்பை உறுதி செய்யும் வகையில் தான் தாலியில் சின்னத்தை பொருத்தி
சுயமரியாதை திருமணம் செய்துகொண்டதோடு, எனது 5 மகன்களுக்கும் அவ்வாறு
திருமணம் செய்தேன்.எங்கள் ஊரைச் சேர்ந்த கலியபெருமாள், ஹரிகிருஷ்ணன் என
பலர் தீவிரமாக கட்சியை வளர்த்தோம்.
இன்றைக்கும் கட்சிக்கு எந்த பாதகமும் இல்லை. தற்போதைய தலைமுறையினர் விவரம்
புரியாமல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். எனக்காக கட்சி பல
செய்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் நானும் என் கட்சிக்கு உழைக்கவே
விரும்புகிறேன். எனக்கு உடம்பு சுகமா இல்லை, இருந்தாலும் வரும் தேர்தலில்
உதயசூரியனுக்கு ஓட்டு போட ஆசையாக இருக்கு என சொல்லி வந்தார் சுப்ரமணியன்.
துரதிர்ஷ்டவசமாக ஏப்ரல் 16-ம் தேதி அவர் இறந்துவிட்டது அப்பகுதி
மக்களிடத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உதயசூரியன் தாலி அணிந்திருக்கும் ரவியின் மனைவி மைதிலியிடம் கேட்டபோது,
''எனது பெற்றோர் குடும்பத்தினர் அதிமுக, எனக்கு திருமணமாகும்போது எனது
கணவர் சுயமரியாதை திருமணம் தான் செய்யவேண்டும் எனவும், உதயசூரியன் தாலி
தான் கட்டுவேன் என்றார். அந்த மாங்கல்யத்தையே மானசீகமாக ஏற்றுக்கொண்டு
அவரோடு வாழ்ந்துவருகிறேன்'' என்றார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த 82 வயதாகும் ஹரிகிருஷ்ணன் கூறும்போது, ''திமுக என்
ரத்தத்தில் ஊறியது. இன்று கட்சி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால்
அன்று கருணாநிதி உருவாக்கிய இயக்கத்தை உயிருள்ளவரை கட்டிக் காப்போம்''
என்றார்.
ஹரிகிருஷ்ணனின் மூத்த மருமகள் வளர்மதி கூறும்போது, ''எனது சொந்த ஊர்
சேத்தியாத்தோப்பு அருகிலுள்ள கிராமம். என்னை இந்த ஊருக்குத் திருமணம்
செய்து கொடுத்தனர் எனது பெற்றோர். அன்றுமுதல் இன்றுவரை இக்கிராமத்தில்
திமுகவின் ஆதரவு அதிகமுள்ள கிராமம்.இந்தக் கிராமத்தில் உள்ள திமுகவினரைப்
போன்று வேறு எந்த ஊரிலும் நான் பார்த்ததில்லை'' என்றார்.
அதேகிராமத்தைச் சேர்ந்த பெண்களிடம் கேட்டபோது, இக்கிராமத்தில் 2
தலைமுறைகளுக்கு முன் உதயசூரியன் தாலி அணிந்து வந்தனர். தற்போது அது மெல்ல
குறைந்துள்ளது. புதிய கட்சிகளின் வரவும், இன்றைய தலைமுறையினர் மாறுபட்ட
சிந்தனையால் இப்பகுதியில் திமுகவுக்கு முன்பிருந்த பலம் சற்று
குறைந்திருந்தாலும், இன்னும் மெஜாரிட்டியாகத் தான் உள்ளது என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக