வியாழன், 21 ஏப்ரல், 2016

தேமுதிகவுக்கு தேய்பிறை ....வைகோவுக்கு வளர்பிறை ? அதிர்ச்சி ஆரூடம்? நம்பலாமா?

விகடன்.com :‘மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக களத்தில் நிற்கும் விஜயகாந்துக்கும், வைகோவுக்கும் இந்தத் தேர்தலில் எதிர்பாராத ஆச்சரியங்கள் நிகழலாம்’ என கணிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். குறிப்பாக, ‘உளுந்தூர்பேட்டையில் கேப்டனின் முரசு கொட்டுவது சிரமம்’ என்கிறார்கள். ஆனால், ‘வைகோ வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்’ எனவும் கணிக்கின்றனர்.
தேர்தலுக்குத் தேர்தல் தொகுதியை மாற்றம் செய்யும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், இந்தமுறை உளுந்தூர்பேட்டையில் களமிறங்குகிறார். 2006-ம் ஆண்டு பா.ம.கவின் கோட்டையான விருத்தாசலத்தில் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் ரிஷிவந்தியத்தில் போட்டியிட்டு வென்றார். ஆனால், ‘இந்தமுறை உளுந்தூர்பேட்டையில் அவர் கணக்குப் பலிப்பது சிரமம்’ என்கிறார் அரசியல் பார்வையாளர் ஒருவர்.

” உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ குமரகுருவும், தி.மு.க சார்பில் வசந்தவேலுவும், பா.ம.க சார்பில் வக்கீல் பாலுவும் போட்டியிடுகின்றனர். தொகுதியில் உள்ள கணிசமான உடையார் வாக்குகளை குறிவைத்து இந்திய ஜனநாயகக் கட்சியின் சபா.ராஜேந்திரன் போட்டியிடுகிறார். ஆனால், தொகுதிக்குள் நாற்பது சதவீத ஓட்டுக்களோடு அ.தி.மு.க பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் விழுப்புரம் எம்.பி தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க, வாங்கிய மொத்த வாக்குகள் 18.4 சதவீதம்தான். அதேநேரம், மிகக் கடுமையான சூழலில் போட்டியிட்ட தி.மு.க 28 சதவீதமும் காங்கிரஸ் கட்சி 2 சதவீத வாக்குகளும் வாங்கியது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவின் அசுர வெற்றி, மோடி அலை என பல காரணிகள் நெருக்கினாலும், தி.மு.க வாங்கிய வாக்குகளை குறைத்து மதிப்பிட முடியாது.
அதிலும், தே.மு.தி.க வாங்கிய வாக்குகள் என்பது பா.ம.க, மோடி அலை என அனைத்தையும் உள்ளடக்கியது. இதில், ஏ.சி. சண்முகம், பாரிவேந்தர் ஆகியோரின் சாதி ஓட்டுக்களும் அடக்கம். கணக்குப் போட்டுப் பார்த்தால், தொகுதிக்குள் தே.மு.தி.கவின் செல்வாக்கு என்பது 12 சதவீதம்கூட இல்லை. இந்தமுறை தி.மு.க சார்பில் வசந்தவேலு போட்டியிடுகிறார். வன்னியர் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். அ.தி.மு.கவின் குமரகுரு மீது தொகுதிக்குள் பரவலாக அதிருப்தி இருக்கிறது. ஆனால், முதலமைச்சர் வேட்பாளர் என்று விஜயகாந்த் சொல்லிக் கொண்டாலும், அவர் புதிய வேட்பாளர் அல்ல. நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க, பா.ம.க, பா.ஜ.க என அனைவரும் சேர்ந்தே மூன்றாவது இடத்திற்குத்தான் வந்தார்கள். இப்போது மூன்றாகப் பிரிந்து மோதுகிறார்கள். இந்தப் பிரிவால் அதிகம் பாதிக்கப்படப் போவது தே.மு.தி.கதான். உளுந்தூர்பேட்டையில் டெபாசிட் வாங்கவே 16.7 சதவீதம் வாக்குகள் தேவைப்படும்.
2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 20 சதவீத வாக்குகளை உளுந்தூர்பேட்டையில் வாங்கியிருக்கிறது தே.மு.தி.க. இதற்குக் காரணம், பா.ம.க மீது அதிருப்தியில் இருந்த வன்னியர்கள், எதிர்ப்பாளர்கள் எல்லாம் விஜயகாந்த் பக்கம் திரும்பினார்கள். தலித் வாக்குகளும் கேப்டன் பக்கம் விழுந்தது. ராமதாஸுக்கு எதிராக விஜயகாந்த் என்ற பிம்பம் முன்வைக்கப்பட்டது. அதெல்லாம், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.கவும் பா.ம.கவும் என அண்ணன், தம்பி பாசத்தோடு கைகோர்த்த கையோடு முடிந்துவிட்டது. இப்போது தே.மு.தி.கவின் பா.ம.க எதிர்ப்பு என்பது நமுத்துப்போன பட்டாசுதான். இது எப்படி வெடிக்கும்?
ஆக, ஓட்டுக்கள் சிதறும்போது, என்னதான் விஜயகாந்த் நிற்கிறார் என்றாலும், வெற்றி வாய்ப்பு என்பது சந்தேகம்தான். ரிஷிவந்தியத்தில் கேப்டன் ஜெயிக்கிறார் என்றால், ஜெயலலிதா தலைமையேற்று வெற்றி பெற்ற 190 பேரில் ஒருவராகத்தான் அவரைப் பார்க்க முடியும். தென்காசியில் சரத் வெற்றி பெற்றது எல்லாம் ஒரு சாதனையா? அதைப் போலத்தான் இதுவும். எனவே, உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க முதலிடமும், தி.மு.க இரண்டாவது இடமும், முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படவுமே வாய்ப்பு அதிகம்” என்றார் அதிரடியாக.
அதேநேரம், 20 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் வைகோ, கோவில்பட்டியில் வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம் என்கின்றனர். இந்தத் தொகுதியில் தி.மு.க சார்பில் சுப்ரமணியமும், அ.தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ கடம்பூர்  ராஜூவும் களமிறங்குகின்றனர். சுப்ரமணியம் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கும் என நம்புகிறார். கடம்பூர் ராஜூவும் வைகோவும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், கோவில்பட்டியில் உள்ள தெலுங்கு சமூகத்து மக்களின் வாக்குகள் வைகோவுக்கு முழுமையாகக் கிடைக்கவும் வாய்ப்பு அதிகம். 2014 தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க வேட்பாளர் ஜோயல் 25 சதவீத ஓட்டுக்களை கோவில்பட்டியில் வாங்கினார்.
அப்படிப் பார்த்தால், இப்போது வைகோ நிற்கிறார். தவிர, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக கோவில்பட்டி உள்ளது. சி.பி.ஐ கட்சியின் சோ.அழகர் சாமி ஐந்துமுறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் பரவலாக 35 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். மொத்தம் ஏழு முறை சி.பி.ஐ கட்சி இந்தத் தொகுதியை தக்க வைத்துக் கொண்டிருந்தது. இது, ம.தி.மு.கவுக்குக் கூடுதல் பலம். தவிர, கோவில்பட்டி நாடார்கள் மத்தியில் ஜி.கே.வாசனுக்கு கொஞ்சம் செல்வாக்கு இருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் அருண்குமார் என்ற வேட்பாளர் தெலுங்கு சமூகத்து மக்கள் மத்தியில் பிரச்னையாக இருக்கிறார். கடம்பூர் ராஜூ, சுப்ரமணியம் ஆகிய இருவரைவிடவும் வைகோவுக்கு ஓட்டளிப்பதைத்தான் கோவில்பட்டி மக்கள் விரும்புவார்கள். தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளால் கோவில்பட்டியில் வைகோ பம்பரம் விடுவதற்கான வாய்ப்புகளே அதிகம் என அசரடிக்கின்றனர்.
தேர்தல் களத்தில் இதுவரையில் எதிர்நீச்சல் போட்டே முன்னேறியிருக்கிறார் விஜயகாந்த். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல், பொதுவேட்பாளராக தன்னை முன்னிறுத்தும் அவரது நோக்கத்தால், உளுந்தூர்பேட்டையில் முரசு கொட்டுமா? என்பது தேர்தல் நாளில் தெரிந்துவிடும். துணை முதல்வராக வைகோ வெல்லும்போது, முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த் தோற்பாரா என்ன?
ஆ.விஜயானந்த்
vikatan.com

கருத்துகள் இல்லை: