nisaptham.com :அலுவலக நண்பர்கள் சிலர் சேர்ந்து குறும்படம் எடுக்கலாம் என்றார்கள்.
நாயகன், இயக்குநர், தயாரிப்பாளர் ஆகிய மூன்று பேரும் ஆந்திரக்காரர்கள்.
அதனால் தெலுங்கில் எடுப்பதாகச் சொன்னார்கள். என்னைக் கதை சொல்லச்
சொன்னார்கள். இயக்குநர் என்றால் சினிமா இயக்குநர் என்று நினைத்துக் கொள்ள
வேண்டியதில்லை. லட்ச ரூபாய் கொடுத்து ஒரு கேமிரா வாங்கியிருக்கிறார்.
இப்பொழுதெல்லாம் கேமிரா வைத்திருந்தால் இயக்குநர்தானே? அப்படித்தான்
இயக்குநர் ஆகியிருந்தார். நாயகனாக முடிவு செய்யப்பட்டவர் திருமணமாகாத
பையன். தலையில் குச்சி குச்சியாக முடியை நட்ட வைத்திருந்தார். அதனால் அவர்
நாயகன். தயாரிப்பாளர் ஒரு இனாவானா. நடுவில் ஒன்றிரண்டு காட்சிகளில்
என்னையும் காட்டிவிடுங்கள் என்று சொல்லியிருந்தார். ஒத்துக் கொண்டு
தயாரிப்பாளராக்கியிருந்தார்கள்.
‘இவுரு செமயா கதை எழுதுவாப்ல’ என்று யாரோ உடான்ஸ் விட்டிருக்கிறார்கள்.
அதனால் நான் கதாசிரியர். இயக்குநர் என்றால் கெத்து காட்ட வேண்டுமல்லவா?
அதனால் ராஜமெளலியின் சித்தப்பா பையன் என்கிற கோதாவில் திரிந்தார். என்ன
சொன்னாலும் ‘சரியில்லை’ என்றார். நமக்கு அவ்வளவுதான் அறிவு. ‘டைரக்டர்
சார்...இது எனக்கு கதை எழுதுகிற அறிவு இல்லை’ என்று சொல்லி ஒதுங்கிக்
கொண்டேன். படத்தை எடுத்து முடித்துவிட்டார்கள். இருபது நிமிடங்கள்.
அலைபேசியில் பதிவு செய்து கையில் கொடுத்து பார்க்கச் சொன்னார்கள்- மூன்று
பேரும் சுற்றிலும் நின்று கொண்டிருந்தார்கள்- அசையக் கூட முடியவில்லை.
காதிலும் கண்களிலும் வெர்ச்சுவல் ரத்தம் கொட்டியது எனக்கு மட்டும்தான்
தெரியும். ஒருவேளை என்னுடைய கதையாக இருந்திருந்தால் உண்மையாகவே ரத்தம்
கொட்டியிருக்கக் கூடும்.
‘பிரமாதம்...பிரமாதம்’ என்றேன் - தெலுங்கு பிரமாதம்.
நகைச்சுவைக்காக இப்படி எழுதினாலும் இத்தகைய முயற்சிகளை நக்கலடிக்க
வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். தொழில்நுட்பம் எல்லாவற்றையும்
சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கிறது. யார் வேண்டுமானாலும் முயற்சி செய்து
பார்க்க முடிகிறது. கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் இப்படித்தான். எழுத
வருகிறவர்களால் சர்வசாதாரணமாக ஒரு புத்தகத்தை வெளியிட்டுவிட முடிகிறது.
படம் எடுக்க விரும்புகிறவர்களால் எளிதாக ஒரு குறும்படத்தை உருவாக்கிவிட
முடிகிறது. ஆனால் இந்த எளிமை ஒருவிதத்தில் அபாயகரமானதும் கூட. புத்தகம்
வெளியானவுடன் ‘இவ்வளவுதானா?’ என்று முக்கால்வாசிப் பேருக்கு சிறுகச்
சிறுகச் சேர்த்து வைத்திருந்த அத்தனை ஆர்வமும் வடிந்து போய்விடுகிறது.
முதல் புத்தகத்துக்குப் பிறகு காணாமல் போய்விடுகிறார்கள். அதேதான்
குறும்படத்திலும். சினிமா ஆர்வமிருப்பவர்களில் முக்கால்வாசிக்கும்
அதிகமானவர்கள் ஒரு குறும்படம் எடுத்துப் பார்த்துவிட்டு
அமைதியாகிவிடுகிறார்கள்.
போகிறவர்கள் போகட்டும்.
தீராத ஆர்வத்துடன் தொடர்ந்து இயங்குகிறவர்களுக்கு தொழில்நுட்பம் ஒரு
வரப்பிரசாதம். இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருப்பது ஆரோக்கியமான
போக்கு. ஞாயிற்றுக்கிழமைகளின் காலை வேலையில் சென்னை, பெங்களூர் மாதிரியான
பெருநகரங்களில் ஒரு சுற்று சுற்றினால் கேமிராவோடு அலைகிறவர்கள் நிறையப்
பேர்கள் கண்களில் படுகிறார்கள். மடிவாலா மார்கெட், கலாசிபாளையம் போன்ற
இடங்களில் நள்ளிரவில் யாரோ படம் எடுத்துக் கொண்டிருப்பதைப்
பார்த்திருக்கிறேன்.
எத்தனையோ கனவுகள்- நடிக்கிறவர்கள், இசையமைக்கிறவர்கள், இயக்குநர்கள் -
ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு. எல்லாக் கனவுகளுக்கும் ஒரு வடிவம்
கிடைக்கட்டும்.
குறும்படங்களைப் பார்ப்பதும் கூட ஒரு விதத்தில் சுவாரசியமானதுதான். நூறு
கவிதைகளில் ஒரு நல்ல கவிதையைக் கண்டுபிடிப்பதைப் போலவோ, பத்து சிறுகதைகளில்
ஒரு நல்ல சிறுகதையை அடைவதைப் போலவோ, நிறையப் படங்களிலிருந்து ஒரு நல்ல
படத்தைக் கண்டுபிடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. நேற்று ஒரு இணையத்தளத்தின்
இணைப்புக் கிடைத்தது. (Shortfundly)
குறும்படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஒரே இடத்தில் சேர்த்து வைக்கும்
வேலையைச் செய்கிறார்கள். மொழி வாரியாகவும், குறும்படங்களின் தளம் உள்ளிட்ட
ஏகப்பட்ட வகைகளில் பிரித்து அடுக்கியிருக்கிறார்கள். இப்படியான வேறு
தளங்களும் இருக்கக் கூடும். ஆனால் இந்தத் தளத்தின் வடிவமைப்பு
பிடித்திருந்தது. நேற்று சில குறும்படங்களைப் பார்த்தேன். இன்றைக்கும் சில
படங்களைக் குறித்து வைத்திருக்கிறேன்.
யாம் பெற்ற இன்பம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக