திறந்தவேனில் நின்றபடி, கொளுத்தும் வெயிலில் தலையில் பச்சைத் துண்டோடு பேச்சைத் தொடங்கிய வைகோ, " தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளாலும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. இந்த இரண்டு கட்சிகளும் மது விஷயத்தில் மட்டும் மிகுந்த ஒற்றுமையோடு இருக்கிறார்கள். தி.மு.க ஆட்சியில் இருந்தால் ஜெயலலிதாவின் தோழி நடத்தும் மிடாஸ் மதுபான ஆலையில் இருந்து சரக்குகளை ஏகபோகமாக வாங்குவார்கள். அ.தி.மு.க ஆட்சியில் இருந்தால், தி.மு.கவினர் நடத்தும் மதுபான ஆலைகளில் இருந்து பல்லாயிரம் கோடிகளுக்கு சரக்குகளை வாங்கிக் கொள்வார்கள்.
இதற்கும் ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. தி.மு.க ஆட்சியில் இருபதாயிரம் கோடிக்கு மிடாஸ் சரக்கை வாங்கினார்கள். இதற்காக, பதினைந்து சதவீத கமிஷனை சசிகலா தரப்பினர் தி.மு.கவுக்குக் கொடுத்தார்கள். இப்போது அ.தி.மு.க ஆட்சியில் வாங்கப்பட்ட தி.மு.கவினரின் சரக்குகளுக்கு பதினைந்து சதவீத கமிஷனை அ.தி.மு.கவுக்கு தி.மு.க கொடுத்துள்ளது. இதை அவர்கள் இல்லையென்று மறுக்கட்டுமே?
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பலமான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம். ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பது வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு. தி.மு.க, அ.தி.மு.க தவிர்த்து மாற்று கட்சி ஆட்சி அமைப்பதற்கு கிடைத்த கடைசி வாய்ப்பு இது. இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், அந்த இரு கட்சிகளின் ஆட்சியால் நாடு நாசமாகத்தான் போகும்" எனக் கொந்தளித்தார் வைகோ.
முன்னதாக, சிவகங்கையில் வைகோ வந்த வேன் பஞ்சர் ஆனது. உடனடியாக டயரை மாற்றும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. உடனே வைகோ, 'வேன் ஆடுவதைக்கூட கூட்டணி ஆடுகிறது' என எழுதுவார்கள் என கமெண்ட் அடித்தார்.
-ஆ.விஜயானந்த்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக