புதன், 3 பிப்ரவரி, 2016

எரிவாயு குழாய் .....தமிழக விவசாயிகளுக்கு ஏன் இந்த அநீதி?

vikatan.com இந்தியா முழுவதும் இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் கொண்டு கெயில் நிறுவனம் செய்து வருகிறது. இதற்காக கொச்சியில் இருந்து தமிழகம் வழியாக பெங்களூருவிற்கு, குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
செல்வதற்கான திட்டத்தினை மத்திய அரசின்
கேரளாவில் இருந்து நேரடியாக கர்நாடகா வழியாக இந்த திட்டத்தை செயல்படுத்தியிருக்க முடியும்,  அப்போதைய தமிழக அரசு சற்று விழிப்புடன் இருந்திருந்தால். ஆனால் வழக்கம் போல மாநில அரசு தமிழர்களை கைவிட்டு விட, இப்போது மத்திய அரசு விவசாயிகள் தலையில் மிளகாய் அரைத்து விட முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளது.


உண்மையை சொல்லப் போனால், தமிழகத்துக்கு இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லை. ஆனால் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தால், கோவை மாவட்டத்தில் 16 கிராமங்கள், திருப்பூரில் 22 கிராமங்கள்,  ஈரோடு மாவட்டத்தில் 16 கிராமங்கள், நாமக்கல் மாவட்டத்தில் 9 கிராமங்கள், சேலத்தில் 29 கிராமங்கள், தர்மபுரியில் 27 கிராமங்கள், கிருஷ்ணகிரியில் 18 கிராமங்கள் வழியாக பெங்களூருவுக்கு எரிவாயு கொண்டு செல்ல குழாய்கள் பதிக்கப்பட வேண்டும்.
இந்த பைப் லைன் மொத்தம் 871 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படுகிறது. இதில் 501 கிலோமீட்டர் கேரளாவுக்குள்ளும்,  310 கிலோமீட்டர் தொலைவு தமிழகத்திற்குள்ளும்,  இந்த திட்டத்தால் மொத்த பயனையும் அடையப் போகும் கர்நாடகாவுக்குள் வெறும் 60 கிலோ மீட்டர் தொலைவுதான் பயணிக்கிறது.

சுமார் ரூ. 3,400 கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டமான இந்த கொச்சி-குட்டநாடு- பெங்களூரு-மங்களூரு வரையிலான எரிவாயு குழாய் கொண்டு செல்லும் இந்த திட்டத்தால் சுமார் 5 ஆயிரத்து 500 விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் ஒரு ஆய்வு சொல்கிறது. தமிழகத்துக்கு எந்த பலனும் தராத இந்த திட்டத்தால்,  தமிழகத்தின்  தேசிய நெடுஞ்சாலையையொட்டியுள்ள பகுதியில் எரிவாயு குழாய் பதிக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளை கெயில் நிறுவனம் முடுக்கி விட்டிருந்தது. ஆனால் விழித்துக் கொண்ட தமிழக விவசாயிகள்,  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இப்போதைய தமிழக அரசு எரிவாயு குழாய் பதிக்கத் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து,  கெயில் நிறுவனம் அதில் வெற்றியும் கண்டுள்ளது. 

எரிவாயு பதிக்கும் திட்டத்தை தமிழகத்துக்கு கொண்டு வராமலேயே,  வேறு பாதையில்  கர்நாடகத்துக்கு கொண்டு சென்றிருக்க முடியும். ஆனால் தமிழகத்தில் மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்த அப்போதைய தி.மு.க அரசு, வழக்கம் போல் இந்த திட்டத்துக்கும் அனுமதி கொடுத்து விட்டு,  கண்ணை மூடிக் கொண்டு இருந்து விட்டது. தற்போது அதற்கான விலையை தமிழக விவசாயிகள்தான் கொடுக்க வேண்டியதுள்ளது. அதாவது இந்த திட்டத்துக்காக எடுக்கப்படும் நிலத்தின் மதிப்பில்  40 சதவீதம் மட்டும் மத்திய அரசு வழங்குமாம். அப்படியென்றால் மீதி தொகைக்கு விவசாயிகள் என்ன செய்வார்கள்?

காவிரியில் இருந்து தாமிரபரணி கரையோரம் வரை எல்லாவிதத்திலும் நொந்து போய் கிடக்கும்  தமிழக விவசாயிகளிடம், கர்நாடகா பலனடையப் போகும் இந்த  திட்டத்துக்காக, அடி மாட்டு விலைக்கு நிலத்தைக் கொடு என்பது எந்த விதத்தில் நியாயம்?
ஜல்லிக்கட்டுக்கு தீர்ப்புக்கு பிறகு , தமிழக விவசாயிகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ள தீர்ப்பு இது. தமிழக விவசாயிகளுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி... அந்த நீதிதேவனுக்கே வெளிச்சம்!

கருத்துகள் இல்லை: