புதன், 3 பிப்ரவரி, 2016

கார்னியா கண் குறைபாடு...இந்தியாவில் ஏன் வேதனை?


bbc.com/tamil :கார்னியா எனப்படும் கருவிழிப்படலத்தின் மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வை இழப்பை தடுப்பதில் இலங்கை உலகநாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் கருவிழிப்படலங்களை இறந்தவர்களிடம் இருந்து பெற்று அவற்றை தேவைப்படுபவர்களுக்குப் பொருத்துவதில் இலங்கை தன்னிறைவு பெற்றிருப்பது மட்டுமல்ல, தனக்கு மீதமான கண்ணின் கருவிழிப்படலங்களை வேறு நாடுகளுக்கும் கொடுத்து உதவுகிறது.
ஆனால் இலங்கையின் அண்டைநாடான இந்தியா இதில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. லட்சக்கணக்கானவர்கள் கார்னியா கிடைக்காமல் பார்வையின்றி தவிக்கும் நிலைமை இந்தியாவில் இன்னமும் நீடிக்கிறது. இதன் பின்னணி காரணிகளை பிபிசி தமிழோசையிடம் விளக்கினார் சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் எம் ராதாகிருஷ்ணன்.

கார்னியா என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் விழியின் கருவிழிப்படலம் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தவர்களுக்கு, இறந்தவரின் கருவிழிப்படலத்தை எடுத்துப் பொருத்தும் கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வையை மீண்டும் பெற்றுக் கொடுக்க முடியும்.
உலக அளவில் கண்பார்வை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு கோடி. அவர்களில் சுமார் நான்கு சதவீதம் பேர் கருவிழிப்படலம் சேதமடைந்த காரணத்தால் கண்பார்வை பறிபோனர்வகள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த நான்கு சதவீதமானவர்களுக்கு கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வையை மீண்டும் கொடுக்க முடியும். ஆனால் அதற்குத் தேவைப்படும் கருவிழிப்படலத்துக்கு உலக அளவில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
கண்ணின் கருவிழியின் மேல் கண்ணின் முன்புறமாக அமைந்துள்ள கண்ணின் இந்த கருவிழிப்படலம் ஒருவர் மரணம் அடைந்த ஆறு மணி நேரத்துக்குள் அகற்றப்பட்டால் அதை தேவைப்படும் ஒருவருக்கு பொருத்தி அவருக்கு பார்வையைக் கொடுக்க முடியும். ஒருவர் இறந்த பிறகும் கூட அவரது உடலில் இருந்து ஆறுமணி நேரம் கழித்தும்கூட இந்த கருவிழிப்படலம் அகற்றப்பட முடியும்.
உடலின் மற்ற உறுப்புகளை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மாற்றிப் பொருத்தும்போது அந்த உறுப்பை கொடையாக பெறுபவரின் உடல் புதிதாக பொருத்தப்பட்ட உடலுறுப்பை நிராகரிக்கும் ஆபத்து இந்த கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு இல்லை என்பது இதன் தனிச்சிறப்பு.
அதைவிட முக்கியமாக, பெரும்பாலான நாடுகளில் ஒரு நாளைக்கு இயற்கையாக இறப்பவர்களின் கருவிழிகள் அகற்றப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்பட்டால் மிகச்சில தினங்களுக்குள்ளேயே கருவிழிப்படல பாதிப்பால் கண்பார்வை இழந்தவர்கள் அனைவருக்குமே கண்பார்வையை மீண்டும் கொடுத்துவிட முடியும் என்பதும் இதன் தனிச்சிறப்பு.
ஆனாலும் இந்த கருவிழிப்படலங்களுக்கு உலக அளவில் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் ஒரே ஒரு நாட்டில் மட்டும் அந்த நாட்டுக்குத் தேவையான கருவிழிப்படலங்கள் தாராளமாக கிடைப்பது மட்டுமல்ல, அவை மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த நாடு இலங்கை. கருவிழி மாற்று அறுவை சிகிச்சைத்துறையில் இலங்கை மிகவும் சிறப்பாக செயற்பட்டு வருகிறது.
இலங்கையில், இறப்பவர்களின் கண்களை தானமாக வழங்க ஏற்பாடுகளை செய்வதற்கான பல காரணங்களில் அப்படி செய்வதன் மூலம் மறுபிறவியில் தமக்கு சிறப்பான பார்வை கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் முக்கிய பங்காற்றுகிறது.
இலங்கையில், 5 பேரில் ஒருவர் தமது கார்னியா’ எனப்படும் கருவிழிப்படலத்தை தானமாக வழங்குவதாக உறுதிமொழி வழங்கியுள்ளதாக இலங்கை கண்தானச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அறக்கட்டளை நிறுவனம், 1961 ஆம் ஆண்டில் ஹட்சன் சில்வா என்ற இளம் மருத்துவரால் தொடங்கப்பட்டது.
தமது கருவிழிப்படலத்தை தானமாக கொடுக்க வேண்டும் என்ற வேட்கை, இலங்கையில் அதற்கான தேவையை தீர்த்துள்ளதுடன், மீதமானவை ஏனைய நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2014 இல், இலங்கையிலிருந்து சீனாவிற்கு 1000 கருவிழிப்படலங்கள் தானமாக கொடுக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானுக்கு 850, தாய்லாந்திற்கு 25, மற்றும் ஜப்பானுக்கு 50 உம் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையின் அண்டை நாடான இந்தியாவிலோ, இன்னமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் மனித கருவிழிப்படலங்கள் கிடைக்காமல் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலைமையே இன்றுவரை தொடர்கிறது.
இந்தியாவில் தினந்தோறும் இயற்கையில் மரணமடையும் பல்லாயிரக்கணக்கானவர்களின் கருவிழிப்படலங்களை உரிய முறையில் அறுவடை செய்து பயன்படுத்தினால் கருவிழிபடல பாதிப்பால் ஏற்படும் பார்வை இழப்பை ஒரே வாரத்திற்குள் நீக்கிவிட முடியும் என்று கூறும் மருத்துவர் ராதாகிருஷ்ணன், ஆனால் அதற்குத் தேவையான அளவுக்கு விழிப்புணர்வு இல்லை என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: