சனி, 6 பிப்ரவரி, 2016

திமுக செல்வகணபதி பாமக ராமதாசை சந்தித்தார்....

பா.ம.க., நிறுவனர் ராமதாசை, தி.மு.க.,வின் தேர்தல் பணிக்குழு செயலர்
செல்வகணபதி, நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். கூட்டணியில், பா.ம.க.,வை சேர்க்க, தி.மு.க., நடத்திய வளைப்பு நடவடிக்கையே, இந்த சந்திப்பு என, கூறப்படுகிறது. மற்ற கட்சிகளுக்கு முன்னதாக, முதல்வர் வேட்பாளராக, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியை அறிவித்து, சட்டசபை தேர்தலை சந்திக்க, பா.ம.க., ஆயத்தமாகி உள்ளது. ஊரெங்கும் பொதுக் கூட்டம் மற்றும் மாநாடுகளை நடத்தி வருகிறது.தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம், கடந்த சில நாட்களாக, விருப்ப மனுக்களையும் வாங்கி வருகிறது. விரைவில் நேர்காணல் நடத்தி, வேட்பாளர் பட்டியலை வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளது. திட்டுங்க அப்புறம் பேரம் பேசுங்க இதுதான்ட்டா தமிழ்நாட்டு அரசியல். 


இந்நிலையில், முன்னாள் எம்.பி.,யும், தி.மு.க., தேர்தல் பணிக்குழு செயலருமான செல்வகணபதி, நேற்று காலை தைலாபுரத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாசை சந்தித்தார். திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சென்ற அவர், அரசியல் நிலவரம் குறித்து அவருடன் விவாதித்தார்.பின், ஜெயலலிதாவை வீழ்த்த, தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வும் இணைய வேண்டும் என்ற, தன் விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் கட்சியின் பொருளாளர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி. வன்னியர் இனத்தைச் சேர்ந்த அவர், அ.தி.மு.க.,வில்இருந்த காலம் முதல், பா.ம.க., தலைவர்களுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.அதனால், செல்வகணபதி குறித்து, பா.ம.க., மேடைகளில் பெரிய விமர்சனங்கள் எதுவும் இருந்ததில்லை. இந்நிலையில், மார்ச்சில் செல்வகணபதி குடும்ப திருமணம் நடக்கவிருக்கிறது. அதற்காக, ஸ்டாலின் அனுமதி பெற்று, ராமதாசை சந்தித்தார். 'ஜெயலலிதாவை வீழ்த்தியாக வேண்டும் என்பதில், பா.ம.க.,வும் உறுதியாக உள்ளது. எனவே, தி.மு.க., - பா.ம.க., தனித்தனியாக நிற்கும்போது, ஜெயலலிதாவுக்கே, அது பலமாக அமையும். அதனால், இருவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். இது என் எண்ணம் மட்டுமல்ல; தி.மு.க.,வின் எண்ணமும் அதுவே' என, செல்வகணபதி கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்த ராமதாஸ், 'உங்கள் எண்ணம் புரிகிறது. ஆனால், தனித்து போட்டி என அறிவித்து, பல படிகளை நாங்கள் தாண்டி விட்டோம். அன்புமணியை, முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்து, தீவிர பிரசாரமும் நடந்து விட்ட சூழலில், அதிலிருந்து பின்வாங்க வாய்ப்பில்லை. இப்போதைக்கு தனியாகவே தேர்தலை சந்திக்கலாம். தேர்தல் முடிவுக்குப் பின், தேவையானால், கூட்டணி ஆட்சி குறித்து யோசிக்கலாம்' என, கூறியுள்ளார். கூட்டணியில் இணைய வாய்ப்பில்லாமல் போனாலும், ராமதாஸ், தி.மு.க.,வை அரவணைப்பதில் தயங்கவில்லை என்பதால், தி.மு.க., திருப்தி அடைந்துள்ளது.இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் கூறின.

பிடி கொடுக்க மறுத்தது ஏன்?அ.தி.மு.க.,வுக்கு எதிராக, வலுவான கூட்டணி அமைக்க ஆசைப்படும் தி.மு.க., தலைமை, திட்டமிட்டே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாக, அறிவாலய வட்டாரம் கூறுகிறது.ஆனால், தி.மு.க.,வையும், - அ.தி.மு.க.,வையும் ஒருசேர விமர்சித்து வரும் பா.ம.க., தரப்போ, இந்த சந்திப்புக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்க விரும்புவதாக தெரியவில்லை.தே.மு.தி.க.,வின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் தி.மு.க., தலைமை, அக்கட்சியுடனான பேச்சுக்கு உதவுமே என்ற நோக்கில் தான், ராமதாசை சந்திக்க, தன் கட்சி நிர்வாகியான செல்வகணபதிக்கு, பச்சைக்கொடி காட்டியிருப்பதாக, பா.ம.க., நம்புகிறது. அதன் வெளிப்பாடு தான், ராமதாஸ் பிடி கொடுக்காமல் பேசிய பேச்சு என்கிறது பா.ம.க., வட்டாரம்.

- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை: