சனி, 23 ஏப்ரல், 2016

பெங்களுருவில் திருக்குறள் மன்ற நூலகம் சூறை: வீதியில் வீசப்பட்ட தமிழ் நூல்கள்

10 ஆயிரம் தமிழ் நூல்களை வீதியில் வீசி, பெங்களுருவில் திருக்குறள் மன்ற நூலகம் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&பெங்களூரில் தமிழர்கள் அதிகளவில் வசித்துவரும் அல்சூர் பகுதியில் உள்ள தாமோதர் முதலியார் தெருவில் அமைந்துள்ளது திருக்குறள் மன்றத்தின் தமிழ் நூலகம். இந்த நூலகத்தின் முகப்பில் பெயர்ப் பலகையில் எழுதப்பட்டிருந்த தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு யாரோ தார்பூசி அழித்தனர்.
இந்த நிலையில், தமிழ் நூலகம் செயல்படுவதை விரும்பாத சமூக விரோதிகள் சிலர் வியாழக்கிழமை நூலகத்தின் பூட்டை சட்ட விரோதமாக உடைத்து, உள்ளே நுழைந்து நூல்கள் அடுக்கப்பட்டிருந்த மரச் சட்டங்களை அடித்து நொறுக்கியதோடு, ஜன்னல்களை உடைத்தெறிந்து, அதன்மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வீதியில் வீசிச் சென்றனர்.

இதுகுறித்து தகலறிந்து நூலகத்துக்கு விரைந்த திருக்குறள் மன்ற நிறுவனரும், நூலகப் பொறுப்பாளருமான நல்லபெருமாள், 40 ஆண்டு காலமாக சேகரித்த நூல்கள் வீதியில் வீசப்பட்டிருப்பதைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதார். இந்த சம்பவம் குறித்து நல்லபெருமாளும், தமிழர் முழக்கம் இதழின் ஆசிரியர் வேதகுமாரும் அல்சூர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தனர்.>1976-ஆம் ஆண்டு முதல் இங்கு செயல்பட்டுவந்த நூலகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழந்தமிழ் இலக்கிய நூல்கள், புதினங்கள், காவியங்கள், கவிதை நூல்கள், சஞ்சிகைகள், நாளிதழ்கள், குறிப்பேடுகள் உள்ளிட்டவை இருந்தன. nakkeeran,in

1 கருத்து:

Selvam சொன்னது…

ஒரு இனத்தை அழிக்க அதன் மொழியை அழிக்க வேண்டும் என்ற ஆரிய/திராவிட/கோட்பாடு பெங்களூருவில் அரங்கேறி இருக்கிறது.
இன அழிப்புக்கு முன் யாழ் நூலகத்தைதான் சிங்களன் எரித்தான்.