எதிர்க்கட்சிகள் அனைத்தும், அவர்
போட்டியிடும், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், பெண் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளன. தி.மு.க., சார்பில் சிம்லா,
பா.ம.க., சார்பில் ஆக்னஸ், தே.மு.தி.க., - மக்கள் நலக் கூட்டணி சார்பில், முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
முதல் முறையாக, இந்த தேர்தலில், 227 தொகுதிகளில், அ.தி.மு.க., போட்டியிடுகிறது.
அதனால், தன் வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சூழ்நிலையில், அவருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, அவர் போட்டியிடும், ஆர்.கே.நகர் தொகுதியில், பெண் வேட்பாளர்களை களமிறக்கும் முடிவை, முக்கிய எதிர்க்கட்சிகள் எடுத்துள்ளன.
தி.மு.க., தோல்வி:ஜெயலலிதா, முதன்முதலாக, 1989ல், போடிநாயக்கனுார் தொகுதியில், களம் இறங்கினார். இத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட, முத்து மனோகரனை தோற்கடித்தார்.அடுத்து, 1991ல், பர்கூர் மற்றும் காங்கேயத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996ல், பர்கூரில் போட்டியிட்ட அவர், தி.மு.க., வேட்பாளர் சுகவனத்திடம் தோல்வி அடைந்தார். அடுத்து, 2002, 2006 சட்டசபை தேர்தலில், ஆண்டிபட்டியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியிலும், 2015ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றார். இவர் போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும், எதிர்க்கட்சியான, தி.மு.க., ஆண் வேட்பாளர்களையே களம் இறக்கியது.இம்முறை ஜெயலலிதாவை எதிர்த்து,
காங்கிரஸ் சார்பில் குஷ்புவை களம் இறக்க, காங்கிரஸ் விரும்பியது. ஆனால், தொகுதியை விட்டுத் தர, தி.மு.க., முன்வரவில்லை. எனவே, வழக்கறிஞர் சிம்லா என்ற பெண் வேட்பாளரை களம் இறக்கியுள்ளது.அதைத் தொடர்ந்து, தனித்து போட்டியிடும், பா.ம.க.,வும், ஆக்னஸ் என்ற பெண் வேட்பாளரை களம் இறக்கியுள்ளது.
மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ள, தே.மு.தி.க., - மக்கள் நலக் கூட்டணி சார்பில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் களம் இறங்கக்கூடும் என தகவல் பரவியது. இறுதியாக அந்தக் கூட்டணியினரும், ஜெயலலிதாவை எதிர்த்து, பெண் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்து, கல்வியாளர் வசந்தி தேவியை களம் இறக்கி உள்ளனர். அதுவும், அக்கூட்டணியின் பொது வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
கடும் நெருக்கடி:ஜெயலலிதாவை எதிர்த்து, ஆண் வேட்பாளர்களை களம் இறக்குவதால், பெண்கள் ஓட்டு கணிசமான அளவுக்கு, ஜெயலலிதாவுக்கு கிடைத்து விடுகிறது. இதை தடுக்கவே, இம்முறை முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும், பெண் வேட்பாளரை களம் இறக்கி உள்ளன. இதனால், ஆர்.கே.நகரில், ஜெயலலிதாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக, எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரும் ஜெயலலிதாவை எதிர்த்து, தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபடும்போது, ஜெயலலிதா தன் பிரசார பயணத்தை ஒத்திவைத்து, ஆர்.கே.நகரில் அதிக நாட்கள் முகாமிட வேண்டிய நிலைமை வரும் என்றும், இக்கட்சிகள் எதிர்பார்க்கின்றன. முக்கிய எதிர்க்கட்சிகள் எல்லாம் இப்படி வியூகம் வகுத்துள்ள நிலையில், தமிழக பா.ஜ., மட்டும் ஆண் வேட்பாளரை, இத்தொகுதியில் களம் இறக்கி உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக