வெள்ளி, 6 ஜூன், 2014

கலைஞர் டிவி-யின் ரூ.200 கோடி பரிவர்த்தனையில் எனக்குத் தொடர்பில்லை - ஆ.ராசா

டிபி குழுமம் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி அளித்த விவகாரத்திற்கும் தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்தியத் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார் ஆ.ராசாவின் ஜாமீன் மனு மீதும், குற்றப்பதிவு மீதும் வாதாடிய அவரது வழக்கறிஞர் மனு சர்மா, 2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டு வழக்கில் ஆ.ராசா ஜாமீன் பெற்றுள்ளார் என்றும் அவர் தனது அரசியல் பணிகளுக்கிடையே நீதிமன்ற நடைமுறைகளிலும் பங்கேற்று வருகிறார் என்று கூறினார். ஆ.ராசா. திமுக உறுப்பினர் என்பதும், கட்சி கலைஞர் தொலைக்காட்சி என்ற ஒன்றைத் துவங்க திட்டமிட்டதும் தற்செயல் நிகழ்வு என்றும், இவருக்கும் இந்த ரூ.200 கோடி பரிவர்த்தனைக்கும் தொடர்பிருப்பதற்கான சாட்சியங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் மேலும் வாதாடினார். "பணப்பரிவர்த்தனை நடந்திருப்பது எனக்குத் தெரியும் என்று அமலாக்கப்பிரிவினர் எப்படி கூறமுடியும்?
எனக்கு எப்படி அதுபற்றித் தெரியும்? நான் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது மகிழ்ச்சியற்ற ஒரு தற்செயலே" என்று ஆ.ராசா நீதிமன்றத்தில் கூறினார்.

மேலும் ஆ.ராசா வழக்கறிஞர் வாதாடுகையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் சாட்சியாக வாக்குமூலம் அளிக்க ஆ.ராசாவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்நிலையில் அவரை கைது செய்தால் அந்த நடைமுறைகளில் இடையூறு ஏற்படும் என்றும் கூறினார்.

டிபி குழுமம் தொலைத் தொடர்பு உரிமங்களைப் பெறுவதற்காக கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி லஞ்சம் அளித்ததாக அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்திருந்தது. 10 தனிநபர்கள் மற்றும் 9 நிறுவனங்கள் மீது அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: