வியாழன், 21 ஏப்ரல், 2016

வசந்தி தேவி ஒரு வரலாற்று வாய்ப்பு! ஆர்.கே.நகர் ஒரு ஜனநாயக புரட்சிக்கு தயாரா?

முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர். கே. நகர் தொகுதியில் அவரை எதிர்த்து மக்கள் நலக்கூட்டணியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  களம் காண்கிறார் வசந்தி தேவி.  இவரைப் பற்றி எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் சிலரின் கருத்துக்கள் இங்கே…
அ. மார்க்ஸ் (பேராசிரியர்)
ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயாவை எதிர்த்து ம.ந.கூ சார்பாக டாக்டர் வசந்தி தேவி நிறுத்தப்பட்டுள்ளார்.
சக்கரைச் செட்டியார் அவர்களின் பேத்தி முன்னாள் துணை வேந்தர், முன்னாள் பெண்கள் ஆணையத் தலைவர், கல்லூரி ஆசிரியர் சங்கப் போராளி, அனைவராலும் மதிக்கப்படும் ஒரு அறிஞர் வசந்தி தேவியை ஊழல் பெருச்சாளி ஜெயாவுக்கு எதிராகப் பொது வேட்பாளராக அறிவிக்க திமுக முன் வர வேண்டும்.

ஜெயாவைத் தோற்கடிப்பதில் உண்மையிலேயே திமுகவுக்கு அக்கறை உள்ளதென்றால் ஆர்.கே.நகருக்கு நிறுத்தப்பட்டுள்ள திமுக வேட்பாளரை அவர்கள் திரும்பப் பெறுவதோடு வசந்தி தேவி அவர்களுக்கு ஆதரவளிப்பதாக அறிவிக்க வேண்டும்.
ஆதவன் தீட்சண்யா (எழுத்தாளர்)
மதிப்புமிக்க கல்வியாளரும் பெண்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்களில் இணைந்திருப்பவருமான தோழர்.வசந்திதேவி அவர்களை ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவித்து புதிய அத்தியாயத்திற்குள் பாய்ந்திருக்கிறது வி.சி.க. வாழ்த்துகள்.
பா. ஜீவசுந்தரி (பத்திரிகையாளர்-எழுத்தாளர்)
பெருமதிப்புக்குரிய கல்வியாளர், முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி ஆர்.கே நகர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மக்கள் நலக் கூட்டணியின் மகத்தான பணி இது. திருமாவின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
ச. காமராஜ் (எழுத்தாளர்)
முன்னாள் துணைவேந்தர், முனைவர் வசந்தி தேவியை ஜெயலலிதாவுக்கு எதிராக நிறுத்தியது வியூகம், அரசியல் காய்நகர்த்தல் என்றெல்லாம் குறுக்கவேண்டாம் தோழர்களே. இந்த அரசியல் எங்கேயோ எப்படியோ சம்பாதித்தவரைத்தேடிக்கொண்டுவந்து இந்தா இவர் தான் உங்கள் வேட்பாளர் என்று போடுகிறது. ஏற்கனவே சம்பாதித்தவரை இன்னொருமுறையும் சகித்துக்கொள்ள இன்னொருகட்சி கெஞ்சுகிறது. இந்தப்புழுக்கத்தில் இருந்து வெளிவந்த மாதிரி ஒருவேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்த அறிவிப்பே பெரும் கொண்டாட்டத்திற்கானது. ஜெயித்தாலும் தோற்றாலும் இது ஒரு முன்னுதாரணம். இது ஒரு உடைப்பு. இதை ரசிக்கிற எல்லோருக்குள்ளும் மாற்றத்திற்கான வேட்கை தனியாமல் தகிக்கும். நல்லவர்கள் அதிகம் புழங்கும் இடமாக தமிழக சட்டசபை மாறினால் பொதுமக்கள் வேண்டாமென்றா சொல்லிவிடுவார்கள். வெற்றிபெறுகிற வேட்பாளரை நிறுத்தியிருக்கவேண்டும் என்று கருத்துச்சொல்லுகிற தோழர்களுக்கு ஒன்று சொல்லவேண்டும்.
அப்படியெல்லாம் எங்கும் செய்து விற்கிற பொருளல்ல வேட்பாளர்கள். யாரை வெற்றிபெறச்செய்யவேண்டும் என்கிற முடிவு மக்களின் ஆட்காட்டி விரல் நுனியில் புதைந்திருக்கிறது. அந்த விரல்களைத்திசை திருப்பவேண்டும். திரும்பும். நல்லவர்களை கொண்டாடுவோம். வாழ்த்துக்கள் வசந்திதேவி நீங்கள் வெற்றிபெற்றுவிட்டீர்கள்.
அ. ராமசாமி (பேராசிரியர்)
கவன ஈர்ப்பு அரசியல்.
====================
பொதுப்போக்கில் வேறுபாடுகளை முன்மொழிவதும் உருவாக்குவதும் பின் நவீனத்துநிலை. வித்தியாசங்களின் கலவையே பின் நவீனத்துவம் கொண்டாடும் குறுங்கதையாடல்களின் மையம். பெருங்கதையாடல்களைக் குலைத்துப் போட இன்னொரு பெருங்கதையாடலை உருவாக்குவது மரபான அல்லது நவீனத்துவத் தந்திரம். பெருங்கதையாடலைக் குறுங்கதையாடலால் கீறிப் பார்ப்பது பின் நவீனத்துவத் தந்திரம்.
ஒற்றை நபர் அதிகாரம், ஒற்றைக் கட்சியதிகாரம் என்ற பெருங்கதையாடலை மறுதலிக்கக் கூட்டணி ஆட்சியென்ற மாற்றுக் குரலை ஓங்கியொலிக்கச் செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இன்று கோட்பாட்டு ரீதியான பின் நவீனத்துவக் கட்சியாக மாறியிருக்கிறது. இது காத்திரமான வித்தியாசம்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் பேரா.வே.வசந்திதேவி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடச் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அவரை எதிர்க்கப்போவது இப்போதைய தமிழக முதல்வர்.இவ்விருவரில் யார் பெருங்கதையாடலின் குறியீடு? யார் குறுங்கதையாடலின் குறியீடு என்று விளக்கிச் சொல்லவேண்டியதில்லை.
வித்தியாசங்களை விரும்புபவர்கள் வசந்திதேவிக்கு வாக்களிக்க வேண்டும். வித்தியாசத்திற்கு வாக்களித்து அதன் ருசியை இன்னதென்று உணர்ந்து பார்க்கும் வாய்ப்பு வேறு தொகுதி வாக்காளர்களுக்குக் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
அரிஅர வேலன் (சமூக செயற்பாட்டாளர்)
முனைவர் வசந்திதேவியை இராதாகிருட்டிணன் நகரில் மக்கள்நலக் கூட்டமணியின் பொதுவேட்பாளராக தொல்.திருமாவளவன் அறிவித்திருக்கிறார். திருமாவளவனாருக்கு பாராட்டும் வசந்திதேவியாருக்கு வாழ்த்துகளும்.
1992ஆம் ஆண்டில் நெல்லை மனோண்மணீயம் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக அறிவிக்கப்பட்ட நாளில் செய்தித்தாளில் அவரைப் பற்றிய குறிப்பு எழுதுவதற்காக தகவல் திரட்டிக்கொண்டிருந்தோம். அதற்காக தொ.மு.சி. ரகுநாதனாரை தொடர்புகொண்ட பொழுது அவர், வசந்திதேவி பாரதியாருக்கு நண்பரான சக்கரைச்செட்டியாருக்கு பெயர்த்தியென்றும் முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியனாருக்கு மகள் முறையரென்றும் இடதுசாரி சிந்தனையாளர் என்றும் கூறினார். அத்தகவலையே செய்தியாக்கினோம்.
அவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பெற்றதும் பல முற்போக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆய்வகத்திலிருந்து களத்திற்கு (Lab to Land) என்னும் தலைப்பில் கல்வியாளர்களை, மாணவர்களை, ஆசிரியர்களை, சமூகச்செயற்பாட்டாளர்களை அழைத்து கருத்தரங்குகள் நடத்தி அவை தந்த படிப்பினைகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தை மாற்றியமைத்தார். கல்வி வணிகமயமாவதை தடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் கூறிக்கொண்டே இருந்தார்; அதே வேளையில் துணைவேந்தராக இருந்தும் தன்னால் ஏன் அம்முயற்சியில் ஓரடியைக்கூட எடுத்துவைக்க முடியவில்லை என்பதனையும் வெளிப்படையாக எடுத்துரைத்தார். மாணவர்களை அடிக்கடி சந்தித்து அவர்களோடு உரையாடி அவர்களது குறைகளைத் தீர்க்க முயன்றார்; அவர்களது ஆளுமையை வளர்க்க பேராசிரியர்கள் கணபதிராமன், ஜேசுதாசன் ஆகியோரைத் தூண்டி பல்வேறு பயிலரங்களை நடத்தினார்.
மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்தபொழுது, அதன் வழங்கிய குறுகிய அதிகாரத்தைக்கொண்டு, பெண்கள் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இயலாமையை வெளிப்படையாக எடுத்துரைத்தார்.
இங்ஙனம் மக்கள்நாயகப்பண்பும் வெளிப்படைத்தன்மையும் இடதுசாரிச்சிந்தனையும் உடைய கல்வியாளர் வசந்திதேவியார் தேர்தலில் வென்று சட்டசபைக்குச் சென்றால் தமிழகம் பெரும்பயன் அடையும். கல்விமேம்பாடும் பெண்கள் அதிகாரம்பெறலும் அவையின் பேசுபொருளாக மாறும். எனவே அவரை வெல்ல வைத்து சட்டசபைக்கு அனுப்பும் பொறுப்பு இராதாகிருட்டிணன் தொகுதி மக்களுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்.
நிறைவாக, தோழர் பாலபாரதிக்கு திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட பொதுவுடைமைக்கட்சி வாய்ப்பளிக்கவில்லை என்று பொங்கியவர்கள் திண்டுக்கல் மண்ணின் மகளான வசந்திதேவியின் வெற்றிக்கு உழைத்து தங்களது ஆதங்கத்தைத் தீர்த்துக்கொள்வார்களாக.   thetimestamil.com/

கருத்துகள் இல்லை: