வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

காதலை வைத்து காவிகள் தயாரிக்கும் வெடி குண்டு

முசுலீம் குடும்பங்களைப் பாருங்கள். பன்றி குட்டி போடுவதைப் போல் எட்டு பத்து பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுகிறார்கள். அதில் அழகான பையனாக பார்த்து மதரஸாவிற்கு தத்து கொடுத்து விடுகிறார்கள். மதரஸாவில் என்ன செய்கிறார்கள்? இந்தப் பையன்களுக்கு பெண்களை மயக்குவதற்கு பயிற்சியளிக்கிறார்கள். பின்னர், பைக், வாட்ச், மொபைல், போன் போன்றவற்றையும், நல்ல உடைகளையும் வாங்கிக் கொடுத்து அனுப்புகிறார்கள். அவர்களும் சோனு மோனு போன்ற பெயர்களோடு வாழும் இந்துப் பெண்களை அணுகுகிறார்கள். இந்தப் பையன்களின் அழகில் மயங்கும் இந்துப் பெண்களை மெல்ல  வலையில் வீழ்த்தி அவர்களை இசுலாமுக்கு மதம் மாற்றி பின் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். இசுலாத்தில் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமில்லையா? எனவே அடுத்தடுத்து இந்துப் பெண்களாக குறி வைத்து அவர்களை மதம் மாற்றி குழந்தைகள் பெற்று இசுலாமியர்களின் மக்கள் தொகையை உயர்த்த சதி நடக்கிறது. இந்த சதி திட்டத்திற்கு பாகிஸ்தான் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் காசு வருகிறதாம்….”

– லவ் ஜிஹாத் என்ற இல்லாத ஒரு ‘சதி’யைக் குறித்த இந்துத்துவ கும்பலின் விளக்கம் இது. தமிழ் நாட்டு சாதிக்கட்சிகள் (குறிப்பாக பா.ம.க) தலித்துகள் குறித்தும் தலித் இயக்கங்கள் குறித்தும் முன்னெடுத்த அவதூறு பிரச்சாரமும் இதுவே.
இந்துக்கள் தெய்வமாக போற்றும் குடும்பப் பெண்களை இசுலாமிய பயங்கரவாதிகள் கவர்ந்து செல்வதால் இந்து சனாதன தர்மமே நிலைகுலைந்து போகிறது என்கிற குற்றச்சாட்டு சமீப காலங்களில் நடக்கும் பல்வேறு பகுதியளவிலான மதக் கலவரங்களுக்கான முன் தயாரிப்பாக உள்ளது. இத்தனைக்கும் லவ் ஜிஹாத் என்கிற கருத்துருவாக்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வடக்கு கேரளத்திலும் கடலோர தென் கருநாடகத்திலும் தேவலோக வதந்தியாக முளைவிடத் துவங்கிய போது விசாரித்த போலீசார், இதில் கடுகளவும் உண்மையில்லை என்பதை உறுதி செய்திருந்தனர். கேரளத்திலும் கருநாடகத்திலும் லவ் ஜிஹாத்தை வைத்து சரியாக கல்லா கட்ட முடியாத இந்துத்துவ கும்பல் தற்போது அதையே கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து வட மாநிலங்களில் கலவரங்களைத் தூண்டி வருகின்றது.
லவ் ஜிஹாத் உண்மையில்லை என்பது வெட்டவெளிச்சமாக இருக்கும் போது, ‘கலப்பு’த் திருமணங்களை வைத்து எப்படி இந்துத்துவ கும்பலால் கலவரங்களைத் தூண்ட முடிகிறது?
இதை அறிந்து கொள்ள நாம் ’ஆபரேஷன் ஜூலியட்டை’ பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். குலைல்(gulail) மற்றும் கோப்ரா போஸ்ட்(Cobrapost) இணைய பத்திரிகைகள் இணைந்து நடத்திய இரகசியப் புலனாய்வின் பெயர் தான் “ஆபரேஷ்ன் ஜூலியட்”.
cobrapost-newslaundry
இப்பத்திரிகைகளின் செய்தியாளர்கள் இந்துத்துவ முகாமுக்குள் தைரியமாக ஊடுருவி லவ் ஜிஹாதை முன்வைத்து நடத்தப்படும் கலவரங்களுக்காக எப்படித் தயாரிப்புகள் செய்கிறார்கள், இதை எப்படி தேர்தலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது போன்ற விவரங்களை அம்பலப்படுத்தியுள்ளனர்.
இந்த இரகசிய விசாரணையின் விவரங்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கின்றன.
கேள்வி 1: ஒரு முசுலீம் இளைஞனும் இந்துப் பெண்ணும் காதல் கலப்பு மணம் புரிவதை இந்துத்துவ கும்பல் எப்படி மோப்பம் பிடிக்கிறது?
”இங்கே நிறைய வக்கீல்கள் சுயம் சேவகர்கள் (ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்) தான். அவர்கள் திருமண பதிவு அலுவலகத்திலும் மாஜிஸ்டிரேட் கோர்ட்டிலும் ஏதேனும் கலப்புத் திருமணம் பதிவாகிறதா என்பதை கவனித்து வருவார்கள். திருமணத்திற்கு பதிவு செய்தவர்களின் பெயர் முகவரி போன்ற விவரங்களையும், சம்பந்தப்பட்ட மணமக்களின் சார்பாக வக்கீல்கள் யாராவது இருந்தால் அந்த விவரத்தையும் எங்களிடம் தெரிவித்து விடுவார்கள். பின் நாங்கள் ஒரு 50, 60 பேர்கள் கொண்ட அணியாக கிளம்பிச் செல்வோம்”.  -சஞ்சை அகர்வால், பாரதிய ஜனதா நகராட்சி உறுப்பினர். முஸாபர்பூர் கலவரத்தில் சங்க பரிவார பயங்கரவாத குழுக்களின் சார்பில் களத்தில் தளபதியாக செயல்பட்டவர்.
கலப்புத் திருமண பதிவுக்கான ”சிறப்பு திருமணச் சட்டத்தின்” படி திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் பதிவாளர் அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் தங்களது விவரங்களை திருமண நாளுக்கு முப்பது நாட்களுக்கு முன்னரே எழுதி வைக்க வேண்டும். இந்த நாட்களில் குறிப்பான ஆட்சேபணைகள் ஏதும் இல்லை என்றால் தான் திருமணத்தை பதிவு செய்ய முடியும். இந்த கட்டத்திலேயே மதக் கலப்புத் திருமணம் செய்யவிருப்பவரின் விவரங்களை அறிந்து கொள்ளும் இந்துத்துவ கும்பல் களத்தில் இறங்கி விடுகிறது.
Sanjay-Agarwal-operation juliet
இரகசிய புலனாய்வு வீடியோவில் சஞ்சய் அகர்வால்
மணமகனின் மேல் ஆள் கடத்தல், கற்பழிப்பு வழக்கு போடுவது பெண்ணின் குடும்பத்தாரை வைத்து ஆட்கொணர்வு மனுபோடுவது என்று சட்ட ரீதியாகவே மேல் கையெடுக்கிறார்கள். வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த பின், தனது சம்மதத்தோடு தான் திருமணம் நடந்தது என்று பெண் வாக்குமூலமே கொடுத்தாலும், வழக்கு முடியும் வரை பெண்ணை அவளது பெற்றோருடன் செல்லுமாறு அறிவுருத்துகிறது நீதிமன்றம். ஒரு சில வழக்குகளில், இந்துத்துவ கும்பலின் வேலையைத் தனது சொந்த வேலையாகவே வரித்துக் கொள்ளும் நீதிமன்றம் பெண்ணுக்கு அறிவுரைகள் சொல்லி அவளை கணவனிடமிருந்து பிரித்து வீட்டாருடன் அனுப்பி வைக்கிறது.
இந்துத்துவ கும்பலின் பின்னணியில் அரசு, நீதித் துறை, அமைப்பு பலம் மற்றும் அரசியல் நோக்கங்கள் இருக்கும் அதே வேளையில், காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பவர்களின் பின்புலத்தில் அவர்களைக் காப்பாற்ற எவரும் இருப்பதில்லை.
கேள்வி 2: கலப்புத் திருமணம் பற்றிய தகவல் அறிந்து கொண்ட பின் இந்துத்துவ கும்பலின் செயல்பாடுகள் என்ன?
”நாங்கள் அந்தப் பகுதியில் சிறு சிறு கூட்டங்கள் நடத்துவோம். நம்முடைய பெண்ணை முசுலீம் பையன் தூக்கிட்டுப் போயிட்டான் என்றும் இதே மாதிரி நிறைய இந்துப் பெண்களைத் தூக்கிட்டுப் போயிருக்காங்கன்னும் மக்களுக்குச் சொல்வோம். இப்ப அந்தப் பகுதியில் இருக்கும் பெண்ணோட சாதியைச் சேர்ந்தவங்க திரண்டு வருவாங்க”
“தேர்தலுக்கு முன்னாடி என்றால் இந்த மாதிரி நிறைய கூட்டங்கள் நடக்கும். நானே அந்த மாதிரி கூட்டங்களில் பேசியிருக்கிறேன். நான் போனதும் இப்படிப் பேசுவேன் – “நண்பர்களே, நம்முடைய நாடு மிகப் பெரிய அபாயத்தை எதிர் நோக்கியிருக்கிறது என்று சொல்வேன். இதை தடுக்க நாம் மோடியைக் கொண்டு வர வேண்டும். ஏனென்றால், இந்த நாட்டிற்கு இந்துத்துவம் தேவையாய் இருக்கிறது என்பதை விளக்குவேன். இந்த முசுலீம் பசங்க நம்ம பொணணுங்களை கடத்திட்டு போறாங்க அப்படின்னு சொல்வேன். இந்த இந்த ஊரிலேர்ந்து இந்த இந்த பெண்கள் இப்படி கடத்தப்பட்டிருக்காங்கன்னு அடுக்குவேன். இந்தப் பெண்களை மீட்கனும் – லவ் ஜிஹாத்தை எதிர்த்து போரிடனும் அப்படின்னு சொல்லுவேன். மாடுகளைக் கூட வெட்றாங்கன்னு சொல்லி இதுக்கெல்லாம் ஒரே தீர்வு மோடி தான் அப்படின்னு பேசியிருக்கேன்”  –  சஞ்சைஅகர்வால்
Sangeet-Som-operation-juliet
இரகசிய புலனாய்வு வீடியோவில் சங்கீத் சோம்
பெண்ணின் குடும்பத்தார்கள் தரப்பிலிருந்து ஒரு கடத்தல் வழக்கை காவல் துறையில் பதிவு செய்து நீதிமன்றத்தின் உதவியோடு பெண்ணை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். அதற்குப் பின் பெண்ணின் குடும்பத்தார் வழக்கை எப்படிக் கையாள வேண்டும், எந்த வழக்கறிஞரை வைத்துக் கொள்வது என்று அவர்களின் மொத்த நடவடிக்கைகளையும் இந்துத்துவ கும்பலே இயக்குகின்றது. இதன் பின் சம்பந்தப்பட்ட பெண் அனுபவிக்கவுள்ள உளவியல் சித்திரவதைகள் சொல்லி மாளாது. இதோ இந்துத்துவ கும்பலின் சொந்த வார்த்தைகளிலேயே அதைப் பார்க்கலாம் –
“நாங்கள் அந்தப் பெண்ணை சென்டிமென்டலாக மிரட்டுவோம். உன்னோட அப்பா செத்துப் போயிடுவாரு.. அம்மா தூக்கில தொங்கிடுவாங்க… உன்னோட அண்ணன் சமூகத்துக்கு முன்னே அவமானத்தோட வாழ பயந்து தற்கொலை செய்துக்குவான் அப்படின்னு சொல்வோம்” -சங்கீத் சோம், உத்திரபிரதேச மாநிலம் சார்தான சட்டமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ., முஸாபர்பூர் கலவரத்தின் மூளை.
என்னதான் காதல் உண்மையாகவும் உறுதியாகவும் இருந்தாலும், பெரும்பாலான இளம் பெண்கள் இந்த உளவியல் துன்புறுத்தல்களில் வீழ்ந்து விடுகிறார்கள். கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது இந்துத்துவ கும்பலின் வக்கீல் படை தயாரித்தளித்த கதையை அட்சரம் பிசகாமல் ஒப்பிக்கிறார்கள்.
கேள்வி 3: ஒருவேளை, இந்துத்துவ குண்டர்கள் கட்டவிழ்த்து விடும் அத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு அந்தப் பெண் காதலில் உறுதியாக இருந்தால்?
அந்தப் பெண்ணுக்கு தற்காலிக நினைவுப் பிறழ்வு (temporary amnesia) ஏற்படுத்தும் மருந்துகளைக் கொடுத்து அவளை மனநல ஆலோசனை மையத்திற்கு (Counselling Center) அனுப்புவோம் என்று திமிராக கோப்ராபோஸ்ட் நிருபரின் இரகசிய கேமராவுக்கு முன் சொல்கிறார் எர்ணாகுளத்தில் செயல்படும் ஹிந்து உதவி மையத்தைச் சேர்ந்த சிஜித். மேற்படி ஆலோசனை மையத்தில் இந்துத்துவ நிபுணர்கள் இசுலாத்தைப் பற்றியும், இசுலாமியர்களைப் பற்றியும் இதம் பதமாக எடுத்துச் சொல்லி புரியவைப்பார்கள்.
ஒருவேளை அந்தப் பெண் இந்த தாக்குதல்களையும் தாங்கிக் கொண்டு தனது காதலில் உறுதியாக இருந்தால்?
Sanjiv-Balyan-operation juliet
இரகசிய புலனாய்வு வீடியோவில் சஞ்சீவ் பல்யான்
”ஆலோசனை மையத்திலிருந்து அந்தப் பெண் நீதி மன்றத்திற்கு செல்லும் போது, நாங்கள் சொல்வது போன்ற வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் கொடுத்து நாங்கள் சொல்லும் பையனைக் கல்யாணம் செய்து கொள்ள மறுத்தால் நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும் போது அவளையும் அவள் திருமணம் செய்து கொண்டிருக்கும் முசுலீம் கணவனையும் கொன்று போட்டு விடுவோம் என்று மிரட்டி அனுப்புவோம்” என்கிறார் கேரளாவின் இந்து ஒற்றுமை மையத்தைச் சேர்ந்த ரவீஷ் தந்த்ரி.
கேள்வி 4: சரி இந்த அநியாயங்கள் எல்லாம் சட்டத்தின் ஆட்சி நடப்பதாக சொல்லப்படும் ஒரு நாட்டில் இவ்வளவு துணிச்சலோடு செய்ய எப்படி முடிகிறது?
”நான் எங்க அமைப்பில் இருக்கும் மாணவர்களிடம் பேசும் போது அவர்களை போலீசில் சேரச் சொல்லி அறிவுறுத்துவேன். ஏன்னா… நாளைக்கு நமக்கு ஏதாவது உதவி தேவைப்படும் போது அங்கே நம்ம கார்யகர்த்தர்கள் (செயல்வீரர்கள்) இருக்கனும் இல்லையா. இங்க இருக்கிற போலீசு கான்ஸ்டபிள்களில் அறுபது சதவீதம் நம்ம சுயம் சேவகர்கள் தான்” என்கிறார் மங்களூரைச் சேர்ந்த பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் கனேஷ் குமார்.
இது மட்டுமின்றி, அரசாங்கத்தின் பல்வேறு துறைகளிலும் குறிப்பாக நீதித் துறையிலும் ஊடுருவியுள்ளனர் இந்துமதவெறி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் தேசத்தின் பொது மனசாட்சியாக பார்ப்பன இந்துமதவெறியின் விசமப் பிரச்சாரங்கள் செல்வாக்கு செலுத்தும் நிலையில் ஊடுருவும் அவசியம் கூட தேவைப்படுவதில்லை. நிதிஷ் கட்டாரா கௌரவக் கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கும் தூக்கு தண்டனை அளிக்க வேண்டிய தேவையில்லை என்ற தீர்ப்பை வழங்கிய அதே உச்ச நீதிமன்றம் தான், தேசத்தின் மனசாட்சியை சாந்தி செய்ய போதிய சாட்சியங்கள் இல்லாத நிலையிலும் அப்சல் குருவைத் தூக்கிலேற்றியது.
காதல் திருமணங்களை முன்னறிந்து கொள்வதோடு, குறிப்பிட்ட பகுதியில் பல மதவெறிக் கூட்டங்கள் நடத்தி சாதி இந்துக்களைத் திரட்டி தேசத்தின் மனசாட்சியை ஏற்கனவே இந்துத்துவ கும்பல் வடிவமைத்து விட்ட நிலையில் விசாரணைக்கு வரும் வழக்கில் தீர்ப்பு நியாயமாக இருக்கும் என்பதையும் வழக்கின் போக்கு நியாயமான திசையில் செல்லும் என்பதையும் நம்பும் அளவுக்கு நாம் வெள்ளேந்திகளா என்ன?
இந்துப் பெண்களை காப்பாற்றுவது, இந்து பாரம்பரியத்தைக் காப்பாற்றுவது என்கிற முகாந்திரங்களோடு இந்துத்துவ கும்பலின் சார்பாக திரட்டப்பட்டு கலவரங்களில் ஈடுபடுத்தப்படும் குண்டர் படையில் அந்தந்த வட்டார ஆதிக்க சாதியினர் பிரதானமாகவும் ஓரளவு அளவு தலித்துகளும் உள்ளனர். முசுலீம்களுக்கு எதிரான கலவரங்களின் பலனை உடனடியாக தேர்தல் வெற்றிகளாக பாரதிய ஜனதாவும், வணிக ரீதியில் அந்தந்த வட்டாரங்களில் இந்துத்துவ கும்பல்களுக்குப் படியளக்கும் இந்து பனியா வர்த்தகர்களும் அறுவடை செய்து கொள்கின்றனர்.
அதே வேளையில், ஒரு பெண்ணுக்கு நடக்கும் திருமணத்தில் அவளது விருப்பம் பிரதானமானதல்ல என்பதே இந்துத்துவ நீதி. இதன் படி பெண்ணின் குடும்பத்தார்கள் தங்களது சாதி, மதம் மற்றும் வர்க்க நிலைக்கு ஏற்ற மனமகனுக்கு பெண்ணை விற்கும் உரிமை நிலைநாட்டப்படுகிறது. தவிற ஒரு திருமணத்தால் இணையவுள்ள ஆணும் பெண்ணையும் தவிர்த்து பார்ப்பனிய இந்து பொதுபுத்தியே தீர்மானகரமான காரணி என்பதை நிலைநாட்டுகிறார்கள்.
இது கலவரத்தில் இந்துத்துவ கும்பலால் திரட்டப்பட்டு ஈடுபடுத்தப்படும் தலித்துகளுக்கு சொல்லப்படும் மறைமுக செய்தி. ”ஒரு பெண்ணை பெற்று சீரோடும் சிறப்போடும் வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கே அவளது திருமணத்தைப் பற்றி முடிவெடுக்கும் உரிமை உண்டு” என்கிற ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிக் கொடுத்த இந்த பார்ப்பனிய சூத்திரத்தைத் தான் காடுவெட்டி குருவும், கொங்கு யுவராஜும் மிரட்டலோடு வழிமொழிகின்றனர்.
காதல் திருமணத்திற்கு கோட்பாடு என்ற அளவிலும் நடைமுறையிலும் முஸ்லீம் அடிப்படைவாதிகளும் எதிர்ப்பாகவே இருக்கிறார்கள். காதலர் தினத்தை இவர்களும் கூட போட்டி போட்டுக் கொண்டு எதிர்க்கிறார்கள். பொது இடங்களில் ஆணையும் பெண்ணையும் பார்த்தால் தட்டிக் கேட்பது விரட்டி அனுப்புவது என்பதை முசுலீம் மதவெறியர்களும் செய்கிறார்கள். அதே நேரம் முஸ்லீம் மதவாதிகளின் காதல் எதிர்ப்பு என்பது வெறுமனே மதம் என்ற அளவில் நிற்கும் போது இந்துமதவெறியரின் எதிர்ப்பு என்பது வாழ்வா, சாவா என்ற விதியாக முற்றுப்பெறுகிறது. காரணம் இந்துமதவெறி என்பது வெறுமனே முட்டாள்தனங்களை மட்டும் கொண்ட ஒரு மதவெறியல்ல. அதன் பின்னே ஆதிக்க சாதி, அரசு, போலீசு, நீதிமன்றம், ஊடகம் என்று அனைவரும் திரண்டு நிற்கின்றனர்.
முசுலீம்களைக் கொன்று குவிக்க காதல் கலப்புத் திருமணத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் கும்பல் வடித்துக் கொடுத்திருக்கும் ஆயுதமும் ஆதிக்க சாதியினர் , சாதிமறுப்புத் திருமணத்தை முன்வைத்து தலித்துகளை கொன்று குவிக்கும் ஆயுதமும் வேறு வேறு அல்ல. காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு என்பது ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கும் அவளது ஜனநாயகத் தேரிவு உரிமைக்கும் மட்டும் விரோதமானதில்லை – காதல் திருமணங்களின் மூலம் சாதி / மத கலப்பு நிகழ்வதையும் இது தடுக்கிறது. இவ்வழியில் இனத் தூய்மை மற்றும் சாதித் தூய்மையைப் பேணுவதும், ஏற்றத்தாழ்வான படிநிலை சமூக அமைப்பைத் தக்க வைத்துக் கொள்வதுமே ஆர்.எஸ்.எஸ் கும்பலின் தந்திரம்.
உண்மையில் இனத் தூய்மை பேசும் மத, மொழி மற்றும் சாதி ஆதிக்க அரசியல் ஆன்மா ஒன்று தான். கருப்பு சட்டையும் ஓங்கிய கையுமாகத் திரிந்த சீமானின் முருக பக்த அவதாரமும், காஞ்சிபுரத்தின் பெளர்ணமி இரவில் வன்னிய மேடையில் முழங்கும் காடுவெட்டி குருவும், பிரவீன் தொகாடியாவும் தமது தோற்றங்களிலும், பேசும் பேச்சுக்களிலும் வேறு வேறானவர்களாகத் தெரிந்தாலும் – இவர்களை இயக்கும் ஆதாரமான அரசியல் நோக்கு ஒன்று தான்.
ஜனநாயக சக்திகளும் மக்களும் இதை உணர்ந்து கொண்டு களத்தில் வீழ்த்தாத வரை இந்த நாட்டிற்கு விடிவு காலம் இல்லை.
– தமிழரசன்  vinavu.com

கருத்துகள் இல்லை: