ilakkiyainfo.com: பலப்பிட்டிய நீதிமன்றின் முன்பாக
இடம்பெற்ற இரட்டைக் கொலை உள்ளிட்ட பல கொலைகளுடன் தொடர்புடைய
தென்னிலங்கை பாதாள உலகக் குழுவின் துப்பாக்கிதாரி என நம்பப்படும்
புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்
ஒருவர் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலியில் வைத்து குறித்த சந்தேக நபரை விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு கைது செய்துள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பாதுகாக்கும் விசேட ஆயுத
படையணியான சார்ள்ஸ் அன்டனி படையணியின் முக்கிய புள்ளியாக திகழ்ந்த
எழிலன் என புலிகளால் அறியப்படும் நபரே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்டேன்லி கெனடி பெர்ணான்டோ என்ற இயற்
பெயரை உடைய இந்தச் சந்தேக நபர் கிரிஷான் எனும் பெயரிலேயே தெற்கு பாதாள
உலகில் வலம் வந்துள்ளதாகவும் கொழும்பு கொட்டாஞ்சேனை, ஜம்பட்டா
வீதியைச் சேர்ந்த இவர் கொட்டாஞ்ச்சேனையில் இடம்பெற்ற பெண் ஒருவரின்
கொலையுடனும் தொடர்புபட்டவர் என விசாரணைகளுக்கு பொறுப்பான உயர்
பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய
வருவதாவது, கடந்த ஞாயிறன்று விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப்
பிரிவுக்கு தென் பாதாள உலக் குழுவின் துப்பாக்கிதாரி தொடர்பில்
தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனையடுத்து காலியில் வைத்து
அதிரடிப்படையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பெரேரா, அதிரடிப்
படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வருணு
ஜயசுந்தர ஆகியோரின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சர்
செனவிரத்ன தலைமையிலான குழுவினர் குறித்த சந்தேக நபரைக் கைது
செய்தனர். இதன்போது அவரிடம் கைத்துப்பாக்கி ஒன்றும் இருந்துள்ளது.
இதனையடுத்து அவரை விசாரணை செய்த போதே சந்தேக நபர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் என்பது தெரியவந்துள்ளது.
கொழும்பு, கொட்டாஞ்சேனை ஜம்பட்டா
வீதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர், மீன் சந்தையில் வேலை செய்த
வவுனியாவைச் சேர்ந்த நண்பர் ஒருவர் ஊடாகவே விடுதலைப் புலிகள்
இயக்கத்தில் இணைந்துள்ளார்.
பின்னர் சார்ல்ஸ் அன்டனி படையணியில் 5
வருடங்கள் இருந்துள்ள அவர் இராணுவ தாக்குதல்களினால் மூன்று முறை
காயமடைந்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது
இராணுவத்திடம் சரணடைந்த குறித்த சந்தேக நபர் பயங்கரவாத
புலனாய்வுப் பிரிவினரால் 21 மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை
செய்யப்பட்ட பின்னர் புனர்வாழ்வுக்காக பூஸா முகாமுக்கு
அனுப்பட்டுள்ளார்.
இதன் போதே தெற்கு பாதாள உலகத்துடன் சந்தேக நபருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
தெற்கின் பிரபல பாதாள உலக குழுவான கொஸ்கொட
சுஜித்தின் குழுவுடனேயே சந்தேக நபர் பூஸா முகாமிலிருந்த போது தொடர்பினை
ஏற்படுத்திக்கொண்டுள்ளமையும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக