புதன், 3 பிப்ரவரி, 2016

இறுதிச் சுற்று...நொச்சிக்குப்பம்..நிச்சயம் பார்க்க...மாஸ்

charuonline.com:: பைத்தியம் பிடித்து விடுமோ என்று அஞ்சும் அளவுக்கு வேலைப்
பளு.  அதற்கு நடுவிலும் நேற்று நான் (மட்டும்) இறுதிச் சுற்று போயிருந்தேன்.  காரணம், நல்ல தமிழ்ப் படம் பார்த்து மாமாங்கம் ஆகி விட்டது.  மேலும் நான் ஒரு சினிமாப் பைத்தியம்.  இப்படி பல காரணங்கள் இருந்தன.  மேலும், இறுதிச் சுற்று நன்றாக இருப்பதாகப் பல நண்பர்களும் சொன்னார்கள்.  மற்றபடி படத்தின் இயக்குனர் யார் என்று கூடத் தெரியாது.  இப்போது இந்த நிமிடம் வரை கூடத் தெரியாது.  இனிமேல்தான் கூகுளில் தேட வேண்டும்.
பெயர்ப் பட்டியலில் சந்தோஷ் நாராயணனின் பெயரைப் பார்த்து மகிழ்ந்தேன்.  நான் அவர் ரசிகன்.  அவர் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  அவரிடம்தான் தமிழ் சினிமாவில் முதல் முறையாக விளிம்பு நிலை மக்கள் கேட்கும் இசை இடம் பெறுகிறது.  முதல்முறையாக தென்னமெரிக்க இசையும் சேர்ந்திருக்கிறது.  முதல்முறையாக கிழட்டுத்தனம் இல்லாமல் இருக்கிறது.


ஆனாலும் படத்தில் நான் பாடல்களை ரசிக்கவில்லை.  காரணம், பாடல்கள்
இடம் பெறும் இடங்கள் ரொம்ப ரொம்ப செயற்கை.  பாடல் என்றால் அது இடம் பெறுவதற்கான குறைந்தபட்ச தர்க்கமாவது இருக்க வேண்டும்.  அது இந்தப் படத்தில் இல்லை.  ஆனால் பின்னணி இசை மிக நன்றாக இருந்தது.
படத்தில் நடித்திருக்கும் நாயகி நடிகை – தமிழில் கடந்த 20 ஆண்டுகளில் இப்படி ஒரு துள்ளல் நடிப்பை நான் பார்த்ததில்லை.  துள்ளல் மட்டுமல்லாமல் ரச பாவங்களையும் பிரமாதமாக வெளிப்படுத்துகிறார்.  உடலில் ஒவ்வொரு பாகமும் நடித்திருக்கிறது.  அந்தப் பெண்ணுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது.  பத்மினி, சாவித்திரி அளவுக்கு அவர் வரக் கூடும்.  அவர் நடிப்பைப் பார்த்த போது எனக்கு அவர்கள் நினைவுதான் வந்தது.  அதே சமயம் இன்றைய இளைஞர்களின் காலத்தோடும் ஒட்டிப் போகிறது அவர் நடிப்பு.

படம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.  இன்னொரு முறை கூடப் பார்க்கலாம் என்று தோன்றியது.  சமீபத்தில் இப்படி ஒரு நல்ல படத்தைப் பார்க்கவில்லை.  உடனே சாருவுக்கு சினிமா ரசனை போய் விட்டது என்று ஷோபா சக்தி பாரிஸிலிருந்து எழுதுவார்.  நான் உலக சினிமா ரசனைக்கேற்ற கலைப் படங்களையும் பார்ப்பேன்.  இறுதிச் சுற்று போன்ற ஜனரஞ்சக சினிமாவையும் பார்த்தேன்.  அதோடு இதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.  இறுதிச் சுற்று மிக நேர்த்தியான ஒரு ஜனரஞ்சக சினிமா.  இதே கதை அம்சத்தோடு 2007-இல் வந்த ஷாருக் கானின் சக்தே இந்தியா என்ற படத்தை விட இறுதிச் சுற்று நன்றாக இருந்தது.
குரு சிஷ்ய உறவு என்பது தாய் மகன் உறவை விட மேம்பட்டதாக நான் கருதுகிறேன்.  அது இந்தப் படத்தில் பிரமாதமாக வந்திருக்கிறது.
படத்தில் நான் தனிப்பட்ட முறையில் ரசித்தது நொச்சிக்குப்பம்.  நான் நொச்சிக்குப்பம் பற்றி எக்ஸைல் நாவலிலும் மற்றும் சில கட்டுரைகளிலும் எழுதியிருக்கிறேன்.  என் வீட்டுக்கு எதிரே உள்ள – ஐந்து நிமிட நடை – கடற்கரை மீன்பிடிக் குப்பம்.  ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரே நாளில் 3 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும் அந்த இடத்தை நீங்கள் ஒரே ஒரு முறையாவது பார்க்க வேண்டும்.  கார்கள், பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள், இளநீர் வண்டிகள், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீஸ் ஜீப்புகள், சாலையின் இருமருங்கும் வரிசையாக மீன் கடைகள்… நூறு பக்கம் எழுதலாம்.  நொச்சிக்குப்பம் ஒரு தனி உலகம்.  நீங்கள் சைவ உணவுக்காரராக இருந்தாலும் நொச்சிக்குப்பத்தை ஒரு ஞாயிறு அன்று நீங்கள் பார்க்க வேண்டும்.  இறுதிச் சுற்றில் முதல் முப்பது நிமிடங்கள் நொச்சிக்குப்பம்தான்.  அணுஅணுவாக நொச்சிக்குப்பம்.  அதே இடங்கள்.  ஒரு இடம் கூட செயற்கையாகப் போடப்பட்டது அல்ல என்று தெளிவாகத் தெரிகிறது.  தினந்தோறும் நான் நடந்து போகும் இடங்கள்.  உலகில் இத்தனை நெருக்கடியாக எல்லாம் மனிதர்கள் வாழ்கிறார்களா என்று அச்சப்பட வைக்கும் சந்துகள்.  எல்லாம் படத்தில் அப்படி அப்படியே வந்துள்ளது. வா மச்சானே பாடல் காட்சியில் வரும் பிரியாணி கடையும் அப்படியேதான்.  அந்தக் கடை வைத்திருக்கும் தாடிக்காரர் மட்டும்தான் நடிப்பு.  ஆனால் அவரும் அந்த நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர்தான். எனக்கு 25 ஆண்டுக்கால நட்பு.  எப்படியென்றால், முன்பெல்லாம் கலங்கரை விளக்கத்தின் அடியில் வாரம் ஒருமுறை நண்பர்களுடன் நின்று (இரவு எட்டு முதல் பனிரண்டு வரை) ‘பேசிக்’ கொண்டிருப்பேன் அல்லவா, அப்போது எங்களுடைய ஜமாவில் இருந்த நண்பர் அவர்.  சினிமாவில் சின்னச் சின்ன வேடங்களில் தலை காட்டுவார்.  இந்தப் படத்தில் பிரியாணி விற்கிறார்.  படத்தில் வரும் மற்ற நொச்சிக்குப்பத்து மனிதர்கள் தினந்தோறும் நான் பார்த்துப் பழகிய மனிதர்கள்.

07APRThaxl02_Marin_1048053e
புகைப்படங்கள் : நொச்சிக்குப்பம்.  சென்னை கலங்கரை விளக்கத்தின் அருகில் இருக்கிறது நொச்சிக்குப்பம்.
படத்தில் ஒரு நிமிடம்கூட அலுப்பு அடிக்கவில்லை.  ஒரே ஒரு விஷயம்தான் நெருடியது.  ஆனால் ஜனரஞ்சகப் படத்தில் அந்த லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது.  நொச்சிக்குப்பத்தில் இவ்வளவு ‘கலரான’ மீன் விற்கும் பெண் கிடையாது.  இப்போதுதான் பார்த்தேன்.  நாயகியின் பெயர் ரித்திகா சிங். பம்பாய்க்காரப் பெண்.  சிறு வயதிலிருந்தே குத்துச் சண்டை வீராங்கனையாம்.  நடிப்பதற்கு எங்கே பயிற்சி எடுத்தார் என்று தெரியவில்லை.  பின்னியெடுத்திருக்கிறார்.  இயக்குனரும் பெண் போல.  சுதா கோங்குரா.  கோங்குரா சட்னியைப் போலவே செம காரம்.  தமிழில் மாற்று சினிமா எடுப்பவர்கள் இந்தப் படத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்

கருத்துகள் இல்லை: