புதன், 3 பிப்ரவரி, 2016

தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பேராசிரியர் அன்பழகன் உறுதி!

vikatan.com : தி.மு.க தலைவர் கருணாநிதியைவிட வயதில் மூத்தவரான பொதுச் செயலாளர் க.அன்பழகன், கடந்த சில வாரங்களாக திருப்பூர், வேலூர், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். நடக்க சிரமப்பட்டாலும் பேச்சில் சுணக்கம் இல்லை. கடந்த 29-ம் தேதி திருச்சி தேவர் மன்றத்தில் தி.மு.க எம்.பி-யும், தி.மு.க கொள்கைப்பரப்புச் செயலாளருமான திருச்சி சிவாவின் 60-வது பிறந்தநாள் விழாவும் அவருடைய, ‘நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள்’, ‘மேனகாவின் நம்பிக்கை’, சிவாவின் பிள்ளைகள் எழுதிய, ‘அன்புள்ள அப்பா’ உள்ளிட்ட புத்தகங்கள் வெளி யீட்டு விழாவில் அன்பழகன் கலந்துகொண்டார். இதையே திருச்சி சிவா பெருமையாகக் குறிப்பிட்டார். ‘‘தலைவர் கலைஞருக்கு 93 வயது. பேராசியருக்கு வயது 94. தலைவரும் பேராசிரியரும் சாலை வழியே பயணிக்கிறார்கள். மக்களைச் சந்திக்கிறார்கள். இதேபோலவே தளபதி ஸ்டாலினும் செயல்படுவது பெருமையாக இருக்கிறது” என்றார் திருச்சி சிவா.


பொதுவாக பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கொடுப்பதைத் தவிர்ப்பவர் அன்பழகன். அவரை வலியச் சந்தித்து கட்டாயப்படுத்திய பிறகு, சில கேள்விகளுக்கு பதில் சொன்னார்.
‘‘இந்த வயதிலும் சளைக்காமல் சுற்றுப்பயணம் செய்து வருகிறீர்களே?”

‘‘நான் சில கூட்டங்களில் பங்கேற்கிறேனே தவிர, சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. மேற்கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது.”

‘‘இன்றைய இளைஞர்கள் தீவிரமாகச் செயல்படும் சமூக வலைதளங்களைப் பார்க்கிறீர்களா?”

‘‘ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட இணையதளங்களில் வருவதை மட்டும் உண்மை என நம்புகிறார்கள். அவை மட்டுமே முழு உண்மைகள் அல்ல.”

‘‘தி.மு.க மறுபடியும் உயிர் பெற்றுவிடக் கூடாது என்றும் தி.மு.க-வுக்கு எதிரானவர்களுக்கு வாக்களியுங்கள் என்றும்  சோ பேசியிருக்கிறாரே?”

‘‘அப்படி ஒருவர் இருக்கிறாரா? அவர் சொல்வது ஒருக்காலும் நடக்காது!”

‘‘இந்தத் தேர்தல் கருணாநிதிக்கும் உங்களுக்கும் முக்கியமான தேர்தலாக இருக்குமா?”

‘‘நான் இந்தத் தேர்தலில் நிற்கவில்லை. அப்புறம் எப்படி எனக்கு முக்கியமான தேர்தலாக இருக்கும்?”

‘‘அ.தி.மு.க ஆட்சி எப்படிச் செயல்படுகிறது?”

‘‘இந்த அம்மையார் எப்போது மக்களுக்காகச் செயல்பட்டார்? சென்னையில் வெள்ளம் வந்தது. அப்போது ஜெயலலிதா மக்களுக்கு என்ன செய்தார்? வெள்ளம் ஏற்படுவதற்கு, அ.தி.மு.க., ஆட்சிதான் காரணம். அதிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் அ.தி.மு.க அரசு முழுமையாக ஈடுபடவில்லை. நிவாரணங்களையும் ஒழுங்காகக் கொடுக்கவில்லை. இதனால், ஒட்டுமொத்த அதிருப்தியில் மக்கள் இருக்கிறார்கள்.”
‘‘அ.தி.மு.க-வின் நான்கரை ஆண்டுகால சாதனையை சொல்ல 36 நாட்கள் வேண்டும் என சட்டமன்றத்தில் முதல்வர் சொல்கிறாரே?”

‘‘அ.தி.மு.க-வினர் சாதனை விளக்கக் கூட்டம் நடத்துகிறார்கள். அதில், எந்தச் சாதனையையும் சொல்வதில்லை. தமிழகத்தில், தி.மு.க கூட்டங் களுக்கு அதிக அளவுக்கு பொதுமக்கள் வர ஆரம்பித்திருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டால்தான், எதிர்க் கட்சியினர் நடத்தும் கூட்டங்களுக்கு மக்கள் அதிக அளவில் வருவர். அ.தி.மு.க மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்திருப்பது வெளிப் படையாகத் தெரிகிறது. தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து அ.தி.மு.க அகற்றப்படும். இது காலத்தின் கட்டாயம். மக்களின் விருப்பம்.”

‘‘தமிழகத்தில் காங்கிரஸை 1967-ல் தி.மு.க வீழ்த்தியதைப்போல் தி.மு.க., அ.தி.மு.க இரண்டையும் விரட்டி அடிப்போம் என  மக்கள் நலக் கூட்டணியும், பி.ஜே.பி., பா.ம.க உள்ளிட்ட கட்சிகளும் சொல்கின்றனவே?”

‘‘மதுரையில் வைகோ பேசியதைவைத்து கேட்கிறீர்களா? அவர் கட்சியே இப்போது இல்லை. அவர் பேச்சு என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?”

‘‘ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்ந்து நீதிப் போராட்டம் நடத்திவருகிறீர்கள். அந்த வழக்கின் மேல்முறையீடு தீர்ப்பு எப்படி இருக்கும்?”

‘‘வழக்கின் முடிவு யாரும் எதிர்பார்க்காத முடிவாக இருக்கும்.”

- சொல்லிவிட்டு, 94 வயதிலும் உற்சாகமான பயணியாக கும்பகோணம் கிளம்பினார் அன்பழகன்.

- சி.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

கருத்துகள் இல்லை: