புதன், 20 ஏப்ரல், 2016

மறுபடியும் 18 பேர் பட்டியலை நீட்ட....அம்மா டென்ஷனாகி...இன்னும் எத்தன தடவைதான் மாத்திறதுன்னு....

விகடன்.com அமைச்சரவை மாற்றத்திற்கு இணையாக, வேட்பாளர் மாற்றத்திலும் கின்னஸ் சாதனை படைக்க இருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா. ' சின்னம்மாவின் ஆதிக்கம்தான் வேட்பாளர் மாற்றத்திற்குக் காரணம். இன்னும் சிலர் மாற்றப்படலாம்' என கார்டனில் இருந்து வரும் செய்திகள் அ.தி.மு.கவினரை கலங்கடிக்கின்றன. சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் தீவிரமாக இருக்கிறார் ஜெயலலிதா. ஆனால், சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில், 20-ம் தேதிக்கு பிறகு மக்களைச் சந்திக்கச் சொல்லுங்கள் என அறிவுறுத்தியுள்ளதால், வேட்பாளர்கள் சிலர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.  தி.மு.க, மக்கள் நலக் கூட்டணியின் வேட்பாளர்கள் களத்தில் மக்களைச் சந்தித்து வாக்குகளைக் கேட்டு வருகின்றனர். ஆனால், அ.தி.மு.க வேட்பாளர்களோ, 'மாற்றம் வரலாம்' என்ற பயத்தில் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றனர். 'இந்த முறை யார் யாருக்கு சீட் கிடைக்காது' என கட்சிக்காரர்கள் பந்தயம் கட்டினார்களோ, அவர்கள் எல்லோருக்குமே சீட் கிடைத்து வருகிறது. அமைச்சர்கள் பழனியப்பன், மோகன், சண்முகநாதன் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. யாரை எதிர்ப்பது, யாரை அரவணைப்பது? என்ற சந்தேகம் மாவட்ட கட்சிக்காரர்களிடம் மேலோங்கி இருக்கிறது. 'இப்படியொரு குழப்பமான சூழ்நிலை இதுவரையில் ஏற்பட்டது இல்லை' என ஆதங்கப்படுகின்றனர் அவர்கள்.


'வேட்பாளர் மாற்றத்திற்கான பின்னணி என்ன?' என்ற கேள்வியை கார்டன் வட்டாரத்தைச் சேர்ந்த கட்சிக்காரர் ஒருவரிடம் கேட்டோம்.
" இதுவரையில் நடந்த மாற்றங்கள் அனைத்தும் சின்னம்மாவின் (சசிகலா) கண்ணசைவில் நடந்ததுதான். நேற்று காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு இரவு கார்டனுக்குள் வந்தார் அம்மா. அன்று காலைதான் எட்டு பேர் மாற்றப்பட்டு, அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்ட சிலருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டிருந்தது. அம்மா வந்த சில நிமிடங்களில் சசிகலாவும் இளவரசியும் மீண்டும் 18 பேர் கொண்ட பட்டியலை அம்மாவிடம் நீட்டியுள்ளனர். அந்தக் காகிதத்தைப் பார்த்ததும் அம்மா ஏகத்துக்கும் டென்ஷனாகிவிட்டார். 'இன்னும் எவ்வளவு பேரைத்தான் மாத்திகிட்டே இருக்கிறது. இனி என்னால யாரையும் மாற்ற முடியாது. இந்தப் பதினெட்டு பேர் பட்டியலுக்கு ஓ.கே சொல்ல முடியாது. ஏற்கெனவே போடப்பட்ட அந்த பதினெட்டு பேர் தோற்றாலும் பரவாயில்லை. என்னோட கணக்கு 117 சீட்தான்' என கோபத்தைக் காட்ட, அவரை சமாதானப்படுத்திவிட்டு, ஏதோ சொல்ல முயற்சித்திருக்கிறார் சசிகலா.
இதனால், மேலும் டென்ஷனான ஜெயலலிதா, ' சரியில்லாத வேட்பாளரைப் போட்டாலும் நான் எப்பவும் உறுதியாக இருப்பேன். இப்படியெல்லாம் மாத்திகிட்டே போறது அவ்வளவு நல்லது இல்லை. இனி யாரையும் மாற்ற முடியாது' என கண்டிப்போடு சொல்லிவிட்டார். அவரை சமாதானப்படுத்தும் வேலைகளில் இறங்கிவிட்டார் சசிகலா. இவ்வளவு தூரம் அம்மா கோபப்பட்டு பார்த்து வெகு நாட்களாகிறது. வேட்பாளர் மாற்றம் உறுதியாக இருக்காது என்று நம்புவதா? சின்னம்மாவின் சமாதானத்திற்குப் பிறகு மீண்டும் 18 பேர் மாற்றல் பட்டியல் வருமா? என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியும்" என்றார் அதிரடித் தகவலோடு. 

'அமைச்சர்கள் சிலருக்கு மீண்டும் லக் அடித்தது எப்படி?' என்ற கேள்வியை அ.தி.மு.க சீனியர் ஒருவரிடம் கேட்டோம்.
" அமைச்சர் பழனியப்பன் சில விஷயங்களை மறைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடினார். அவருக்கு அதிரடி ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டதால், வழிக்கு வந்தார். இருப்பினும் அவருக்கு சீட் தர மறுத்துவிட்டார் அம்மா. இதையடுத்து, சின்னம்மாவை சந்தித்து காலில் விழுந்தார் பழனியப்பன். உடனே, பாப்பிரெட்டிப்பட்டியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது.  அதேபோல், அமைப்புச் செயலாளரான மோகன், வெளியில் சின்னம்மாவைப் பற்றி ஏதோ பேசியிருக்கிறார். அவருக்கு சீட் கொடுக்காமல், சங்கராபுரம் ஒ.செ.ராஜசேருக்கு சீட் வழங்கப்பட்டது. வேறுவழியில்லாமல் சின்னம்மா காலில் சரணடைந்தார் மோகன், அவரிடம், ' அமைப்புச் செயலாளர் பதவி வரைக்கும் உங்களை ஆளாக்கிவிட்டால், இப்படித்தான் வெளியில் பேசுவீங்களா?' என கோபத்தோடு பேச, அப்படியே அடங்கிப் போனார் மோகன். கொங்கு மண்டலத்தை ஆண்ட ராவணனின் ஆசிர்வாதத்தில் எம்.பி பதவியை ராஜினாமா செய்து, எம்.எல்.ஏவாகி, அதே நேரத்தில் அமைச்சர் ஆன பெருமைக்கு உரியவர் ஈரோடு கே.வி.ராமலிங்கம். ராவணன் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தபிறகு, கார்டனை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார் கே.வி.ஆர். இப்போது மீண்டும் அவரை வேட்பாளராக அறிவித்துவிட்டார்கள். ஆனால், தி.மு.கவின் முத்துச்சாமிக்கு கே.வி.ஆர்தான் சரியான போட்டி என செய்தி பரவுகிறது. உண்மைக் காரணம், சின்னம்மாவின் பரிபூர்ண ஆசிர்வாதம் கே.வி.ஆருக்கு இருப்பதுதான்.

இதுவரையில், 26 வேட்பாளர்களுக்கு மாற்றாக சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே சின்னம்மாவின் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டவர்கள். இதுதவிர, மாவட்டங்களில் உள்ள நிஜ நிலவரம் பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தனியார் நிறுவனம் ஒன்றை பணியில் அமர்த்தியிருக்கிறார் சின்னம்மா. அந்த தனியார் நிறுவனம் சொல்லும் குறைகளின் பேரில், தனது ஆட்களை மீண்டும் வேட்பாளராக களமிறக்குகிறார் சின்னம்மா. அப்படித்தான் கோவில்பட்டியில் ராமானுஜன் கணேஷ் என்பவர் அ.தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டார். ஆனால், வைகோவுக்கு இவர் சரியான போட்டியில்லை என்பதால், கடம்பூர் ராஜூ நிறுத்தப்பட்டுள்ளார். வைகோவும் இவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என கணக்குப் போடப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளை விமர்சித்து தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும், ‘சொன்னீங்களே... செஞ்சீங்களா?' என்ற விளம்பரத்தை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. மனு அளித்துள்ளது. Please ask to Stop that Advertisement, ADMK Cry in Election CommissionPlease ask to Stop that Advertisement, ADMK Cry in Election Commission | அதை செய்ய சொல்லாதீங்க..! -தேர்தல் ஆணையத்திடம் கதறும் அ.தி.மு.க. - VIKATAN
மேலும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இங்கு புவனேஸ்வரன் என்ற வேட்பாளருக்குப் பதில் சண்முகநாதன் போடப்பட்டிருக்கிறார். இதனால் வெற்றி எளிதாகும் என்ற கணக்குதான். பாளையங்கோட்டையில் தமிழ்மகன் உசேனுக்கு எதிர்ப்பு வலுத்ததால், ஹைதர் அலிக்கு வாய்ப்பு  கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரக்கோணத்தில் தி.மு.க வேட்பாளர் பவானி மாற்றப்பட்டு ராஜ்குமார் நியமிக்கப்பட்டார். இவருக்கு ஈடுகொடுக்க மணிவண்ணன் என்ற வேட்பாளரால் முடியாது என்ற காரணத்திற்காக, சிட்டிங் எம்.எல்.ஏ ரவிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. தோல்விக்கான காரணம் என்று சொல்லி மாற்றம் நடந்தாலும், பின்னணியில் இருப்பது சின்னம்மா மட்டும்தான். உளவுத்துறை அறிக்கை, தனியார் ஏஜென்சி ரிப்போர்ட், மன்னார்குடி நெருக்கடி என பலமுனை நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கிறார் அம்மா. எல்லாவற்றையும் தாண்டித்தான் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரமும் செய்து வருகிறார்" என்றார் அவர் விரிவாக.

மியூசிக்கல் சேர் ஆட்டம்கூட, சில நிமிடங்களில் நின்றுவிடும். அ.தி.மு.கவில் நடக்கும் அதிகாரத்திற்கான மியூசிக்கல் சேர் ஆட்டத்தால் அதகளப்படுகிறார்கள் 'அதிகாரப்பூர்வ' வேட்பாளர்கள்.

-ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை: