.savukkuonline.com :மீண்டும் இரண்டு உயிர்ப்பலிகள் நிகழ்ந்திருக்கின்றன. ஜெயலலிதாவின் சேலம் பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த பச்சையண்ணன் மற்றும் பெரியசாமி ஆகியோர் வெயிலின் உக்கிரம் தாங்காமல் உயிர் இழந்திருக்கின்றனர். ஏற்கனவே ஏப்ரல் 11 அன்று விருத்தாச்சலத்தில் நடந்த பிரச்சாரக் பொதுக் கூட்டத்தில் கருணாகரன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மரணமடைந்துள்ளனர்.
ஜெயலலிதா செல்லும் இடங்களிலெல்லாம் மரணம் தாண்டவமாடுகிறது. இந்த அகோரத்தை கண்டிக்க வேண்டிய ஊடகங்கள் எப்போதும் போல கனத்த அமைதி காக்கின்றன. வட மாநிலத்தில் இறந்து போன காவல்துறையைச் சேர்ந்த ஒரு குதிரைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை இறந்து போன இரண்டு மனித உயிர்களுக்கு கொடுக்க ஊடகங்கள் மறுக்கின்றன. இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவின் முதல் பக்கத்தில் காவல்துறையின் குதிரை சக்திமான் இறந்தது ஐந்து கால செய்தியாக வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் கூட்டத்துக்கு வந்து இருவர் இறந்தது நாலு வரிச் செய்தியாக வெளியாகியுள்ளது. இதுதான் ஊடகங்கள் மனித உயிர்களுக்கு அளிக்கும் மரியாதை.
அதிமுக ஆட்சி ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்ட நிலையில் கூட, ஊடகங்கள் மவுனமாக ஜெயலலிதாவுக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறதென்றால், இத்தனை ஆண்டுகளாக இவர்கள் அரசு குறித்து எந்த மாதிரியான செய்திகளை வெளியிட்டிருப்பார்கள் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
கோடையின் உக்கிரம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் இந்த கொடுமையான நாட்களில், தேர்தல் பிரச்சாரத்துக்காக ஆயிரக்கணக்கான மக்களை ஆடு மாடுகளை பட்டியில் அடைப்பது போல அடைத்து வைத்து பிரச்சாரம் செய்யும் ஒரு கொடுமை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடக்காது.
தேர்தலில் போட்டியிடும் எந்த அரசியல்வாதியும், தேர்தல் நேரத்திலாவது மக்களுக்கான வசதிகளை செய்து தருவார்கள். எப்படியாவது வாக்குகளை அள்ளி விட வேண்டும் என்று தவமாய்த் தவமிருப்பார்கள். ஆனால், தனது ஆட்சியின் மீது கடுமையான எதிர்ப்புகள் நிலவி வருவதை நன்றாக புரிந்தும், ஜெயலலிதா ஆடு மாடுகளைப் போல மக்களை நடத்துகிறார் என்றால் இவரைப் போன்ற கொடிய மனது படைத்தவர் எங்காவது இருக்க முடியுமா ? தேர்தல் நேரத்தில் கூட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், மக்களை வாட்டி வதைக்கும் ஒரு அரசியல்வாதி இருக்கிறார் என்றால், அவர் அத்தனை மக்களையும் முட்டாள்கள் என்று கருதுகிறார் என்பதைத் தவிர்த்து வேறு என்ன புரிந்து கொள்ள முடியும் ?
ஒரு பிரபலமான நடிகையின் மகளாகப் பிறந்து, பின்னாளில் தானும் நடிகையாகிய காரணத்தினால், ஜெயலலிதாவுக்கு பசி, வறுமை, போன்ற சாமான்ய மக்களின் எந்த விதமான சிரமங்களும் தெரிந்திருக்க நியாயமில்லை. பள்ளிக்கே படகு போன்ற காரில் சென்ற செல்வச் சீமாட்டிக்கு வயிற்றில் ஈரத்துணியை கட்டிக் கொண்டு பசியைப் போக்கும் ஏழைகளின் பாடு தெரிந்திருக்காது. மக்கள் ரொட்டி இல்லாமல் பசியால் வாடுகிறார்கள் என்ற தகவலை கேள்விப் பட்ட ப்ரெஞ்சு ராணி மேரி அன்டோனியெட், “ரொட்டி இல்லையென்றால் என்ன ? அவர்களை கேக் உண்ணச் சொல்லுங்கள்” என்று சொன்னதற்கும் ஜெயலலிதாவுக்கும் எவ்விதமான வேறுபாடும் இல்லை.
24 மணி நேரமும் அதீத குளிரில் இருக்கும்படி குளிர்சாதன வசதியோடு இருந்து பழகிய ஜெயலலிதாவால், கண்ணெதிரே மொட்டை வெயிலில் மக்கள் வதங்குவதைப் பார்க்கக் கூடவா முடியாது ? விருத்தாச்சலத்தில் இருவர் இறந்த செய்தியைக் கேட்டு, அவர்கள் இருவரும் நோய்வாய்ப் பட்டு இறந்தார்கள் என்று மனசாட்சியே இல்லாமல் அறிக்கை வெளியிடும் ஜெயலலிதாவிடம் கருணையை எதிர்ப்பார்க்க முடியுமா என்ன ?
செப்டம்பர் 2014ல், ஜெயலலிதா பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர் சிறையில் இருந்த நாட்களில், தமிழகத்தில் அந்த அதிர்ச்சியால் மரணமடைந்தவர்கள் என்று ஜெயா டிவி தினந்தோறும் பட்டியல் வாசித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மரணச் செய்தியும் ஜெயா டிவியில் பிரதானமாக இடம் பெற்றது. உடல் நிலை சரியில்லாமல் நெஞ்சு வலியால் இறந்தவர்கள் கூட, அம்மா அதிர்சியில் இறந்தனர் என்று கட்டுக்கதை கூறப்பட்டது.
இது போன்ற மரணங்களை ஒரே உத்தரவின் மூலம் ஜெயலலிதாவால் அடியோடு நிறுத்தியிருக்க முடியும். ஆனால், அந்த மரணங்களை அணு அணுவாக ரசித்தார் ஜெயலலிதா. சிறையிலிருந்து வந்ததும் அவர் செய்த முதல் காரியம், இறந்தவர்கள் அனைவரின் குடும்பத்துக்கும் 3 லட்ச ரூபாய் கட்சி நிதி வழங்கியதுதான். சிறையிலிருந்து வெளியே வந்த முதல் காரியமாக இறந்தவர்களுக்கு நிதி அளிக்கும் ஒரு நபர் அந்த மரணங்களால் இரும்பூது எய்தியிருக்கிறார் என்பதைத் தவிர வேறு என்ன பொருள் இருக்க முடியும் ? தனக்காக உயிரிழப்பவர்களை ஊக்கப்படுத்துவதைத் தவிர நிதியளிப்புக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?
1996ம் ஆண்டு மிக மிக மோசமான படுதோல்வி அடைந்த ஜெயலலிதா, 1998ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 18 எம்.பி சீட்டுகளை வென்றார். அப்போதே அவருக்கு எது செய்தாலும் வென்று விடலாம் என்ற இறுமாப்பு வந்திருக்க வேண்டும். அதன் பிறகு, தொடர்ந்து 2001 மற்றும் 2011 ஆகிய தேர்தல்களில் பெற்ற பிரம்மாண்டமான வெற்றி, தமிழகத்துக்கு நம்மை விட்டால் விடிவுகாலமே கிடையாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதன் விளைவுதான் அவரது தேர்தல் பிரச்சார நடைமுறைகள்.
தான் சிறை சென்றபோது இறந்தவர்கள் குடும்பத்துக்கு 3 லட்ச ரூபாயை வீசி எரிந்த அலட்சியமே தற்போது பிரச்சாரக் கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வருவதிலும் வெளிப்படுகிறது. 100 நாள் வேலைத் திட்டம் போல, ஒரு நாள் பிரச்சாரத் திட்டம் என்று 300 ரூபாய் அளித்து, காலை 11 மணிக்கே சவுக்கு வேலிகளுக்குள் அடைத்து, மொட்டை வெயிலில், மதியம் முழுவதும் மக்களை அடைத்து வைத்தாலும் இறுதி வெற்றி நம்முடையதே என்ற அகம்பாவமே இந்தக் கொடுமைகளை தொடரச் செய்கிறது.
பொதுமக்கள் இறப்பதையொட்டி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஜெயலலிதா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று கோரியிருப்பது நியாயமான கோரிக்கையே. மருத்துவர் ராமதாஸ் தனது அறிக்கையில், ” நண்பகல் வேளையில் வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகின்றனர். இவ்வளவுக்கு பிறகும் பொதுமக்களை அழைத்து வந்து சுட்டெரிக்கும் வெயிலில் அடைத்து வைப்பதை சாதாரண விதிமீறலாக பார்க்க முடியாது; மாறாக அப்பாவி ஏழை மக்களின் உயிர்களுக்கு தெரிந்தே, திட்டமிட்டே ஆபத்தை ஏற்படுத்தியதாகத்தான் பார்க்க வேண்டும். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் மகுடஞ்சாவடி பொதுக்கூட்ட சாவுகளுக்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் 304 ஆவது பிரிவின்படி அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். மேடையில் தாம் மட்டும் அமர்வதற்காக 20 டன் அளவுக்கு 8 ஆளுயர குளிரூட்டிகளை பொருத்தும்படி நிர்வாகிகளுக்கு ஆணையிடும் முதலமைச்சர் ஜெயலலிதா, கட்சியினருக்கு அடிப்படை வசதி கூட செய்து தராததற்கு இதுவே சரியான தண்டனையாக இருக்கும்.” என்று கூறிது சரியான அரசியல் விமர்சனமே.
விருத்தாச்சலத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்பதை அறிந்தும் மீண்டும் மக்கள் ஜெயலலிதாவின் கூட்டங்களுக்கு வருகின்றனர் என்றால் அது அவர்கள் வறுமையைத் தவிர வேறு எதை உணர்த்துகிறது ? வெறும் 300 ரூபாய்க்காக வாட்டும் வெயிலில் வதங்கவும் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதே, ஜெயலலிதாவின் 5 ஆண்டு கால “சாதனைக்கான” எடுத்துக்காட்டு.
எந்த ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும், முதல் சாவுகள் நிகழ்ந்த பிறகு, உடனடியாக பிரச்சார நேரத்தை மாற்றியிருப்பார்கள். அல்லது மாற்று ஏற்பாடுகளை செய்திருப்பார்கள். ஆனால் ஜெயலலிதா சாதாரண அரசியல்வாதியா என்ன ? தமிழ்நாட்டை பட்டா போட்டு வைத்திருக்கும் மகாராணியல்லவா ? மக்கள் இறக்கிறார்களே என்பதற்காக அவர் சாலையில் பயணம் செய்ய முடியுமா என்ன ? விருத்தாச்சலத்தில் நடந்த முதல் இரண்டு இறப்புகளுக்குப் பிறகு, காஞ்சிபுரத்தில் ஜெயலலிதா பேசிய பிறகு, ஹெலிகாப்டரில் திரும்பாமல், சாலை வழியாக சென்னை திரும்பினார். அப்படி அவர் சாலை வழியாக திரும்புகையில் நகரில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் நேர்ந்தது என்பதை அறிந்திருப்பீர்கள். ஆனால் ஜெயலலிதா சாலை வழியாக திரும்புவதற்காக, அந்தப் பாதையில் இருந்த அனைத்து வேகத் தடைகளும் அவசர அவசரமாக அகற்றப்பட்டன என்பது உங்களுக்குத் தெரியுமா ? அப்படி ஒரு சொகுசு. வாகனத்தில் பயணம் செய்யும்போது லேசான அதிர்வு கூட ஏற்படக் கூடாதாம். அப்படியொரு சொகுசு வாழ்க்கையை விரும்பும் ஜெயலலிதா அரசியிலில் இருந்து ஓய்வுபெற்று, நிரந்தரமாக கொடநாட்டிலேயே வசிக்கலாமே…. இப்படி பிரச்சாரத்துக்காக எங்கும் அலைய வேண்டியதில்லையே… ஆனால், மன்னார்குடி மாபியா மூலமாக இந்த ஐந்தாண்டுகளில் சேர்த்திருக்கும் 80 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணத்தை அரசியலில் இருந்து ஓய்வு பெற்றால் சம்பாதிக்க முடியுமா ?
மக்கள் வெயிலில் வறுத்தெடுக்கப்படுவது ஒரு புறம் என்றால், தன் கட்சி வேட்பாளர்களைக் கூட தன் அருகில் அமர விடாமல் ஒரு நவீன தீண்டாமமையைக் கடைபிடித்து வருகிறார் ஜெயலலிதா. மேடையில் தனக்கு சரி சமமாக ஒருவர் கூட அமரக் கூடாது என்பது எத்தகைய ஒரு ஆணவமான பண்ணையார் புத்தி ? எதேச்சதிகாரத்தில் உச்சத்தில் நின்று ஆணவத்தை அரங்கேற்றி வரும் ஜெயலலிதாவின் காலில் மண்டியிட்டுக் கிடக்கும் அடிமைகள் அக்கட்சியில் இருப்பதனால்தான் ஜெயலலிதாவின் இந்த ஆணவப்போக்கு தங்கு தடையில்லாமல் தொடர்கிறது.
தன் வாழ்விலேயே இந்த குளிர்சாதன வசதியில்லாமல் ஜெயலலிதா இருந்தது இரண்டே இரண்டு தருணங்கள். முதல் முறை 1996ம் ஆண்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயலலிதா சென்ட்ரல் ஜெயிலில் கழித்த 27 நாட்கள். இரண்டாவது பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் கழித்த நாட்கள்.
சிறையில் கழித்த நாட்கள் ஒரு மனிதனுக்கு அனுபவத்தை தந்து பக்குவப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் சிறையிலிருந்து வெளி வந்த பின்னும், தன்து ஆணவப்போக்கை தொடரும் ஆணவ ராணியாக ஜெயலலிதா தொடர்கிறார் என்றால் அவருக்கு நீண்டதொரு சிறைவாசம் காத்திருப்பதற்கான அறிகுறியே.
சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை விரைவில் முடிய உள்ள நிலையில், ஜெயலலிதாவுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பும், மக்கள் மன்றம் அளிக்கும் தீர்ப்பும் நல்ல பாடத்தை புகட்ட உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக