வியாழன், 4 பிப்ரவரி, 2016

தான்சானியா மாணவி ...இனவெறி தாக்குதல் அல்ல. கர்நாடக அமைச்சர் விளக்கம்

தான்சானியா மாணவி மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு நிர்வாணமாக
ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை கர்நாடக உள்துறை மந்திரி மறுத்துள்ளார். பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற விபத்து ஒன்றில் 35 வயது பெண் ஒருவர் இறந்தார். அவரது கணவர் காயம் அடைந்தார். இந்த காரை குடிபோதையில் ஓட்டி வந்த சூடானை சேர்ந்த வரும் காயம் அடைந்தார். இதையடுத்து இறந்து போன பெண்ணின் உறவினர்கள், அந்த வழியாக வந்த கார் ஒன்றை வழி மறித்து தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்கள் அந்த காரில் இருந்த தான்சானிய நாட்டைச் சேர்ந்த 21 வயது மாணவி ஒருவரை கீழே இழுத்து அடித்து உதைத்தனர். இது தொடர்பாக அந்த பெண் காவல்துறையில் அளித்துள்ள புகாரில் “நாங்கள் சென்ற காரை மக்கள் மறித்தார்கள். உடனே காரை விட்டு நாங்கள் கிழே இறங்கினோம். அங்கு நிறைய மக்கள் கூடி நின்றனர். அருகில் ஒரு காவலரும் நின்றார். நான் அவரிடம் என்ன பிரச்சனை என்று கேட்டேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை. உடனே அந்த கும்பல் என்னையும் நண்பர்களையும் அடிக்க தொடங்கினார்கள்.


என்னுடைய உடைகளை கிழித்து, உடலில் ஒன்றுமே இல்லாமல் செய்துவிட்டனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள நாங்கள் பேருந்தில் ஏறினோம். ஆனால் டிரைவர் பேருந்தை எடுக்கவில்லை. பயணிகளும் எங்களை பிடித்து கிழே தள்ளிவிட்டார்கள். பேருந்தில் இருந்த ஒரு இளைஞர் எனக்கு டி-சர்ட் கொடுத்தார். இதற்காக அவரையும் அந்த கும்பல் அடித்தது. இறுதியில் நாங்கள் ஒரு கடைக்குள் தஞ்சம் அடைந்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

கும்பலால் தாக்கப்பட்ட மாணவி பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் இளநிலை வர்த்தக மேலாண்மை (பி.பி.எம்.) படித்து வருகிறார். இது குறித்து புகார் அளிக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு பிறகே நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக உள்துறை மந்திரி ஜி. பரமேஷ்வரா, “மாணவி மீது நடத்தப்பட்டது இனவெறி தாக்குதல் கிடையாது. அந்த விபத்து நடந்ததற்கு நிகழ்த்தப்பட்ட எதிர்வினை. ஆரம்ப கட்ட விசாரணையில் அந்த பெண்ணின் ஆடைகள் கிழிக்கப்பட்டு நிர்வாணமாக கொண்டு செல்லப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

பெங்களூரில் சுமார் 12 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களை காப்பது அரசின் கடமை. இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நடக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: